மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அடுத்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் மதுரையில் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். இதுவரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் முதன்முறையாக தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது.
பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இருந்த அ.தி.மு.க.வின் ஆட்சியின்போது கூட ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் தமிழ்நாட்டில் நடத்தப்படவில்லை. ஆனால், தற்போது தமிழ்நாட்டில் முதன்முறையாக கூட்டம் நடத்தப்பட உள்ளதால் இந்த கூட்டம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
2016ம் ஆண்டு முதல் அமலில் இருந்து வரும் ஜி.எஸ்.டி. கவுன்சிலின் கூட்டம் பெரும்பாலும் வட இந்தியாவின் நகரங்களிலே நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அழைப்பை ஏற்று ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது.
முன்னதாக, 47வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் சண்டிகரில் நேற்றும், இன்றும் நடைபெற்று முடிந்தது. இந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் அனைத்து மாநில அதிகாரிகளும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பல்வேறு அத்தியாவசிய பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி உயர்த்தப்பட இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, எல்.இ.டி. விளக்குகள், கிரைண்டர் இயந்திரம், பேனா மை உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரியை உயர்த்துவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. விலை மாற்றத்தை அமல்படுத்துவதற்கான தேதி ஜூலை 18-ந் தேதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி. வரி உயர்வையடுத்து, வரும் ஜூலை 18-ந் தேதி முதல் பன்னீர், லஸ்ஸி, மோர், பேக் செய்யப்பட்ட தயிர், கோதுமை மாவு, மற்ற தானியங்கள், தேன், பப்பாளி, உணவு தானியங்கள், இறைச்சி மற்றும் மீன் ( உறைய வைக்கப்பட்டதை தவிர்த்து), வெல்லம் ஆகியவற்றின் விலையும் உயர உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்