Bangladesh Violence Explained: சுமார் 20 ஆண்டுகாலம் பிரதமராகவும் தொடர்ந்து 4ஆவது முறையாகவும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து இருந்த ஷேக் ஹசீனா தனது வங்கதேசப் பிரதமர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, நாட்டைவிட்டே தப்பி ஓடியிருக்கின்றார். இதற்குக் காரணம் வங்கதேசத்தில் நடந்துவரும் வன்முறை சம்பவங்கள்தான். 300-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு, 1000-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைவதற்குக் காரணமாக இருந்த வன்முறையின் பின்னணி என்ன? பார்க்கலாம். 


யார் இந்த ஷேக் ஹசீனா?


வங்கதேசத்தின் முதல் பிரதமர் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் (Sheikh Mujibur Rahman) மகள்தான் ஷேக் ஹசீனா. 1975-ல் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானின் உள்ளிட்ட குடும்பத்தினர் பெரும்பாலானோர் படுகொலை செய்யப்பட்ட பிறகு, ஐரோப்பாவில் இருந்த ஷேக் ஹசீனாவுக்கு வங்கதேசம் செல்லத் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்தியாவில் அரசியல் அடைக்கலம் புகுந்தார் ஷேக் ஹசீனா. 6 ஆண்டுகள் கழித்து அவாமி லீக் கட்சித் தலைவராக 1981-ல் வங்கதேசம் சென்று பொறுப்பேற்றார்.




19 முறை கொலை முயற்சி தாக்குதல்கள்


தொடர்ந்து ஷேக் ஹசீனா, வங்க தேசத்தில் 1996 முதல் 2001 வரை முதல்முறையாகப் பிரதமர் பதவி வகித்தார். இவர்தான் சுதந்திரத்துக்குப் பிறகு, 5 ஆண்டுகால ஆட்சியை நிறைவுசெய்த முதல் பிரதமர் ஆவார். ஏற்கெனவே இவர்மீது மொத்தம் 19 முறை படுகொலை முயற்சி தாக்குதல்கள் நடந்துள்ளன.  2004-ல் நடந்த கையெறி குண்டு தாக்குதலில், அவரின் செவித்திறன் அடியோடு குறைந்தது.


தொடர்ந்து 2009 முதல் 2024 வரை இவரே பிரதமராக இருந்தார். உலகில் அதிக காலம் ஒரு நாட்டை ஆண்ட பெண் என்ற பெருமை அவருக்கே இருந்தது. எனினும் தற்போதைய போராட்டத்தால் நான்காவது முறையாகத் தொடர்ந்து பிரதமர் ஆகியும், நாட்டே விட்டே தப்பி ஓட வேண்டிய அவலம் அவருக்கு ஏற்பட்டுவிட்டது. ராணுவ ஹெலிகாப்டரில் தப்பிச்சென்ற ஷே ஹசீனா, இந்தியா அல்லது லண்டனில் அடைக்கலம் புகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


வன்முறைக்கு என்ன காரணம்?


நாட்டில் கிளர்ந்து எழுந்த வன்முறையால் நேற்று மட்டும் (ஞாயிற்றுக்கிழமை) 98 பேர் உட்பட, மொத்தம் 300 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருமே ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ய வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையை மட்டுமே வலியுறுத்தி வந்தனர்.


அரசுப் பணிகளுக்கு இட ஒதுக்கீடு


இதற்கு முக்கியக் காரணமாக இருந்தது ஏற்கெனவே அரசுப் பணிகளுக்கு இருந்த ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு இருந்த இட ஒதுக்கீட்டு முறையை மீண்டும் கொண்டு வந்ததுதான்.




சர்ச்சைக்குரிய இந்த இட ஒதுக்கீட்டு முறை, பாகிஸ்தானுக்கு எதிரான 1971 சுதந்திரப் போரில் பங்குபெற்ற ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணிகளில் 30 சதவீதம் வரை இடங்களை ஒதுக்குகிறது. எனினும் இந்த இட ஒதுக்கீடு பாகுபாடானது என்றும் பிரதமர் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் ஆதரவாளர்களுக்கு ஏற்ற வகையில் கொண்டு வரப்பட்டதாகவும் போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர். குறிப்பாகப் போராட்டத்தில் அதிக அளவிலான இளைஞர்களே பங்குபெற்றனர்.


இந்த இட ஒதுக்கீட்டு முறையை நீக்கிவிட்டு, தகுதி அடிப்படையிலான முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று அவர்கள் கோரினர்.


ரத்து செய்யப்பட்டு, மீண்டும் கொண்டு வரப்பட்ட ஒதுக்கீடு


ஏற்கெனவே போருக்குப் பிறகு 1972-ல் இருந்து இந்த இட ஒதுக்கீடு அமலில் இருந்தாலும் 2018-ல் ரத்து செய்யப்பட்டது. இதற்குத் தெரிவிக்கப்பட்ட எதிர்ப்பு, பின்பு போராட்டமாக மாறி, கலவரமாக வெடித்தது. இதுகுறித்து ஹசீனா வெளிப்படையாகவே பேசியது, போராட்டத்தின் தீவிரத்தை அதிகப்படுத்தியது.


அரசுக்கு எதிரான இயக்கம்


இட ஒதுக்கீட்டு எதிராகத் தொடங்கிய போராட்டம், அரசுக்கு எதிரான இயக்கமாக மாறியது. வெறும் இளைஞர்கள் மட்டுமல்லாமல், திரைப் பிரபலங்கள், இசையமைப்பாளர்கள், ஏன் ஆடை உற்பத்தியாளர்கள்கூட இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு அளித்தனர்.  ஹசீனா பதவி விலக வேண்டும் என்று ராப் பாடல்கள், சமூக வலைதளப் பிரச்சாரங்களில் குரல்கள் வலுத்தன.




வன்முறை தொடங்கியது எப்போது?


கடந்த மாதத்தின் கடைசியில், நாட்டின் மிகப்பெரிய பல்கலைக்கழகமான டாக்கா பல்கலைக்கழகத்தில் மாணவ போராளிகளுக்கும் காவல்துறைக்கும் ஏற்பட்ட மோதலில் வன்முறை தொடங்கியது.


மொத்தம் 39 மாவட்டங்களில், அரசு அதிகாரிகள், ஆளும் கட்சியான அவாமி லீக் அலுவலகங்கள், பிற அரசு அலுவலகங்கள் தாக்கப்பட்டு சூறையாடப்பட்டன. காவல் நிலையங்களே தாக்கப்பட்ட சம்பவமும் நடந்தது. பல மாவட்டங்களில் அவாமி லீக் தலைவர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் மோதல் வெடித்தது. அதேபோல அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளும் அலுவலகங்களும் சூறையாடப்பட்டன. சாலைகள் மறிக்கப்பட்டன.




நாட்டே விட்டே பிரதமர் தப்பி ஓட்டம்


இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை (நேற்று) மாலையில் இருந்து தேசிய அளவிலான ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இன்று (திங்கள் கிழமை) முதல் 3 நாட்களுக்கு நாடு முழுவதும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. இணைய வசதிகள், சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டன. ஆனாலும் போராட்டம் ஓயவில்லை. தொடர்ந்து இன்று (ஆக.5) ’தலைநகர் டாக்காவை நோக்கிப் போராட்டம்’ என்ற பேரணியை மாணவர்கள் அறிவித்தனர். 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர்  இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட நிலையில், நாட்டே விட்டே பிரதமர் ஹசீனா தப்பிச் சென்றுள்ளார்.


கடந்த முறை தேர்தலில் போட்டியிடுவதையே புறக்கணித்த பிரதான எதிர்க் கட்சியான வங்கதேச தேசியவாதக் கட்சி, ராணுவத்தின் உதவியுடன் வங்க தேசத்தில் இடைக்கால ஆட்சியை அமைக்க உள்ளது.


எந்த ஓர் அரசாக, எவ்வளவுதான் அதிகாரத்தின் உச்சியில் இருந்தாலும், மக்கள்தான் நாட்டின் முதல் நாயகர்கள் என்பதை மறந்தால் என்ன ஆகும் என்பதற்கு இதுவே சிறந்த உதாரணமாக மாறி இருக்கிறது.