அமெரிக்காவுக்கு சென்றுள்ள எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். பெண்கள் என்றாலே வீட்டில் இருந்தபடி சாப்பாட்டை சமைத்து தர வேண்டும். அதிகமாக பேசக்கூடாது என ஆர்எஸ்எஸ் விரும்புகிறது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
"பெண்கள் மீதான அணுகுமுறை அபத்தமாக உள்ளது"
டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி, "இந்தியாவை ஒரே எண்ணம் கொண்ட நாடாக ஆர்எஸ்எஸ் நம்புகிறது. அதே நேரத்தில் இந்தியாவை பன்முக எண்ணங்கள் கொண்ட நாடாக காங்கிரஸ் கருதுகிறது. இது ஒரு போர்" என்றார்.
மக்களவை தேர்தல் முடிவுகள் குறித்து பேசிய ராகுல் காந்தி, "தேர்தல் முடிவுகள் வெளியான சில நிமிடங்களில், பாஜக, இந்தியப் பிரதமர் மீதான பயம் போய்விட்டது. இது பெரும் சாதனை. இது ராகுல் காந்தியின் சாதனையோ காங்கிரஸ் கட்சியின் சாதனையோ அல்ல.
ஆனால், அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதலை நாங்கள் ஏற்கப் போவதில்லை என்பதை இந்திய மக்கள் உணர்ந்துள்ளனர். அதிக எண்ணிக்கையிலான இந்திய ஆண்களின் பெண்கள் மீதான அணுகுமுறை அபத்தமாக உள்ளது. ஆண்களைப் பற்றி நாம் நினைப்பதைப் போலவே பெண்களையும் நினைக்க வேண்டும். அந்த மனநிலை வர வேண்டும்.
அமெரிக்காவில் ராகுல் காந்தி பேசியது என்ன?
பெண்களை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தில் அடக்கி வைக்க பாஜக/ஆர்எஸ்எஸ் நினைக்கிறது. அவர்கள் வீட்டில் இருக்க வேண்டும். உணவு சமைக்க வேண்டும். அதிகம் பேசக்கூடாது என அவர்கள் நினைக்கிறார்கள். பெண்கள் எதைச் செய்ய விரும்பினாலும் அதை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.
மேற்குலக நாடுகளில் வேலைவாய்ப்புப் பிரச்சனை உள்ளது. இந்தியாவிலும் வேலைவாய்ப்பு பிரச்சனை உள்ளது. ஆனால், உலகின் பல நாடுகளில் வேலைவாய்ப்பு பிரச்சனை இல்லை. சீனாவில் நிச்சயமாக வேலை வாய்ப்பு பிரச்சனை இல்லை.
வியட்நாமில் வேலை வாய்ப்பு பிரச்சனை இல்லை. எனவே, வேலையின்மையுடன் போராடாத இடங்கள் கிரகத்தில் உள்ளன. இதற்கு காரணம் இருக்கிறது. 1940கள், 50கள் மற்றும் 60களில் அமெரிக்காவைப் பார்த்தால், அவை உலகளாவிய உற்பத்தியின் மையமாக இருந்தன.
கார்கள், வாஷிங் மெஷின்கள், டிவிக்கள் என அனைத்துமே அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டன. உற்பத்தி அமெரிக்காவிலிருந்து வெளியே சென்றது. அது கொரியாவுக்குச் சென்றது. ஜப்பானுக்குச் சென்றது. இறுதியில், அது சீனாவுக்குச் சென்றது.
இன்று பார்த்தால், உலக உற்பத்தியில் சீனா ஆதிக்கம் செலுத்துகிறது. அப்படி என்ன நடந்தது? மேற்குலக நாடுகள், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் உற்பத்தி யோசனையை கைவிட்டு சீனாவிடம் ஒப்படைத்துள்ளன" என்றார்.