விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் வரும் 12ம் தேதி (சனிக்கிழமை) குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்வதற்கு பொது விநியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது.
பொது விநியோகத்திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு விழுப்புரம் மாவட்டத்தில் வருகின்ற 12.07-2025 அன்று ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகத்திலும், தனி வட்டாட்சியர் (கு.பொ)/ வட்ட வழங்கல் அலுவலர்களால் குறைதீர் முகாம் நடத்தப்படவுள்ளது.
இக்குறைதீர் முகாம்களில், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை / நகல் அட்டைகோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகளை வேண்டி முகாமில் கோரிக்கையினையும், கைபேசிஎண் பதிவு / மாற்றம் செய்தலுக்கான தனியான கோரிக்கை மனுவினையும், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் அங்கீகாரச்சான்று கோரும் கோரிக்கை மனுவினையும் பொதுவிநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்களையும், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களையும் குடும்ப அட்டைதாரர்கள் தனி வட்டாட்சியர் (கு.பொ)/ வட்ட வழங்கல் அலுவலர்களிடம் கொடுத்துக்கொள்ளலாம். மேற்படி, இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு பொதுமக்கள் பொது விநியோகத்திட்டம் தொடர்பான தங்களது குறைகளை தீர்த்துக்கொள்ளலாம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
கைவிரல் ரேகை பதியாத குடும்ப அட்டைகள் செல்லாது?
கைவிரல் ரேகை பதியாத குடும்ப அட்டைகள் செல்லாது என்று சமூக வலை தளங்களில் பரவும் தகவல் வெறும் வதந்தி என்று தமிழக அரசு விளக்கம் அவித்துள்ளது. குடும்ப அட்டைதாரர்கள் தங்களின் குடும்ப அட்டைக்கு உரிய பொருட்கள் முழு எடையும் பெறும் வகையில், நியாய விலைக் கடை எடை இயந்திரத்துடன் விற்பனை முனைய இயந்திரத்தினை இணைத்து பட்டியலிடும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் விற்பனை முனைய இயந்திரத்தில் விரல் ரேகை மூலம் ஆதார் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். கைரேகை பதிவு செய்யாதவர்கள் மத்திய அரசால் வழங்கப்படும் மானிய பொருட்கள் பெற இயலாது. எனவே. ஜூன் 30 ஆம் தேதிக்குள் அந்தந்த நியாய விலைக் கடைகளை அணுகி விரல் ரேகை அல்லது கருவிழி மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
வீட்டில் முதியவர்கள், நோயாளிகள் இருந்தால் விற்பனையாளருக்கு தகவல் அளித்தால், அவர்கள் நேரடியாய வீட்டிற்கு வந்து விரல் ரேகை மற்றும் கருவிழியை பதிவு கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் விரல் ரேகை பதிவு செய்யாதவர்களின் குடும்ப அட்டைகள் செல்லாததாக மாறிவிடும் எனவும் கூறப்பட்டு இருந்தது. இந்தநிலையில், குடும்ப அட்டைகள் செல்லாது? எனப் பரப்பப்படும் தகவல்கள் உண்மையில்லை என்று தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் கை விரல் ரேகையை பதிவு செய்வது அவசியம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கடைசி தேதி இன்னமும் வரையறுக்கப்படவில்லை. எனவே, சமூக ஊடகங்கள் மூலம் வரும் செய்தி உண்மை இல்லை என தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.