நமது ஊரில் பிளாஸ்டிக்கைத் தடை செய்கிறோம் என அரசு அறிவித்தால் நாம் என்ன செய்வோம்? அது குறித்து என்றைக்காவது யோசித்து இருக்கிறீர்களா? மாநில அரசு குறைந்தபட்சம் பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்துவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்ற முன்னெடுப்பில், ”மீண்டும் மஞ்சள் பை” என்ற திட்டத்தைக் கொண்டுவந்தது. ஆனால் இன்றைக்கும் நாம் கடைகளுக்கு செல்லும்போது பொருட்களை வாங்கிவிட்டு, “கேரி பேக் கொடுங்க” எனக் கேட்கிறோம். அரசும் உணவுகங்களில் குறிப்பிட்ட மைக்ரான் அளவுள்ள பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக் கூடாது என கூறிய பின்னரும் பொதுமக்களில் பலர் கடைகளில் கேரி பேக் தருவார்கள் என்ற எண்ணத்துடனே பொருட்கள் வாங்க கிளப்பிவிடுகின்றனர்.
இந்தியா போன்ற வளரும் நாடுகள் மட்டும் இல்லாது அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளும் பிளாஸ்டிக் பயன்பாட்டால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன. இதனால் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மாகாணத்தில் அரசாங்கம் மக்களின் உதவியுடன் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. Skip The Stuff என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலம் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பயன்பாட்டை கூடுமானவரை தடுக்க முடியும் என அந்த மாகாண அரசு நம்புகிறது.
அதாவது, இந்த திட்டத்தின் மூலம் அரசு குறிக்கோளாக கொண்டுள்ள முயற்சி என்பது, உணவகங்கள் மற்றும் உணவு டெலிவரிகளில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் டப்பாக்கள், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் ஸ்பூன்கள், பிளாஸ்டிக் தட்டுகள் என அனைத்து வகை பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை படிப்படியாக குறைத்து, இவ்வகையான பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க இந்த திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த அமெரிக்காவில், ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 561 பில்லியன் உணவு டெலிவரி மற்றும் ஆர்டர்கள் நடைபெறுகிறது. இதன் மூலம், 4.9 மில்லியன் டன் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கழிவுகள் உண்டாகின்றன. இதனைத் தடுக்க நியூயார்க் மாகாணம் அங்கிருந்த பல்வேறு தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டை கைவிடுவது தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்த சட்டம் கடந்த திங்கள் கிழமை அதாவது ஜீலை மாதம் 31ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதாவது, அந்த திட்டம் மூலம், பொதுமக்கள் அதாவது நுகர்வோர் கேட்காமல் தாமாகவே ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை விநியோகம் செய்யும் உணவகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அபாரதமும் விதிக்கப்படும் என அந்த சட்டத்தில் உள்ளது. அதாவது, முதல் முறை குற்றச்சாட்டு நிகர்வோர் தரப்பில் இருந்து எழுப்பப்பட்டால், எச்சரிகையும், எச்சரிக்கை விடுக்கப்பட்ட அடுத்த 12 மாதங்கள் அதாவது ஒரு ஆண்டு காலத்திற்கு அடுத்தடுத்து எழும் புகார்களுக்கு 50 டாலர்கள் முதல் 250 டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்படவுள்ளது.