2024 பொதுத் தேர்தலைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது அமைச்சரவை பதவியேற்பு விழா 09 ஜூன் 2024  நாளை திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், இந்தியாவின் அண்டை நாடுகள் மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தைச் சேர்ந்த தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.


அயல்நாட்டு தலைவர்களுக்கு அழைப்பு:


கடந்த 4ஆம் தேதி, மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியானது. அதில், பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு கிடைத்துள்ளது. இதையடுத்து, மத்தியில் மீண்டும் ஆட்சி அமைப்பதற்காக மோடி டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து உரிமை கோரினார். இதையடுத்து மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்க மோடிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அழைப்பு விடுத்தார்.


இந்நிலையில் பிரதமராக மோடி , நாளை பதவியேற்க உள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். மேலும் வெளிநாட்டு தலைவர்களுக்கு, குறிப்பாக அண்டை நாட்டு தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. 


பிரதமர் பதவியேற்பு விழாவிற்கு வருகைதரும் உலகத் தலைவர்கள்:


நரேந்திர மோடியின் மூன்றாவது முறை பிரதமராக பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்கான அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ள தலைவர்கள் குறித்து  அரசு செய்தி ஊடகமான PIB தெரிவித்துள்ளது. விழாவில் பங்கேற்கும் உலகத் தலைவர்கள்...



  1. இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே,

  2. மாலத்தீவு அதிபர் டாக்டர் முகமது முய்ஸு,

  3. செஷல்ஸ் நாட்டின் துணை அதிபர்  அகமது அஃபிப்;

  4. வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா,

  5. மொரீஷியஸ் பிரதமர்  பிரவிந்த் குமார் ஜக்நாத்,

  6. நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் 'பிரசண்டா',

  7. பூடான் பிரதமர்  ஷெரிங் டோப்கே


சிறப்பு விருந்து:


பதவியேற்பு விழாவில் பங்கேற்பதோடு, உலகத் தலைவர்கள் அன்று மாலை குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அளிக்கும் விருந்திலும் பங்கேற்க உள்ளனர்.


நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்க உலகத் தலைவர்களின் வருகை இந்தியா தனது 'அண்டை நாடுகளுக்கு முதலிடம்' எனும் கொள்கை அளித்த  முன்னுரிமையை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளதாக அரசு செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது


இந்நிலையில், டெல்லியில் நாளை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், டெல்லியில் நாளையும் , நாளை மறுநாளும்  144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கு குறிப்பாக ட்ரோன்கள் உள்ளிட்டவையும் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.