பானி பூரி விற்பனைக்கு நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில் தடை விதிக்கப்பட்டுள்ளதாம். முதல் வரியைப் படித்தவுடன் பானிபூரி பிரியர்கள் பலரும் நிம்மதி பெருமூச்சுவிட்டிருப்பீர்கள் தானே. அது இருக்கட்டும் ஏன் பானி பூரிக்கு தடை விதிக்கப்பட்டது என்பதைப் பார்ப்போம். நேபாளத்தில் சமீப காலமாக காலரா பரவி வருகிறதாம். காத்மாண்டூவில் காலரா அதி வேகமாகப் பரவி வருகிறது. இதனையடுத்து சுகாதார அமைச்சகம் பிறப்பித்த உத்தரவின் பேரில் பானி பூரி விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதாம்.
காலரா பாதிப்பு ஏன் ஏற்படுகிறது?
காலரா என்பது கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் நீரிழப்பை ஏற்படுத்தும், ஒரு பாக்டீரியா தொற்று ஆகும். தக்க சமயத்தில் இதற்கான சிகிச்சையளிக்கப்படாவிட்டால் இது மரணத்திற்கு வழிவகுக்கிறது. விப்ரியோ காலரா என்னும் பாக்டீரியாவினால் பாதிக்கப்பட்ட உணவு மற்றும் தண்ணீரை உட்கொள்வதன் மூலம் காலரா ஏற்படுகிறது. சுகாதாரமான சுற்றுச்சூழல் இல்லாத போது, காலரா நோயின் அச்சுறுத்தல் அதிகரிக்கிறது. தெரு விற்பனையாளர்களால் விற்கப்படும் உணவுகள் மற்றும் பானங்களில் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகள் இருக்க வாய்ப்புகள் உள்ளது. அசுத்தமான தண்ணீரின் பயன்கொண்டு வளர்க்கப்படும், காய்கறிகளும் பாதிக்கப்படுகின்றன. அசுத்தமான குட்டைகள் அல்லது அசுத்தமான குட்டைகளிலிருந்து பிடிபட்ட மீன்களும் தொற்றுநோயை ஏற்படுத்துகின்றன. ஒரு நபர் அசுத்தமான உணவு அல்லது தண்ணீரை உட்கொள்ளும்போது, அதிலுள்ள பாக்டீரியாக்கள் வெளியிடும் நச்சுதன்மையின் காரணமாக கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்படுகின்றது. பாதிக்கப்பட்ட நபருடன் நேரடியாக தொடர்பு கொள்வதன் மூலம், காலரா நோய் பரவுவதற்கான சாத்திய கூறுகள் ஏதுமில்லை.
காலராவின் அறிகுறிகள் என்ன?
அதிகபடியான தாகம்.
விரைவான இதய துடிப்பு.
தோல் சேதம்
தொண்டை, வாய் மற்றும் கண் இமைகளில் ஈரப்பதம் இல்லாமல் இருப்பது.
தசைப் பிடிப்பு
தக்க சமயத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால், காலரா மரணத்திற்கு வழிவகுக்கிறது.
இவைதான் காலராவின் அறிகுறிகள்.
நோய் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை:
நேபாள சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், காத்மாண்டுவில் மட்டுமே 7 பேருக்கு காலரா ஏற்பட்டுள்ளது. இதுவரை நாடு முழுவதும் 12 பேருக்கு காலரா தொற்று ஏற்பட்டுள்ளது. அதனால் சுகாதாரமற்ற உணவு மூலமே பரவும் என்பதால், அந்தவகை உணவுவகைகளை தடை செய்துள்ளோம். அதனாலேயே காத்மாண்டுவில் தற்காலிகமாக பானி பூரி கடைகளுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தேசிய தொற்றுநோய் தடுப்பு துறை இயக்குநர் சுமானலால் தாஸ், காத்மாண்டுவில் 5 பேருக்கு, சந்திரகிரி முனிசிபல் நிர்வாகத்தில் ஒருவர், புதனில்காந்தா முனிசிபலில் ஒருவர் என காத்மாண்டு பள்ளத்தாக்கில் மட்டுமே 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் சுக்ராராஜ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றார். இதுவரை 2 பேர் நோயில் இருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பினர் என்றும் அவர் தெரிவித்தார்.