பேராசிரியர்கள் ஜான் ஜெ.ஹாப்ஃபீல்டு மற்றும் கெஃப்ரே இ. கிளிண்டன் ஆகிய இருவருக்கும் 2024ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு அளிக்கப்பட உள்ளது. செயற்கை நரம்பியல் வலைப்பின்னல் மூலம் இயந்திரக் கற்றலைச் செயல்படுத்தும் கண்டுபிடிப்புக்காக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.


 






ஜான் ஜெ.ஹாஃப்ஃபீல்டு அமெரிக்காவில் உள்ள பிரிண்ட்ஸ்டன் பல்கலைக்கழகத்திலும் கனடாவில் உள்ள டொரண்டோ பல்கலைக்கழகத்தில் கெஃப்ரே இ. கிளிண்டனும் பேராசிரியர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 


8.40 கோடி மதிப்பில் நோபல்..


உலகில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்து, மனித இனத்துக்கு நன்மை பயக்கும் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அந்த வகையில், இயற்பியல் துறைக்கான நோபல் இன்று (அக்.8) அறிவிக்கப்பட்டுள்ளது. நோபல் விருதாளர்களுக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்படுகின்றன. அதாவது இந்திய மதிப்பில் சுமார் 8.40 கோடி அளிக்கப்படுகிறது. 


மருத்துவத்துக்கான நோபல் பரிசு விக்டர் ஆம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகிய இருவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. மைக்ரோ ஆர்.என்.ஏ.வின் கண்டுபிடிப்பு மற்றும் அதற்குப் பிந்தைய படியெடுத்தல் மரபணு ஒழுங்குமுறையில் அதன் பங்கு குறித்த ஆராய்ச்சிக்கான நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது.


இதுவரை 117 முறை நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. நோபல் விருதாளர்கள் அனைவருக்கும் டிசம்பர் 10ஆம் தேதி நோபல் பரிசு வழங்கப்படும். அது நோபல் பரிசை உருவாக்கிய ஆல்ஃபிரெட் நோபலின் நினைவு தினமாகும்.


வேதியியல் துறைக்கான நோபல் பரிசு நாளை அறிவிக்கப்படும் நிலையில், வியாழக் கிழமை அன்று இலக்கியத்துக்கான நோபல் பரிசும் வெள்ளி அன்று அமைதிக்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட உள்ளது. அதேபோல அக்டோபர் 14ஆம் தேதி பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 


 


இதையும் வாசிக்கலாம்: Nobel Prize 2024: மருத்துவத்துக்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிப்பு; யாருக்கு? எதற்கு?