வங்கதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த படகு விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 26 சடலங்கள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக வங்கதேசத்தைச் சேர்ந்த தி டெய்லி ஸ்டார் என்ற பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், கூடுதல் துணை ஆணையர் திபாங்கர் ராய் உயிரிழப்பு 50 ஆனதை உறுதி செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 25 பேர் பெண்கள் 13 பேர் குழந்தைகள் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரும் மஹாளய அமாவாசையை ஒட்டி போதேஸ்வரி கோயிலில் தரிசனம் செய்யச் சென்றவர்களாவர்.
அந்தப் பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெறுகிறது. ஆற்றின் இரு கரைகளிலும் மக்கள் திரண்டுள்ளனர். சிலர் காணாமல் போன உறவினர்களை நினைத்து கலங்கிய வண்ணம் உள்ளனர்.
வங்கதேசமும் படகு விபத்துகளும்
வங்கதேசத்தில் படகு விபத்து நடைபெறுவது இது முதன்முறை அல்ல. இதுபோன்ற பல முறை விபத்துகள் நடந்திருக்கின்றன. காரணம் பாதுகாப்பு ஏற்பாடுகளில் மெத்தனம் மற்றும் பணத்துக்காக அதிகளவில் பயணிகளை ஏற்றுவதே ஆகும்.
வங்கதேச நாட்டின் தெற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் 30 சதவீதம் மக்கள் ஆறுகளில் பயணம் செய்கின்றனர். குறிப்பாக ஏழைகள் மத்தியில் படகுப் பயணம் ஒரு முன்னணி போக்குவரத்து வழிமுறையாகும். இந்நாட்டில் படகு விபத்துக்கள் பொதுவானவையாகும். கூட்ட நெரிசல், மோசமாக பராமரிக்கப்படும் கப்பல்கள், மோசமான பணியாளர் பயிற்சி மற்றும் அரசாங்க மேற்பார்வையின்மை ஆகியவற்றால் அடிக்கடி இத்தகைய விபத்துகள் நடக்கின்றன என்று பொதுவாக குற்றம் சாட்டப்படுகிறது.
2021 படகு தீ விபத்து:
கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முதல் நாளில் டாக்கா நகரிலிருந்து பர்குணா நோக்கி மூன்று தளங்கள் உள்ள படகு எம்வி அவியான் -10 பயணித்துக் கொண்டிருந்தது. 310 பயணிகளை அழைத்துச் செல்லும் திறன் கொண்ட இப்படகில் 500 பேருக்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். குறிப்பாக அவர்களில் பலர் வார இறுதிக்காக வீடு திரும்பிக் கொண்டிருந்தவர்களாவர். அதிகாலை 3 மணியளவில் பயணிகளில் பலர் தூங்கிக்கொண்டிருந்தபோது, சுகந்தா நதியில் இயலோகாதி கடற்கரையில் தீ விபத்து ஏற்பட்டது. இயந்திர அறையில் தீ பரவி, படகின் மற்ற பகுதிகளுக்கும் பரவியது.
தீ விபத்திற்கு முன்பு படகில் இயந்திர கோளாறுகள் இருந்ததாக பயணிகளில் ஒருவர் கூறியுள்ளார். பின்னர் இயந்திரத்தில் புகை வந்து பரவியுள்ளது. தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் இருந்து தப்பிக்க சில பயணிகள் ஆற்றில் குதித்து நீந்தி கரைக்கு வந்தனர். தீ விபத்து நடந்த 50 நிமிடங்களில் 15 தீயணைப்பு வாகனங்கள் அங்கு வந்து சேர்ந்தன. காலை 5.30 மணிக்கு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. டிசம்பர் மாத பனிக் காலம் என்பதால் அடர்ந்த பனிமூட்டம் மீட்புப் பணிகளுக்கு இடையூறாக இருந்துள்ளது. இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் தீயில் சிக்கி இறந்தனர் அல்லது தப்பிக்கும் போது நீரில் மூழ்கினர். காயமடைந்த 72 பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதன் பின்னரும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. மொத்தமாக 39 பேர் பலியாகினர்.