ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதிச்சடங்கில் பங்கேற்க சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமரை சந்தித்து பேசினார்.
இந்திய பிரதமர் மோடி முன்னாள் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக நேற்று ஜப்பான் புறப்பட்டு சென்றார். ஜப்பானில் 12 முதல் 16 மணி நேரம் தங்கியிருக்கும் மோடி, மறைந்த அபேயின் மனைவி அகீ அபேவை சந்தித்து ஆறுதல் கூற இருக்கிறார். தொடர்ந்து, ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவை சந்தித்துள்ளார் மோடி. இருநாட்டு குறித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஜூலை மாதம் பிரச்சார உரையின்போது அபே சுட்டுக் கொல்லப்பட்டார். அபேக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஜூலை 9 ம் தேதி ஒரு நாள் தேசிய துக்கத்தை இந்தியா அறிவித்தது.
இதுகுறித்து பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில், “முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக நான் இன்று இரவு டோக்கியோ செல்கிறேன். அனைத்து இந்தியர்கள் சார்பாக பிரதமர் கிஷிடா மற்றும் திருமதி அபே ஆகியோருக்கு நான் இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.அபே சான் எண்ணியபடி, இந்தியா - ஜப்பான் உறவுகளை மேலும் வலுப்படுத்த நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்” என பதிவிட்டிருந்தார்.
முன்னதாக வெளியுறவுச் செயலர் வினய் குவாத்ரா செய்தியாளர் சந்திப்பில்,புடோகானில் நடைபெறும் அரசு இறுதிச் சடங்கில் மோடி கலந்து கொள்வார் என்றும், அதைத் தொடர்ந்து அகசாகா அரண்மனையில் நடைபெறும் வாழ்த்து நிகழ்வில் கலந்து கொள்வார் என்றும், பிரதமர் ஃபுமியோ கிஷிடா மற்றும் அபேயின் மனைவி அகி ஆகியோரை சந்திப்பார் என்றும் தெரிவித்தார்.
"இந்தியா-ஜப்பான் உறவுகளின் சிறந்த சாம்பியனாகவும், அன்பான நண்பராகவும் கருதப்பட்ட முன்னாள் பிரதமர் அபேயின் நினைவைப் போற்றும் வகையில் பிரதமர் மோடிக்கு இந்த பயணம் ஒரு வாய்ப்பாக இருக்கும்" என்று கூறினார்.
கடந்த 2007 ஆம் ஆண்டு பிரதமர் மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது ஜப்பான் பயணம் மேற்கொண்டார். அப்போதிலிருந்து ஷின்சோ அபேவின் நட்பு பத்தாண்டுகளுக்கும் மேலாக வளர்ந்து வந்தது. இரு தலைவர்களும் 2014 இல் இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான உறவுகள் குறித்து சிறப்பு ஆலோசனை மற்றும் உலகளாவிய கூட்டாண்மை குறித்து பேசி இரு நாட்டுகளுக்கிடையிலான உறவை மேம்படுத்தினர்.
அதேபோல், கடந்த ஜூலை 8 அன்று நாரா நகரில் பிரச்சார உரையின் போது அபே படுகொலை செய்யப்பட்டார். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஜப்பானின் முன்னாள் பிரதமருக்கான இரண்டாவது அரசு நிகழ்வாக அவரது இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது. இந்த இறுதி சடங்கில் கிட்டதட்ட 20,000 ஆயிரத்திற்கு அதிகமான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.