தன்பாலின திருமணத்தற்கு சட்ட அங்கீகாரம் வழங்க இந்திய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இது தொடர்பான வழக்கில் நீதிபதிகள் 4 தீர்ப்புகளை வழங்கியிருந்தனர். அதில், இருவர் ஒரே மாதிரியாகவும் மூவர் ஒரு மாதிரியாகவும் தீர்ப்பு வழங்கியிருந்தனர். 


தன்பாலின திருமணம் குறித்து உச்ச நீதிமன்றம் கூறியது என்ன?


உறவை ஏற்படுத்தி கொள்ள பால்புதுமை (Queer) சமூக மக்களுக்கு அடிப்படை உரிமை உள்ளது என்றும் அவர்கள் செய்து கொள்ளும் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்குவது அரசின் கடமை என இந்திய தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட், நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் ஆகியோர் ஒரே விதமான தீர்ப்பை வழங்கினர்.


ஆனால், தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்க மறுத்த நீதிபதிகளான எஸ். ரவீந்திர பட், பி. எஸ். நரசிம்மா, ஹிமா கோலி, "தன்பாலினத்தவர் திருமணத்துக்கு நீதிமன்றத்தால் அங்கீகாரம் வழங்க முடியாது. இதில் பல அம்சங்கள் கருத்தில் எடுத்து கொள்ள வேண்டியிருப்பதால் நாடாளுமன்றத்தால் மட்டும்தான் சட்ட அங்கீகாரம் வழங்க முடியும்" என தெரிவித்தனர். இதில், பெரும்பான்மை நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பு இறுதியானதாகும். 


இருப்பினும், இந்த விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் பல முக்கிய கருத்துகளை தெரிவித்திருந்தது. பால்புதுமை (Queer) தம்பதிகள் உள்பட திருமணம் செய்து கொள்ளாத அனைத்து தம்பதிகளும் குழந்தையை தத்தெடுக்க உரிமை உள்ளது என சந்திரசூட் மற்றும் சஞ்சய் கிஷன் கவுல் தெரிவித்தனர். 


இந்த நிலையில், இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பற்றி அமெரிக்கா முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளது. தன்பாலின தம்பதிகளுக்கு சமமான சட்ட பாதுகாப்பு வழங்குவதற்காக பணியாற்ற இந்தியாவை அமெரிக்க ஊக்கப்படுத்துவதாக தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் இந்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


அமெரிக்கா பரபரப்பு கருத்து:


இதுகுறித்து அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "உலக அளவில் திருமண சமத்துவத்தை அமெரிக்கா ஆதரிக்கிறது. நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் எதிர்வினைகளை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்.


திருமண சமத்துவம் மற்றும் LGBTQI+ மக்கள் எதிர்கொள்ளும் பாகுபாட்டிற்கு எதிராக நாங்கள் தொடர்ந்து குரல் கொடுப்போம். தன்பாலின தம்பதிகளுக்கு சமமான சட்டப் பாதுகாப்பை வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க இந்திய அரசாங்கத்தை ஊக்குவிப்போம்" என்றார்.


இந்தியாவில் சிறுபான்மை மக்கள், அரசாங்கத்திற்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் நடத்தப்படும் விதம், பத்திரிகையாளர்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து அமெரிக்கா ஏற்கனவே கவலை தெரிவித்திருந்தது. ஆனால், இந்த விவகாரத்தில் அனைத்து விதமான குற்றச்சாட்டுகளையும் இந்தியா மறுத்துள்ளது.


இதையும் படிக்க: தன்பாலினத்தவர் திருமணத்துக்கு நீதிமன்றத்தால் அங்கீகாரம் வழங்க முடியாது: உச்ச நீதிமன்றம்