தமிழ்நாடு அரசின் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் விழாவை மதுரையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று  தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து நெல்லையில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி அட்டைகளை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டு 14 ஆயிரம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு மொத்தம் 727 கோடி ரூபாய் கடன் உதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ஏற்கனவே 302 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒரே நாளில் 54 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டிருக்கிறது. மாண்புமிகு ஆளுநர் தனக்கு கொடுக்கப்பட்ட பணியை தவற மீதி பணியில் இருப்பது போல தான் எல்லோரும் இருப்பார்கள் என்று நினைக்கிறார். அது உண்மையல்ல, தவறு. 


சனாதன தர்மத்தை பாடத்திட்டத்தில் வைக்கவில்லை என்றும், வீர சாவர்க்கர் வரலாறு இல்லையே அந்த இடத்தில் வ.உ.சி வரலாறு இருக்கிறது என்றும் தமிழ்நாடு ஆளுநர் வருத்தப்படலாம். சாவர்க்கர் அந்தமான் சிறையில் இருந்த போது மூன்று முறை மன்னிப்பு கடிதம் கொடுத்தும் அது ஏற்கப்படாத நிலையில் நான்காவது முறை மன்னிப்பு கடிதம் கொடுத்து வெளியே வந்த சாவர்க்கர் பின் நாட்களில் பிரிட்டிஷ் அரசின் சாதனையை எடுத்துச் சொல்ல மாதம் 67 ரூபாய் சம்பளம் வாங்கியதாக வரலாறு உள்ளது. காட்டி கொடுப்பவர்களும், மன்னிப்பு கேட்ட  சாவர்க்கரின் வரலாற்றையும் எப்படி பிஞ்சு உள்ளங்களுக்கு சொல்லிக் கொடுக்க முடியும்.  நம் சுதந்திர போராட்ட வீரர்களெல்லாம் தியாகம் செய்தவர்கள். தமிழ்நாடு பாடத்திட்டத்தில் சேர்க்க முடியாது. அவருக்கு ஒரு வருத்தம் இருக்கலாம். தமிழ் நாட்டில் படிப்பில் நம்பர்  1 ஆக இருக்கிறது. 18 துறை சார்ந்த கல்வித்துறையில் 13 இல் தமிழ்நாடு தான் முதலிடம் பிடித்துள்ளது. ஆளுநர் மனதில் என்ன இருக்கிறதென்றே தெரியவில்லை. 


உலகில் தோன்றிய முதல் 3 மொழிகளில் தமிழ் ஒன்று. இந்தியாவில்  தோன்றிய தமிழ், இந்தியாவில் ஆட்சி மொழியல்ல. தமிழகத்தில் மட்டும் தான் ஆட்சி மொழியாக இருக்கிறது. ஆனால் தமிழ் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, கனடா  உட்பட 7 நாடுகளில் ஆட்சி மொழியாக இந்தியாவில் தோன்றிய ஒரு இருக்குமேயானால் அது தமிழ்மொழி. அப்படியென்றால் எந்த மாநிலமாக இருந்தாலும் கண்டிப்பாக தமிழ் படிக்க வேண்டும் என்று சொல்ல ஏன் மறுக்கின்றனர்? புதிய கல்விக் கொள்கை மூலமாக மீண்டும் ஆர் எஸ் எஸ் மற்றும் சனாதன சித்தாந்தத்தை கொண்டுவர பார்க்கிறார்கள். 10 சதவீத வகுப்பினர் மட்டும் படிக்க வேண்டும். 90% பேர் படிக்கக் கூடாது எனவும் ஆளுநர் ஆசைப்படுகிறார். அத்துடன் தமிழ்நாடு அரசு பள்ளிகள் குறித்தும், தமிழ்நாடு அரசின் பாடத்திட்டங்கள் குறித்து வசைபாடுவதை இதோடு ஆளுநர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.