அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியபோது, இந்திய வம்சாவளியை சேர்ந்த மில்லியன் கணக்கான மக்கள் அமெரிக்காவில் மிகப்பெரிய பதவிகளில் இருப்பதை குறிப்பிட்டு பேசினார்.
இந்திய வம்சாவளிகள் குறித்து மோடி
அமெரிக்க துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிஸின் வரலாற்று சாதனையை பிரதமர் மோடி குறிப்பிட்டு பேசியதையடுத்து அவையில் அரங்கமே கரகோஷம் எழுப்பியது. “அமெரிக்காவில் மில்லியன்கணக்கானவர்கள் இந்தியாவில் வேர்களைக் கொண்டுள்ளனர், அவர்களில் சிலர் இந்த அறையில் கூட அமர்ந்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் பின்னால் அமர்ந்துள்ள, வரலாறு படைத்த நபர்," என்று கூறி கமலா ஹாரிஸை சுட்டிக்காட்டினார். "சமோசா குழுதான் (Samosa caucus) வெள்ளை மாளிகையின் ஃபிளேவர் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். எல்லா இந்திய உணவு வகைகளையும் இங்கு கொண்டு வர அதுவும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்,” என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி.
சமோசா காக்கஸ் என்றால் என்ன?
தெற்காசிய வம்சாவளியைக் கொண்ட நபர்கள் பலர் அமெரிக்க அரசுப்பதவிகளில் அதிகாரிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இந்திய துணைக்கண்டத்திலிருந்து அதில் பலர் இடம் பெற்றுள்ளனர். அந்த நபர்களை இணைக்கும் குழுவிற்கு பொதுப்பெயர் இவ்வாறு கூறப்படுகிறது. இந்தியாவில் மிகவும் பிரபலமான சிற்றுண்டி சமோசா என்பதால் அதையே அந்த குழுவின் பெயராக பலர் அழைக்கின்றனர்.
கமலா ஹாரிஸின் இந்திய வேர்..
கமலா ஹாரிஸின் தாயார் ஷியாமளா கோபாலன் ஹாரிஸ், இந்தியாவில், தமிழ்நாட்டில், மன்னார்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தில் இருந்து வந்தவர். அவரது தாயார் 1960 களில் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து ஜமைக்காவில் பிறந்த டொனால்ட் ஜே. ஹாரிஸை மணந்தார். அமெரிக்கா துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் அடிக்கடி தனது இந்திய பாரம்பரியத்தைப் பற்றி பேசுவதோடு அதனுடன் நெருங்கிய உறவைப் பேணுகிறார். 2020 ஆம் ஆண்டு அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டது பெரும் வரலாற்றை உருவாக்கியது. துணை ஜனாதிபதியாக பதவியேற்கும் முதல் பெண் என்ற சாதனையையும், முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க பெண் என்ற சாதனையையும், முதல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்ற சாதனையையும் செய்தார்.
இரண்டாவது முறை பேசிய ஒரே பிரதமர்
இந்த நிலையில், அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் இரண்டு முறை உரையாற்றிய முதல் இந்தியப் பிரதமர் பிரதமர் மோடி ஆவார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்குப் பிறகு, ஒருமுறைக்கு மேல் இந்த கௌரவத்தைப் பெற்ற இரண்டாவது சர்வதேசத் தலைவராக மோடி உருவெடுத்துள்ளார். "அமெரிக்க காங்கிரஸில் உரையாற்றுவது எப்போதுமே ஒரு பெரிய மரியாதை. இரண்டு முறை அதனை செய்துள்ளது எனக்கு கிடைத்த பாக்கியம். இந்த கௌரவத்திற்காக, இந்தியாவின் 1.4 பில்லியன் மக்களுக்கு எனது மிகப்பெரிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று மோடி கூறினார்.