வங்கதேசத்தில் வரலாறு காணாத போராட்டம் உச்சம் தொட்டுள்ளது. பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா விலகக் கோரி நடந்து வரும் போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பிரதமர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


பற்றி எரியும் வங்கதேசம்: நிலைமை மோசமாவதற்கு ஒரு சில மணி நேரத்திற்கு முன்புதான், தலைநகர் டாக்காவில் இருந்து பாதுகாப்பான இடத்திற்கு ஷேக் ஹசீனா சென்றுள்ளார். பெரும் நெருக்கடி எழுந்துள்ள நிலையில், பிரதமர் பதவியில் இருந்து அவர் விலகியுள்ளார்.


இதுகுறித்து வங்கதேச உயர்மட்ட அதிகாரிகள் கூறுகையில், "அவரும் (ஷேக் ஹசீனா) அவரது சகோதரியும் கணபாபனிலிருந்து (பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லம்) பாதுகாப்பான இடத்திற்குச் சென்றுள்ளனர். மக்களிடம் பேசும் நோக்கில் தனது உரையை பதிவு செய்ய அவர் விரும்பினார். ஆனால், அவருக்கு அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை" என்றார்கள்.


இதற்கிடையே, இடைக்கால அரசை ராணுவம் அமைக்க உள்ளதாக வங்கதேச ராணுவ தளபதி வேக்கர்-உஸ்-ஜமான் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அமைதியாக இருக்கும்படி போராட்டக்காரர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


ஷேக் ஹசீனா உயிருக்கு ஆபத்தா? டாக்காவில் நிலைமைையை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு விதிக்கப்பட்டது. ஆனால், அதை மீறி, தலைநகரில் உள்ள தெருக்களில் லட்சக்கணக்கான போராட்டக்காரர்கள் குவிந்தனர். பிரதமர் மாளிகையில் நுழைந்தனர்.


பிரதமர் அலுவலகத்திற்கு செல்ல முடியாத வகையில் போகும் பாதையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், சாலைகளில் அலைகடலாய் திகழ்ந்த போராட்டக்காரர்கள், அவற்றை உடைத்தெறிந்தனர். 4 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.


நேற்று நடந்த போராட்டத்தில் மட்டும் 98 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த மாதம், போராட்டம் தொடங்கியதில் இருந்து இதுவரை 300க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். வங்கதேசத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் இந்தியா வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 


இந்தியாவுக்கு நெருக்கமாக கருதப்பட்ட ஷேக் ஹசீனா, பதவி விலகி இருப்பது இந்திய - வங்கதேச உறவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது. பாகிஸ்தானுடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்த ஷேக் ஹசீனா, அமெரிக்காவுடன் பல்வேறு விவகாரங்களில் கருத்து வேறுபாடு நிலவி வந்தது. ஆனால், இந்தியாவுடனும் சீனாவுடனும் இணக்கமான உறவை பேணி வந்தார்.


ALSO READ | Bangladesh Violence Reason: 20 ஆண்டுகால பிரதமர் ஷேக் ஹசீனா ஒரே நொடியில் ராஜினாமா: வங்கதேச வன்முறைக்குக் காரணம் தெரியுமா?