India Canada Row:  இருநாடுகளுக்கு இடையேயான ராஜாங்க ரீதியிலான அதிகாரிகளின் எண்ணிக்கையை, சமமாக கொண்டு வர கனடா அரசுக்கு இந்தியா முதலில் ஒரு மாதமும், அதைதொடர்ந்து கூடுதலாக 10 நாட்களும் இந்திய அரசாங்கம் அவகாசம் வழங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.


இந்தியா - கனடா விவகாரம்: 


காலிஸ்தான் ஆதரவாளரான நிஜ்ஜார் தங்களது நாட்டில் கொல்லப்பட்டதில், இந்தியாவிற்கு தொடர்பு உள்ளதாக கனடா அரசாங்கம் குற்றம்சாட்டியது. இதனை முற்றிலும் நிராகரித்த மத்திய அரசு, குற்றச்சாட்டுகள் உள்நோக்கம் கொண்டுள்ளன எனவும் விமர்சித்தது. இதையடுத்து இருநாடுகளுக்கும் இடையேயான உறவு தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. இந்நிலையில் தான் அண்மையில் இந்தியாவிற்கான கனடா தூதரக அதிகாரிகள் 40 பேர் திரும்பப் பெறப்பட்டது தொடர்பான புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.


கனடாவிற்கு கெடு விதித்த இந்தியா: 


அதன்படி, இரு நாடுகளுக்கும் இடையே ராஜாங்க ரீதியிலான அதிகாரிகளின் எண்ணிக்கையை சமநிலைக்கு கொண்டு வர,  கனடாவுக்கு இந்தியா ஒரு மாதமும், அதன் பிறகு மேலும் 10 நாட்களும் அவகாசம் அளித்துள்ளது.  அதோடு இந்தியாவில் தங்களது பணிகளில் தொடர்ந்து நீடிக்க உள்ள கனடா தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்படும், ராஜாங்கா ரீதியிலான விலக்குகள் மற்றும் சலுகைகள் தொடர்பான பட்டியலையும் அந்நாட்டு அரசிடம் வழங்கியது என தகவல்கள் தெரிவிக்கின்றன. அக்டோபர் 10ம் தேதிக்குள் அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பது தொடர்பான அறிவிப்பு, சரியாக ஒரு மாதத்திற்கு முன்பாக கனடா அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த அவகாசம் 20ம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கனடா அரசு விமர்சித்து வருகிறது. ஆனால், அரசின் நடவடிக்கை 'தன்னிச்சையான' மற்றும் 'ஒரே இரவில்' எடுக்கப்பட்டது என சித்தரிக்கும் கனடாவின் கூற்றுகள் உண்மையில் தவறானவை” என அரசுத் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


அரசு தரப்பில் விளக்கம்:


மத்திய அரசின் நடவடிக்கை தொடர்பாக பேசியுள்ள பெயர் சொல்ல விரும்பாத அதிகாரி,கனடா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையேயான தூதரக பிரதிநிதித்துவங்களில் சமத்துவம் கோரப்பட்டுள்ளது. இதனால் பெங்களூரு, மும்பை மற்றும் சண்டிகரில் உள்ள கனடா தூதரகங்களில் எந்த தாக்கமும் ஏற்படாது.  இந்தியாவில் உள்ள கனடா தூதரகங்களின் செயல்பாடுகளை நிறுத்துவதற்கான முடிவு அந்நாட்டு அரசின் ஒருதலைப்பட்சமானது.  இதற்கும் மத்திய அரசின் சமத்துவத்தை கொண்டுவரும் நடவடிக்கைக்கும் எந்த தொடர்பும் இல்லை" என தெரிவித்துள்ளார்.


கனடா பிரதமர் கவலை:


இந்தியாவில் இருந்து கனடா தூதரக அதிகாரிகள் 40 பேர் வெளியேற்றப்பட்டது தொடர்பாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கவலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், இந்திய அரசாங்கம்  கனடா தூதரக அதிகாரிகள் 40 பேருக்கான அனுமதியை ஒருதலைப்பட்சமாக ரத்து செய்துள்ளது. இதனால்,  வியன்னா உடன்படிக்கை மீறப்பட்டுள்ளது.  இது சர்வதேச சட்டம் மற்றும் ராஜாங்க நடவடிக்கைகளின் மிக அடிப்படையான கோட்பாட்டை மீறும் செயலாகும். உலகின் அனைத்து நாடுகளும் மிகவும் கவலை கொள்ள வேண்டிய விஷயம் இது. ராஜாங்க ரீதியிலான கொள்கையை மீறுவதன் மூலம், இந்தியாவிலும் கனடாவிலும் உள்ள லட்சக்கணக்கான மக்கள் சுமூகமான வாழ்க்கையைத் தொடர்வதை இந்திய அரசாங்கம் நம்பமுடியாத அளவிற்கு கடினமாக்குகிறது” என ட்ரூடோ பேசியுள்ளார். அதோடு, நிஜ்ஜார் கொல வழக்கில் இந்தியாவிற்கு தொடர்பு இருக்கலாம் என்ற குற்றச்சாட்டையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.


வியன்னா ஒப்பந்தத்தை மீறவில்லை - இந்தியா


வியன்னா ஒப்பந்தத்தை கடைபிடிக்காமல் இந்தியா சர்வதேச சட்டங்களை மீறுவதாக,  கனடா பிரதமர் ட்ரூடோ மற்றும்  வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி ஆகியோர் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால், இந்தியா எந்த விதிமீறல்களிலும் ஈடுபடவில்லை என மத்திய அரசு வட்டாரத்தை சேர்ந்த அதிகாரிகள் கூறுகின்றனர். அவர்கள் தந்த விளக்கத்தின்படி, கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கைக்கு இணையாக, நாட்டில் உள்ள கனடா தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைப்பது என்பது,  இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான கனடா தூதரக அதிகாரிகள் இருப்பது மற்றும் நாட்டின் உள்விவகாரங்களில் அவர்கள் தொடர்ந்து தலையிடுவது ஆகிய காரணங்களால் முன்னெடுக்கப்பட்டது" என தெரிவித்துள்ளார். 


இதுதொடர்பாக பேசிய மற்றொரு மத்திய அரசு அதிகாரி, “ராஜாங்க ரீதியிலான உறவுகளுக்கான வியன்னா ஒப்பந்தத்தின் பிரிவு 11.1-ன்படி, நாட்டின் சூழ்நிலை, நிலைமை மற்றும் தேவைகளைப் பொறுத்து, ஒரு நாட்டிற்கான தூதரகத்தின் அதிகாரிகளின் அளவை நியாயமான மற்றும் இயல்பானதாகக் கருதும் அளவிற்கு கட்டுப்படுத்தும் உரிமையை எந்தவொரு நாடும் பெறுகிறது. இந்த உரிமையை ஏற்கனவே பல நாடுகளும் பயன்படுத்தியுள்ளன” என தெரிவித்துள்ளார்.