பாகிஸ்தானில் நிகழும் அரசியல் மாற்றங்கள், இந்தியாவில் எப்போதும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். அண்டை நாடு என்பதாலும் வரலாற்று ரீதியாகவும் முக்கியமான நாடு என்பதாலும், அங்கு நிகழும் அரசியல் மாற்றங்களுக்கு இந்தியா எப்போதும் முக்கியத்துவம் தரும். அதுமட்டுமின்றி, மோசமான பொருளாதார நெருக்கடியாலும் அரசியலில் நிலையற்ற தன்மையாலும் பாகிஸ்தான் தவித்து வரும் சூழலில், தற்போது மிக பெரிய திருப்பம் அரங்கேறியுள்ளது.


பாகிஸ்தான் அரசியலில் புதிய திருப்பம்:


வெளிநாட்டில் வாழ்ந்து வந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், நாடு திரும்பியிருப்பது அந்நாட்டு அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அடுத்தாண்டு ஜனவரி மாதம் அங்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அவர் களம் காண்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 


துபாயில் இருந்து பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு தனி விமானம் மூலம் நவாஸ் ஷெரீப் வந்துள்ளார். அவருடன் குடும்ப உறுப்பினர்கள், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் - நவாஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், நண்பர்கள் சிலரும் பாகிஸ்தானுக்கு வந்துள்ளனர். 


நவாஸ் ஷெரீப்பின் போட்டியாளராக கருதப்படும் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ஊழல் வழக்கில் கைதாகி தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இப்படிப்பட்ட சூழலில் நடைபெற உள்ள தேர்தல், பாகிஸ்தான் அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. 


நவாஸ் ஷெரீப் வெளிநாட்டுக்கு சென்றது ஏன்?


கடந்த 1990ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரையிலும், கடந்த 1997ஆம் ஆண்டு முதல் 1999ஆம் ஆண்டு வரையிலும், பிரதமராக பதவி வகித்த நவாஸ் ஷெரீப், கடந்த 2013ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றிபெற்று மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றார். 


கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரையிலான அவரது ஆட்சி காலத்தில், பல அதிரடி அரசியல் நிகழ்வுகள் அரங்கேறின. குறிப்பாக, இஸ்லாமாபாத்தை முடக்கி எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டம் மிக பெரிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து, ஊழல் வழக்கில் சிக்கி, கடந்த 2017ஆம் ஆண்டு, பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், அவரை தகுதி நீக்கம் செய்தது.


அதுமட்டும் இன்றி 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 1.3 பில்லியன் பாகிஸ்தான் ரூபாய் அபராதமாகவும் அவருக்கு விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டார். பின்னர், வழக்கு விசாரணையின்போது, அவரது உடல் நலத்தை காரணம் காட்டி உயர் சிகிச்சைக்காக லண்டன் சென்றார்.


கடந்த 4 ஆண்டுகளாக லண்டனில் வசித்து வந்த நிலையில், ஊழல் வழக்கில் அவருக்கு பிணை வழங்கப்பட்டதை தொடர்ந்து, தற்போது நாடு திரும்பியுள்ளார். 


இதையும் படிக்க: Pakistan New PM: பாகிஸ்தான் பிரதமராகப் பதவியேற்ற அன்வர் உல் ஹக் கக்கர்.. சவால்களை சமாளிப்பாரா?