காக்கா மாதிரி குளித்துவிட்டு கோழி மாதிரி வேகமாகச் சாப்பிட்டுவிட்டு ஆந்தை மாதிரி விழித்திருந்து வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கும் நவநாகரிக?! மனிதர்கள் வாழ்வியல் சார்ந்த நோய்கள் பலவற்றை வரவேற்று அவதிப்படுகின்றனர்.


அப்படி வாழ்வியல் சார்ந்த நோய்கள் உண்டாக முறையான உணவுப் பழக்கவழக்கம் இல்லாததும் ஒரு காரணமாக இருக்கிறது. காலையில் சாப்பிடுவதே இல்லை. மதிய சாப்பாட்டிற்குள் 10 டீ, காபி சாப்பிடுவது மதியம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடை என உண்பது அப்புறம் இரவில் தூங்கப்போகும் முன்னர் ஏதோ சாப்பிடுவது இப்படி பழக்கவழக்கம் இருந்தால் நிச்சயமாக அவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு பல நூறு மடங்கு அதிகம் என்று கூறப்படுகிறது. உங்களின் உணவுப் பழக்கவழக்கம் இப்படி இருந்தால் நீங்கள் இதை முதலில் படிக்க வேண்டியது அவசியம்.


இப்படிச் சாப்பிடாதீர்கள்:
பின்னிரவில் சாப்பிட நேர்வது இயல்பே. என்றோ ஒருநாள் தவிர்க்க முடியாமல் அப்படி நேர்ந்தால் பரவாயில்லை. ஆனால் எல்லா நாளும் அவ்வாறாக பின்னிரவில் சாப்பிட்டுவிட்டு ஜீரணத்திற்கு சற்றும் நேரம் கொடுக்காமல் தூங்கும் பழக்கம் கொண்டிருந்தால் அதனை உடனே நிறுத்துங்கள். காரணம் அவ்வாறான உணவுப் பழக்கம் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் என்பதுதான். ஆண்களுக்கு நுரையீரல், விரை, குடல், வயிற்றுப் புற்றுநோயும் பெண்களுக்கு மார்பகம், செர்விக்கல், குடல் மற்றும் தைராய்டு புற்றுநோயும் ஏற்படுகிறது. உலகம் முழுவதும் மனித உயிரிழப்புகளுக்குக் காரணமாக இருக்கும் இரண்டாம் பெரிய காரணம் புற்றுநோய் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆகையால் உணவை அளவாக நேரமறிந்து காலமறிந்து தரமறிந்து உண்ணுதல் அவசியம். உணவு பசி போக்க மட்டுமல்ல உயிர் வளர்க்க. நாவின் சுவையைவிட உடலின் ஆரோக்கியத்திற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.


ஆய்வறிக்கை சொல்வதென்ன?
உணவுப் பழக்கம் மற்றும் நோய்கள் தொடர்பாக பார்சிலோனா இன்ஸ்டிட்யூட் ஆஃப் குளோபல் ஹெல்த் என்ற ஆராய்ச்சி மையம் தீவிர ஆய்வு மேற்கொண்டது. குறிப்பாக எந்த மாதிரியான உணவை உண்பதால் புற்றுநோய் ஏற்படுகிறது என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதில் என்ன மாதிரியான உணவுப்பழக்கவழக்கம் புற்றுநோயை உண்டாக்கும் என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அந்த ஆய்வின்படி இரவு 9 மணிக்குப் பின்னர் உணவை உண்டுவிட்டு அதிலிருந்து 2 மணி நேரம் கூட செரிமானத்திற்கு கொடுக்காமல் உறங்கினால் அவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 25% அதிகமாக உள்ளது.


நம் உடலில் சர்கேடியன் பயலாஜிக்கல் க்ளாக் என்று ஒன்று உள்ளது. அது நம் உடலில் ஸ்லீப் வேக் சைக்கிளை நிர்வகிக்கிறது. இதை சர்கேடியன் ரிதம் எனக் கூறுகிறார்கள். இது சீராக இயங்கிக் கொண்டிருக்கும். அதே வேளையில் நாம் வாழ்வியல் பழக்கவழக்கங்களை தாறுமாறாக மாற்றும்போது இந்த சர்கேடியன் க்ளாக் பாதிக்கப்படுகிறது. 9 மணிக்குப் பின்னர் உடல் இயல்பாகவே உறக்கத்துக்கு தயாராகும். ஆனால் அதன் பின்னர் நாம் உடலுக்கு உணவு கொடுத்தால் அது சுறுசுறுபாகிவிடும். இதனால் சர்கேடியன் ரிதம் பாதிக்கப்படுகிறது. 


இந்த ஆய்வுக்காக 872 ஆண்களும் 1372 பெண்களும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் யாரும் இரவுப் பணிக்கு செல்லாதவர்கள். இவர்கள் அனைவரிடமும் உணவு, தூக்கம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டது. இரவு உணவு தூக்கம் சீராக இருப்பவர்களுக்கு 20% புற்றுநோய் வரும் வாய்ப்பு குறைவு. ஆனால் இரவில் லேட்டாக உணவருந்துபவர்களுக்கு 25% நோய் வாய்ப்பு அதிகம் என்று ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டது.


அதேபோல், 2007ல் உலக சுகாதார நிறுவனமும் ஐஏஆர்சியும் இணைந்து நடத்திய ஆய்வில் இரவுப் பணியும் சர்கேடிய ரிதமை பாதிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது.