வேலை தரவில்லை சம்பளம் மட்டுமே தருகிறார்கள் என்று தான் வேலை செய்யும் நிறுவனத்தின் மீது ஊழியர் ஒருவர் வழக்கு தொடுத்த சம்பவம்  பாடாய்ப்பட்டு வேலை செய்து சம்பாதிக்கும் மக்களை உச்சு கொட்ட வைத்துள்ளது.


சலிப்பான வேலை


ஊழியர்கள் தாங்கள் பணிபுரியும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது மிகவும் பொதுவான நிகழ்வாகும். ஆனால் இப்படி ஒரு காரணத்திற்காக வழக்கு பதிவு செய்வது, நெட்டிசன்கள் இடையே சலசலப்பை உருவாக்குகிறது. ஒரு ரயில்வே ஊழியர் தனது நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர்ந்த காரணத்தினால்தான், இது தற்போது பெரும் பேசுபொருள் ஆகியுள்ளது.


அவருக்கு நிறுவனம் வேலை எதுவும் தராமல் சம்பளம் மட்டும் தருவதால் நிறுவனத்தின் மீது வழக்குத் தொடுத்ததாக கூறப்படுகிறது. "ஒன்றும் செய்யாத" "சலிப்பான வேலை" என்று அவர் இதனை குறிப்பிடுகிறார்.



1.3 கோடி ரூபாய் சம்பளம்


டப்ளினில் உள்ள ஐரிஷ் ரெயிலில் நிதி மேலாளராகப் பணிபுரியும் டெர்மட் அலாஸ்டர் மில்ஸ், £105,000 ($1,20,000 க்கு மேல்) சம்பளமாக பெரும் வருடாந்திர வேலையில், சாப்பிடுவது, குடிப்பது மற்றும் செய்தித்தாள்கள் படிப்பது என்று பொழுதைக் கழிப்பதாக கூறுகிறார். இந்திய ரூபாய் மதிப்பில் வருடத்திற்கு 1.3 கோடி ரூபாய் சம்பளமாக பெறுகிறார். இவ்வளவு சம்பளம் வாங்கி வேலைக்கு சென்று எதையும் செய்யாமல் தனது நாட்களைக் கழிப்பதாகப் பகிர்ந்து கொண்டுள்ளார். "வாரத்திற்கு ஒருமுறை வேலை செய்ய வேண்டும் என்று ஏதாவது கிடைத்தால் கூட நான் மகிழ்ச்சி அடைவேன்" என்று மில்ஸ் பணியிட உறவுகள் ஆணையத்திடம் (WRC) கூறியதாக டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்: Gujarat, Himachal Pradesh election result LIVE: குஜராத், இமாச்சலில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் பாஜக; தடுமாறும் காங்கிரஸ்; சோடை போன ஆம் ஆத்மி..!


ஒர்க் ஃபிரம் ஹோம் உண்டு


"நான் வீட்டிலிருந்தும் வேலை செய்கிறேன், அலுவலகத்திற்கும் செல்கிறேன் - இரண்டு நாட்கள் வீட்டில், மூன்று நாட்கள் அலுவலகத்தில்," என்று பணியிட உறவுகள் ஆணையத்தில் நடந்த விசாரணையின் போது அவர் வெளிப்படுத்தியதாக டெய்லி மெயில் மேலும் கூறியது. விசாரணையின்போது அவர் தனது பணியிடத்தில்தான் என்ன செய்வேன் என்ற அன்றாட நடவடிக்கைகள் குறித்தும் பேசினார். மேலும், முழு சூழ்நிலையும் தன்னை தனது சக ஊழியர்களிடமிருந்து தனிமைப்படுத்தியதாக அவர் கூறினார்.



அலுவலகத்தில் என்ன செய்வார்?


"நான் அலுவலகத்திற்குச் சென்றால், காலை 10 மணிக்கு உள்ளே செல்வேன். நான் போகும்போதே இரண்டு செய்தித்தாள்கள் வாங்கிச்செல்வேன், தி டைம்ஸ் மற்றும் தி இன்டிபென்டன்ட். அதோடு ஒரு சாண்ட்விச் வாங்குகிறேன். நான் எனது அறைக்குள் சென்று, எனது கணினியை ஆன் செய்து, மின்னஞ்சல்களைப் பார்ப்பேன். பணியுடன் தொடர்புடைய மின்னஞ்சல்கள் எதுவும் இருக்காது. பணியிடத்தில் இருந்து செய்திகள் இல்லை, தகவல்தொடர்புகள் இல்லை, சக ஊழியர் தொடர்புகள் இல்லை. நான் தனியாக உட்கார்ந்து செய்தித்தாள் வாசிப்பேன், பிறகு வாங்கிச்சென்ற சாண்ட்விச்சை சாப்பிடுவேன்.


பின்னர் காலை 10.30 மணியளவில், பதில் தேவைப்படும் மின்னஞ்சல் இருந்தால், அதற்கு நான் பதிலளிப்பேன். அதனுடன் தொடர்புடைய வேலை இருந்தால், அந்த வேலையைச் செய்வேன், ”என்று அவர் பகிர்ந்து கொண்டார். பணியிட உறவுகள் ஆணையத்தில் நீதிபதி பெனிலோப் மெக்ராத், வழக்கு தொடர்பாக ஆஜராகுமாறு முதலாளியின் தரப்பைக் கேட்பதாகப் பகிர்ந்து கொண்டார். இந்த வழக்கு விசாரணை இன்னும் நடந்து வருவதாகவும், அடுத்த விசாரணை பிப்ரவரியில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.