நியூசிலாந்தின் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாகவும், அக்டோபரில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன்(Jacinda Ardern) தெரிவித்துள்ளார்.


நானும் மனிதர்தான்


ஜெசிந்தா ஆர்டெர்ன் நேப்பியரில் செய்தியாளர்களிடம் பேசுகையில், பிப்ரவரி 7 தான், அவர் தன் அலுவலகத்தில் கடைசி நாளாக இருக்கும் என்பதும், அக்டோபர் 14-ம் தேதி நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தல் வரை அவர் சட்டமன்ற உறுப்பினராக இருப்பார் என்று தெரியவந்துள்ளது.


"சூழல் கடினமாக இருப்பதால் நான் வெளியேறவில்லை. அப்படி இருந்திருந்தால் பதவியில் அமர்ந்த இரண்டு மாதங்களில் விலகி இருப்பேன். நான் வெளியேறுவதற்கு காரணம் என்னவென்றால், அத்தகைய சிறப்புமிக்க பாத்திரத்தில், பொறுப்பில், நாம் சரியான நபர் இல்லை என்பதை அறியும்போது, விலகுவதே சரி. இந்த வேலையில் என்ன செய்யவேண்டும் என்று எனக்குத் தெரியும், அதை நியாயப்படுத்த என்னிடம் போதுமான அளவு காரணம் இல்லை என்பதை நான் அறிவேன். அவ்வளவுதான்," என்று அவர் கூறினார். “நானும் மனிதர் தான், அரசியல்வாதிகள் மனிதர்கள்தான். எங்களால் இயன்றவரை அனைத்தையும் தருகிறோம். அதற்கு மேல் எல்லாம் நேரம். என்னைப் பொறுத்தவரை, இது தான் என் நேரம்” என்று அவர் மேலும் கூறினார்.



கடினமான சூழல்


“இது என் வாழ்க்கையில் மிகவும் நிறைவான ஐந்தரை ஆண்டுகள். ஆனால் அதற்கான சவால்களையும் எதிர்கொண்டேன் - வீட்டுவசதி மாற்றங்கள் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றை பற்றி யோசித்துக் கொண்டிருக்கும்போது, ஒரு உள்நாட்டு பயங்கரவாத நிகழ்வும் ஏற்பட்டது”, என்று அவர் தனது அறிக்கையில் மேலும் கூறினார். "நீங்கள் கனிவாகவும், ஆனால் வலிமையாகவும், கனிவுடனும் ஆனால் தீர்க்கமாகவும், நம்பிக்கையுடனும் ஆனால் கவனம் செலுத்தக்கூடியவராகவும் இருக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் நியூசிலாந்து பிரதமர் பதவியை விட்டு வெளியேறுகிறேன்”, என ஆர்டெர்ன் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்: Munnar: பனிப்பொழிவால் உறையும் மூணாறு.. மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்... கவலையில் தேயிலை தோட்டக்காரர்கள்


ஜெசிந்தா ஆர்டெர்ன்


ஜெசிந்தா ஆர்டெர்ன் இந்த ஆண்டு கடுமையான தேர்தல் பிரச்சாரத்தை எதிர்கொண்டார். அவரது தாராளவாத தொழிலாளர் கட்சி வரலாற்று விகிதாச்சாரத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றது, ஆனால் சமீபத்திய கருத்துக் கணிப்புகள் அவரது கட்சியை எதிர்க்கட்சி போட்டியாளர்களுக்கு பின்னால் நிறுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்டெர்ன் தனது 37வது வயதில் நியூசிலாந்து பிரதமராக 2017 இல் பதவியேற்றபோது உலகின் இளைய பிரதமராக தலைவர் ஆனார். 



அடுத்த பிரதமர் யார்?


ஜெசிந்தா ஆர்டெர்ன் கொரோனா தொற்றுநோய் சமயத்தில் சிறப்பாக செயல்பட்டு முதல் நாடாக கொரோனா அற்ற நாட்டை உருவாக்கி சாதனை செய்ததற்காக வெகுவாக பாராட்டப்பட்டார். கிறிஸ்ட்சர்ச்சில் இரண்டு மசூதிகள் மீதான தாக்குதல் மற்றும் ஒயிட் ஐலேண்ட் எரிமலை வெடிப்பு ஆகியவற்றைக் கையாண்டதற்காகவும் அவர் பாராட்டப்பட்டார். ஆனால் அதற்காக அவர் கையாண்ட உத்தி மிகவும் கண்டிப்பானது என்று அவர் கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொண்டார். கோவிட்-19-ஐ எதிர்த்துப் போராடுவதில் அரசாங்கம் சரியான முடிவுகளை எடுத்ததா? என்பதையும் எதிர்கால தொற்றுநோய்களுக்கு அது எவ்வாறு சிறப்பாகத் தயாராகலாம் என்பதையும் ஆராயும் ராயல் விசாரணை ஆணையத்தை டிசம்பரில் ஆர்டெர்ன் அறிவித்தார். அதன் அறிக்கை அடுத்த ஆண்டு சமர்ப்பிக்கப்படும் என்று தெரிகிறது. துணைப் பிரதம மந்திரி கிரான்ட் ராபர்ட்சன், கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிடப் போவதில்லை என்று கூறியது மட்டுமின்றி, நியூசிலாந்தின் அடுத்த பிரதமராகும் வாய்ப்பை தொழிலாளர் கட்சியின் மற்ற உறுப்பினர்களுக்கு அளித்து விலகியிருக்கிறார்