மோடி தலைமையிலான அரசு நேற்று பதவியேற்று கொண்டது. டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் நேற்று பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது. தேர்தல் முடிவுகள் வெளியாகி, ஆட்சி அமைப்பதற்கு தேவையான ஆதரவு பாஜக கூட்டணிக்கு கிடைத்ததையடுத்து உலக தலைவர்கள் அனைவரும் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
வாழ்த்து சொன்ன உலக தலைவர்கள்: ஆனால், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மட்டும் அமைதி காத்து வந்தார். முடிவுகள் வெளியாகி 6 நாள்களுக்கு பிறகு, மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் ஷெபாஸ் ஷெரீப் வெளியிட்டுள்ள பதிவில், "இந்திய பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள்" என குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தானில் இந்தாண்டு தொடக்கத்தில் பொதுத்தேர்தல் நடந்தது. அதில், முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவு சுயேட்சை வேட்பாளர்கள் 101 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும் சக்தியாக உருவாகினர். இருப்பினும், ஆட்சி அமைக்க தேவையான எண்ணிக்கை அவர்களுக்கு கிடைக்காத காரணத்தால் பரம எதிரிகளாக கருதப்படும் நவாஸ் ஷெரீப், பிலாவல் பூட்டோ ஆகியோர் இணைந்து புதிய அரசாங்கத்தை அமைத்தனர்.
யாரும் எதிர்பாராத விதமாக நவாஸ் ஷெரீப்பின் சகோதரரும் முன்னாள் பிரதமருமான ஷெபாஸ் ஷெரீப் பிரதமரானார். இந்தியா, பாகிஸ்தான் ஆகிய 2 நாடுகளிலும் கூட்டணி ஆட்சியே அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 15 ஆண்டுகளாகவே இரு நாட்டு உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், அமைந்துள்ள புதிய அரசாங்கங்கள் பிரச்னைக்குரிய உறவை சீர் செய்யுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் படிக்க: பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு உலகத் தலைவர்கள் வருகை: யாரெல்லாம் வருகிறார்கள் தெரியுமா?