Iranian General Esmail Qaani: ஈரானின் குவாட்ஸ் படை தளபதி இஸ்மாயில் கானி உடல்நலத்துடன் இருப்பதாக துணை தளபதி தெரிவித்துள்ளார்.
இஸ்மாயில் கானி நிலை என்ன?
லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது கடந்தவாரம் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. தாக்குதலின் போது அங்கிருந்த, ஈரானின் குவாட் படைப்பிரிவு தளபதி இஸ்மாயில் கானிக்கு என்ன ஆனது என்பது தொடர்பான தகவல் ஏதும் கிடைக்கவில்லை என அண்மையில் செய்தி வெளியானது. இதனால், ஈரான் தளபதியை இஸ்ரேல் கொன்றுவிட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், ஈரானின் குவாட்ஸ் படையின் உயர்மட்ட தளபதியான இஸ்மாயில் கானி, "நல்ல உடல்நிலையுடன்" இருக்கிறார் என்று குவாட்ஸ் படையின் துணைத் தளபதி இராஜ் மஸ்ஜேடி விளக்கமளித்துள்ளார். அதன்படி, “இஸ்மாயில் கானி நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார் மற்றும் அவரது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். சிலர் எங்களிடம் ஒரு அறிக்கையை வெளியிடச் சொல்கிறார்கள். இது தேவையற்றது” என ஈரானிய அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
யார் இந்த இஸ்மாயில் கானி:
கடந்த 2020ம் ஆண்டு பாக்தாத்தில் அமெரிக்கா நடத்திய ட்ரோன் தாக்குதலில், குவாட்ஸ் படைப்பிரிவின் தலைவராக இருந்த காசிம் சுலைமானி படுகொலை செய்யப்பட்டார். அவரது மறைவைத் தொடர்ந்து, ஈரான் அரசு ஸ்மாயில் கானியை குவாட்ஸ் எனப்படும் புரட்சிகர காவலர்களின் வெளிநாட்டு ராணுவ-உளவுத்துறை சேவையின் தலைவராக நியமித்தது. குவாட்ஸ் படை மத்திய கிழக்கு முழுவதும் உள்ள அதன் நட்பு ஆயுதக் குழுக்களில் பெரும் ஆதிக்கத்தை செலுத்துகிறது.
இஸ்ரேலின் தொடரும் தாக்குதல்கள்:
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி முதல் காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. அதைதொடர்ந்து, தற்போது லெபனானை மையமாக கொண்டு செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பினர் மீதும் இஸ்ரேல் துல்லியமான தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஹிஸ்புல்லாத் தலைவர்களை குறிவைத்து அவர்கள் இருக்கும் இடத்தைத் தேடி, அவர்களை அழிக்கும் வகையில், மிகத்துல்லியமான தாக்குதல் நடத்துவதில் இஸ்ரேல் மிக தீவிரமாக களமிறங்கி உள்ளது. இந்த ராணுவ வான் தாக்குதல்களை கண்டிக்கும் சர்வதேச சமூகத்திடம் இருந்து, இஸ்ரேல் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. ஆனால் இஸ்ரேல் இது ஹிஸ்புல்லா படைகளின் ஆரம்பகட்ட தாக்குதலுக்கு பதிலடி தரும் நடவடிக்கை மட்டுமே என விளக்கமளித்து வருகிறது.
போர் விதிகளை மீறி செயல்படும் இஸ்ரேலுக்கு இனி ஆயுதங்களை விற்கப்போவதில்லை என ஃப்ரான்ஸ் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், அமெரிக்கா போன்ற நாடுகள் இஸ்ரேலுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றன.