வளர்ச்சியை நோக்கி மதுரை நகர்வு

Continues below advertisement


மதுரை மாவட்டம் கோயில் நகரமாக இருந்து வருகிறது. மாவட்டத்தில் உழைக்கும் மக்கள் அதிமாக வசித்து வருகின்றனர். தெருவெங்கும் வடைக் கடைகளும், பரோட்டாக் கடைகளும் நிறைந்திருக்கிறது. ஆனால் மக்கள் தொகைக்கு ஏற்ப தொழில் வாய்ப்புகள் வளர்ச்சியடையாமல் இருந்து வருகிறது. ஏற்கனவே இருந்த பல தொழிற்சாலைகள் கூட சில இடங்களில் பூட்டு போடப்பட்டுவிட்டது. இந்த சூழலில் மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை, ஐ.டி., பார்க், மெட்ரோ ரயில் திட்டம் போன்றவை வருவது ஊக்கம் தரும் டானிக்காக மாறியுள்ளது. இந்த சூழலில் இதற்கு ஏற்றார் போல் மதுரை மாநகர் முழுவதும் பல இடங்களில் புதிய பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மதுரையை சுற்றி சிப்காட் உள்ளிட்ட தொழில் மையங்கள் அமையவுள்ளது. இது மதுரை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக மாறியுள்ளது.


மேலூர் மற்றும் காரியாபட்டியில் தொழில் நிறுவனங்கள்


மதுரையில் ( Phase -1) முதல் சிப்காட்டானது, மேலூர் பகுதியில் திருச்சி - மதுரை நெடுஞ்சாலையில் உள்ள, வஞ்சிநகரம் எனும் கிராமத்தில் அமையவுள்ளது. வஞ்சிநகரத்தில் 278 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இதில் பூர்வாங்கம் பணிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஒப்புதலும் நிறைவுக் கட்டத்தை எட்டியுள்ளது. அதே போல் கூடுதலாக ( Phase -2) வஞ்சிநகரம் சிப்காட்டிற்கு 322 ஏக்கர் கையகப்படுத்தப்பட உள்ளது. மொத்தம் மேலூர் தாலுகாவில் 600 ஏக்கருக்கு சிப்காட் நிறுவனம் கொண்டுவரப்பட உள்ளது. இந்த சிப்காட்களில் பிரதானமாக இருக்கப் போகும் நிறுவனம், தோல் பயன்படுத்தாமல் தயார் செய்யப்படும் பொருட்களாகும். இதில் காலணி, பைகள் போன்ற பொருட்கள் தோல் பயன்பாடு இல்லாமல் உருவாக்கப்படவுள்ளது.


மதுரையும் தொழில் வளர்ச்சி நடையில்


ஏற்கனவே பெரம்பலூரில் ஆயிரக்கணக்கான பெண்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கும்படியாக, இது போன்ற நிறுவனம் கோத்தாரி குழுமம் மூலம் கொண்டுவரப்பட்டது. அதே போல் கரூரிலும் ஆயிரக்கணக்கான நபர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கு வகையில், பல கோடி செலவில் நிறுவனம் கொண்டுவரப்படுகிறது. அது போல் கோத்தாரி நிறுவனம் மதுரையிலும் முக்கிய பங்குடன் முதலீடு செய்து தொழில் நிறுவனங்களை சிப்காட்டில் கொண்டுவர உள்ளது. கோத்தாரியின் கீழ் பல நிறுவனங்கள் உள்ள நிலையில், மேலூர் பகுதியில் அமையும் சிப்காட் நிறுவனங்களில் கோத்தாரி நிறுவனம் பல கோடி முதலீடு செய்ய வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் மேலூர் பகுதியில் சிப்காட் உருவாவது உருதி செய்யப்பட்டு அதற்கான கட்டுமான பணிகள் விரைவில் ஆரம்பிக்க உள்ளது. அதே போல் காரியாபட்டியில் 444 ஏக்கரில் சிப்காட் நிறுவனம் வரவுள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அதே போல் மதுரை மடீசியா எனும் அமைப்பு மேலூர் கஞ்சிராயன்பட்டி கிராமத்தில், தனியார் தொழில்நிறுவனங்களை கொண்டுவரவுள்ளது. அதில் சிறு தொழில் நிறுவங்கள் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மதுரை மாவட்டமே தொழில் வளர்ச்சி முன்னேற்ற மாவட்டமாக மாற வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.


மதுரை - தூத்துக்குடி காரிடார் மேம்பாடு அவசியம்


மேலும் இதுகுறித்து (Madurai Infra and Developments)-யின் தலைவர் MID பாலமுருகன் நம்மிடம் பேசினார்..," தென் மாவட்டங்கள் வளர்சியடைய மதுரை - தூத்துக்குடி தொழில்நிறுவன வழிப்பாதைகளை முழு வீச்சில் கொண்டு செல்ல வேண்டும். இது முக்கியமான் காரிடார். எனவே 140 கிலோ மீட்டர்களில் ஒவ்வொரு 30-45 கிலோ மீட்டர்களில் தொழிற்நிறுவன பூங்கா, தொழிற்நிறுவன எஸ்டேட்டுகள் கொண்டுவரவேண்டும். இது ஏற்கனவே இருந்த அரசு திட்டமிட்ட ஒன்று தான். இதனை முழு வீச்சில் கொண்டு சென்றால் தென்மாவட்டமே மிகப்பெரிய வளர்ச்சியடையும். இந்த பகுதியில் அரசு மற்றும் தனியார் புறம்போக்கு நிலம் உள்ளதால், இதில் நிலம் கையகப்படுத்துவது எழுமையாக இருக்கும். எனவே அரசு கவனத்தில் கொண்டு தொழில்வாய்ப்பை அதிகப்படுத்த இது போன்ற திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இதன் மூலம் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு வேலைக்காக செல்லும் நபர்கள் உள்ளூரிலே வேலை செய்ய முடியும்” என்றார்.