உலகெங்கிலும் பெண்களின் வளர்ச்சிக்காகவும், அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் பல்வேறு நடவடிக்கைகளை உலக நாடுகள் மேற்கொண்டு வருகிறது. ஆனால், ஆப்கானிஸ்தானில் மட்டும் பெண்களை பின்னோக்கி கொண்டு செல்லும் விதமாகவும், அவர்களின் அடிப்படை உரிமைகளை கூட பறிக்கும் விதமாக பல்வேறு தடைகளை அந்த நாட்டை ஆட்சி செய்யும் தலிபான்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
அங்கு மீண்டும் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியது முதல் கட்டுப்பாடுகளுக்கு மேல் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். குறிப்பாக, அமெரிக்க ஆதரவுடன் நடைபெற்று வந்த ஆட்சியில் பெண்களுக்கு வழங்கப்பட்டு வந்த அத்தனை உரிமைகளையும் படிப்படியாக பறித்து வருகின்றனர்.
டாக்சியிலும் புர்கா கட்டாயம்:
இந்த நிலையில், பெண்களுக்கு ஆப்கனில் புர்கா கட்டாயம் என்பது ஏற்கனவே அமலில் இருந்து வருகிறது. இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் இனி டாக்சியில் செல்லும் பெண்கள் கட்டாயம் முகத்தை மறைக்கும் விதத்தில் புர்கா அணிந்திருக்க வேண்டும் என்றும், அவ்வாறு அணியாமல் செல்லும் பெண்களை டாக்சியில் ஓட்டுநர்கள் ஏற்றக்கூடாது என்றும், அவ்வாறு அவர்களை டாக்சியில் ஏற்றினால் அந்த ஓட்டுனர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும், முழுமையாக புர்கா அணியாமல் வரும் பெண் பயணிகளிடம் ஓட்டுனர்கள் பேசக்கூடாது என்றும் தலிபான்கள் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தலிபான்களின் இந்த புதிய உத்தரவால் பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தலிபான்கள், பெண்கள் டாக்சியில் செல்லும்போது தலையில் முக்காடு மட்டும் அணிந்தால் போதாது என்றும், அவர்கள் கண்டிப்பாக புர்கா அணிய வேண்டும் என்றும் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பெண்கள் மிகுந்த சிரமம்:
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சிப்பொறுப்பேற்றது முதல் அந்த நாட்டு மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். பெண்கள் குறிப்பிட்ட வகுப்பிற்கு மேல் படிக்கக்கூடாது, பெண்களுக்கான மருத்துவம், பெண்களுக்கான பிற அடிப்படை உரிமைகள் என பல உரிமைகளை தலிபான்கள் பறித்து வருகின்றனர். தலிபான்களின் இந்த செயல்களால் உலக நாடுகள் மிகுந்த வேதனை அடைந்திருப்பதுடன், தங்களது கவலையையும் அடிக்கடி பதிவு செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க: Zhanna Samsonova: ‘வீகன் டயட்’ பிரபலம் சனா சம்சனோவா மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி.. என்ன நடந்தது?
மேலும் படிக்க: Pakistan Suicide Blast: பாகிஸ்தானை உலுக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ். தற்கொலை படை தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 54 ஆக உயர்வு..