பாகிஸ்தான் நாட்டின் காபந்து பிரதமராக அன்வர் உல் ஹக் கக்கர் இன்று பதவியேற்றுள்ளார்.
பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைப்பு:
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் இன்றுடன் முடிவடைந்த நிலையில், நாடாளுமன்றத்தை கலைக்குமாறு அந்நாட்டு அதிபர் ஆரிப் அலிக்கு, பிரதமா் ஷெபாஸ் ஷெரீப் கடிதம் எழுதியிருந்தார். நாடாளுமன்றம் முன்கூட்டியே கலைக்கப்பட்டதைத் தொடா்ந்து, 90 நாள்களுக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
இந்த சூழலில், காபந்து அரசை அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அரசுக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இறுதியில், தேர்தலை மேற்பார்வை இடுவதற்கான காபந்து அரசை அமைப்பதற்கு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பும் எதிர்க்கட்சித் தலைவர் ராஜா ரியாசும் ஒப்புக் கொண்டனர்.
அதன்படி, காபந்து அரசை வழிநடத்த செனட் உறுப்பினரான உல் ஹக் கக்கர் தேர்வு செய்யப்பட்டார். இதை தொடர்ந்து, பலுசிஸ்தான் மாகாணத்தை சேர்ந்த அன்வர் உல் ஹக் கக்கர், காபந்து பிரதமராக பதவியேற்றுள்ளார்.
"இஸ்லாமிய சித்தாந்தத்தைப் பாதுகாக்க பாடுபடுவேன்"
பதவியேற்பு விழாவில் பேசிய அன்வர் உல் ஹக் கக்கர், "பாகிஸ்தான் உருவாவதற்கு அடிப்படையான இஸ்லாமிய சித்தாந்தத்தைப் பாதுகாக்க நான் பாடுபடுவேன். எனது தனிப்பட்ட நலன்கள், எனது உத்தியோகபூர்வ நடத்தை அல்லது எனது அதிகாரப்பூர்வ முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்த அனுமதிக்க மாட்டேன்" என்றார்.
பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், புதிய அரசாங்கம் அமையும் வரையில் அமைச்சர்களை நியமித்து, காபந்து அரசாங்கத்தை அன்வர் உல் ஹக் கக்கர் வழிநடத்த உள்ளார்.
பாகிஸ்தான் அரசியல்:
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கடந்தாண்டு ஏப்ரல் 10ஆம் தேதி நடந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில், பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான ஆளும் கட்சிக்கு எதிராக பெரும்பான்மை எம்பிக்கள் வாக்களித்தனர். இதனால், பிரதமர் பதவியில் இருந்து இம்ரான் கான் விலக நேர்ந்தது. பாகிஸ்தான் வரலாற்றிலேயே நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வி அடைந்த ஒரே பிரதமர் இம்ரான் கான் என்ற நிலைக்கு தள்ளப்பட்டார்.
இதை தொடர்ந்து, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியும் பாகிஸ்தான் மக்கள் கட்சியும் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தன. முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரரும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் தற்போதைய தலைவருமான ஷெபாஸ் ஷெரீப், பிரதமராக பதவியேற்றார்.
பாகிஸ்தானை பொறுத்தவரையில், மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை காட்டிலும் ராணுவமே அதிகாரம் மிக்க அமைப்பாக திகழ்கிறது. ராணுவத்தின் உதவியோடு கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த இம்ரான் கான், பின்னர், ராணுவத்திற்கு எதிராக செயல்பட்ட காரணத்தால் அவரின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.