உலகம் முழுவதும் லே ஆஃப் எனப்படும் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடைமுறை பெரு நிறுவனங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக, 2023ம் ஆண்டு இதன் தாக்கம் அதிகளவில் இருக்கும் என்று ஏற்கனவே கணிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், ஆன்லைன் வர்த்தகத்தில் கொடிகட்டிப் பறக்கும் அமேசான் நிறுவனம் சுமார் 2 ஆயிரத்து 300 பணியாளர்களை வேலையை விட்டு நீக்குவதாக அறிவித்துள்ளது.


2300 பேர் பணிநீக்கம்:


அமேசான் நிறுவனத்தில் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் இந்த பணிநீக்கம் காரணமாக ஊழியர்கள் பெரும் சோகத்திற்கு ஆளாகியுள்ளனர். இதுதொடர்பாக அமேசான் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், அமெரிக்காவின் சியாட்டிலில் 1852 பணியிடங்களும், வாஷிங்கடனின் பெல்லாவுவில் 448 பணியிடங்களும் குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.  ஏற்கனவே மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பெரு நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை அடுத்தடுத்து வேலையை நீக்கி வரும் நிலையில், அமேசானும் 2,300 பணியாளர்களை வேலையை விட்டு நீக்கியிருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




அமேசான் நிறுவனத்தின் இந்த அதிரடி அறிவிப்பு வரும் மார்ச் 19-ந் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இரண்டு மாத அவகாசத்தை அமேசான் தனது நிறுவன ஊழியர்களுக்கு வழங்கியுள்ளது.


தொடர் வேலையிழப்பு:


அமேசான் நிறுவனம் தொடர்ந்து பணிநீக்க அறிவிப்பை வெளியிட்டு வருவது அதன் ஊழியர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது. மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது பணியாளர்கள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை பணியில் இருந்து நீக்கியுள்ள இந்த தருணத்தில் அமேசானும் தங்களது பணியாளர்களை வேலையை விட்டு நீக்கியிருப்பது உலகளவில் பெரு நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள் மத்தியில் ஒரு வித வேலை பாதுகாப்பின்மையை ஏற்படுத்தியுள்ளது.


கடந்தாண்டு நவம்பர் மாதம் அமேசான் தங்களது நிறுவனத்தின் லே ஆஃப் எனப்படும் பணியாளர்களை வேலையை விட்டு நீக்கும் முறையை தொடங்கியது. அப்போது அமேசான் நிறுவனத்தில் பணியாற்றும் சுமார் 10 ஆயிரம் பணியாளர்கள் வேலையை விட்டு நீக்கப்பட்டனர். ஹார்ட்வேர், மனிதவளம், மற்றும் பல்வேறு துறைகளில் இருந்தும் அப்போது அவர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டனர்.


3 லட்சம் பேர் பாதிப்பு:


மேலும் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலையிழக்கும் அபாயம் இருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது. அமேசான் மட்டுமின்றி ஜாம்பவான் நிறுவனங்களாக வலம் வரும் மைக்ரோசாப்ட், மெட்டா, ட்விட்டர் போன்ற நிறுவனங்களிலும் இந்த பணியாளர்கள் வேலை நீக்கம் ஆயிரக்கணக்கில் நடைபெறும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். மென்பொருள் தொழில்நுட்பத்தில் கொடி கட்டி பறக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனம் அமெரிக்காவில் உள்ள தனது அலுவலகத்திற்கான குத்தகை ஒப்பந்தத்தை நீட்டிக்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளது. அதேபோல, மெட்டா நிறுவனமும் தங்களது அடுக்குமாடி அலுவலகத்தை காலி செய்வதாக அறிவித்துள்ளது.




பெரு நிறுவனங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்தே பணிபுரிய அனுமதித்திருப்பதன் மூலம் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்தாண்டு மட்டும் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்பட 60 ஆயிரம் பேரை வேலையை விட்டு நீக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கடந்தாண்டு முதல் நடைபெற்று வரும் இந்த பணியாளர்கள் வேலை நீக்கத்தினால் உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்களிலும் சேர்த்து இதுவரை 3 லட்சம் பேர் வரை வேலையை இழந்துள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.