மருத்துவத்துக்கான நோபல் பரிசு விக்டர் ஆம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகிய இருவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. மைக்ரோ ஆர்.என்.ஏ.வின் கண்டுபிடிப்பு மற்றும் அதற்குப் பிந்தைய படியெடுத்தல் மரபணு ஒழுங்குமுறையில் அதன் பங்கு குறித்த ஆராய்ச்சிக்கான நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது.


நோபல் பரிசு உருவானது எப்படி?


ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த வேதியியலாளர் ஆல்பிரட் நோபல், டைனமைட்டைக் கண்டுபிடித்ததற்காக விமர்சனங்களை எதிர்கொண்டார். இந்த நிலையில் மனித இனத்திற்கு மிகப் பெரிய சேவை ஆற்றியவர்களுக்கு பரிசு வழங்க வேண்டும் என நினைத்தார். அறிவியல் மற்றும் மனிதநேயம் மூலம் சமுதாயத்தை மேம்படுத்தி மக்களுக்கு உதவ முடியும் என்பதில் நம்பிக்கை வைத்து நோபல் பரிசை உருவாக்கினார். இதன் காரணமாகவே, இது உலகின் பெருமைமிகு பரிசாகக் கருதப்படுகிறது. 


இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம் மற்றும் அமைதி ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு இந்த பரிசு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 1901ஆம் ஆண்டு முதல், நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.






இந்த நிலையில் 2024ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு விக்டர் ஆம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகிய இருவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.


எதற்காக இந்த விருது?


மைக்ரோ ஆர்.என்.ஏ.வின் கண்டுபிடிப்பு மற்றும் அதற்குப் பிந்தைய படியெடுத்தல் மரபணு ஒழுங்குமுறையில் அதன் பங்கு குறித்த ஆராய்ச்சிக்கான நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது.


ஸ்டாக்ஹோமில் உள்ள கரோலின்ஸ்கா நிறுவனத்தில் இருந்து இந்த அறிவிப்பு வெளியானது. இதுகுறித்துப் பேசிய நோபல் அசெம்ப்ளி, ''அவர்களின் கண்டுபிடிப்பு, உயிரினங்கள் எப்படி உருவாகின்றன மற்றும் செயல்படுகின்றன என்பதற்கு அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நிரூபிப்பதாக அமைந்தது. 


மரபணு ஒழுங்குமுறை


நம்முடைய உடலில் அனைத்து செல்களும் ஒரே மரபணுவைக் கொண்டிருந்தாலும் வித்தியாசமான செல்களைக் கொண்டிருக்கின்றன. தசை மற்றும் நரம்பு செல்கள் போன்ற பல்வேறு வகையான செல்கள் வெவ்வேறு செயல்பாடுகளைச் செய்கின்றன. மரபணு ஒழுங்குமுறை காரணமாக இது சாத்தியமாகும். இது செல்கள் தங்களுக்குத் தேவையான மரபணுக்களை மட்டுமே இயக்க அனுமதிக்கிறது. ஆம்ப்ரோஸ் மற்றும் ருவ்குன் ஆகியோரின் மைக்ரோ ஆர்.என்.ஏ.வின் கண்டுபிடிப்பு இந்த ஒழுங்குமுறை நடக்கும் ஒரு புதிய வழியை வெளிப்படுத்தியது.


மனிதர்கள் உள்ளிட்ட உயிர்கள் எவ்வாறு உருவாகின்றன மற்றும் செயல்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்வதில் அவர்களின் கண்டுபிடிப்பு இன்றியமையாதது’’ என்று நோபல் அசெம்ப்ளி தெரிவித்துள்ளது.