இத்தாலியில் இசைக்கலைஞர் ஒருவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யும்போது சாக்ஸோஃபோன் வாசித்துள்ளார். 9 மணி நேரம் நடந்த இந்த அறுவை சிகிச்சை, ரோமில் உள்ள பீடியா சர்வதேச மருத்துவமனையில் நடைபெற்றது.


அறுவை சிகிச்சையில் சாக்ஸோஃபோன்


இந்த அறுவை சிகிச்சை "CZ" என்ற முதலெழுத்துக்களைக் கொண்ட ஒரு நோயாளிக்கு செய்யப்பட்டது. 35 வயதான இந்த நோயாளி அறுவை சிகிச்சைக்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் சாக்ஸஃபோன் வாசிப்பவர்தான். அவருக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து நலமாக வீடு திரும்பியுள்ளார். மருத்துவமனையின் தலைமை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். கிறிஸ்டியன் ப்ரோக்னா, அந்த நோயாளிக்கு மூளையில் இருந்த கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டதை சிபிசி செய்திக்கு உறுதிப்படுத்தினார். 


9 மணி நேர அறுவை சிகிச்சை


"இதனை செய்ததால் நோயாளிக்கு பாதகமான விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை. மூளையில் இருந்து கட்டியை அகற்ற அதிநவீன உபகரணங்களைப் பயன்படுத்தி பத்து உயர் பயிற்சி பெற்ற மருத்துவர்கள் கொண்ட குழு போராடியது. மூளையில் இந்தக் கட்டிகள் கண்டறியப்பட்டப் பகுதிகள் மனித மூளையில் மிகவும் சிக்கலான இடங்கள். மரத்து போகச்செய்யும் அனஸ்தீஸியா மட்டுமே கொடுக்கப்பட்டு இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றது. இடையே பலமுறை நோயாளி சாக்ஸபோன் வாசித்தார். அறுவை சிகிச்சை முடிக்க சுமார் ஒன்பது மணிநேரம் ஆனது", என்று டாக்டர் ப்ரோக்னா கூறினார்.



என்ன வாசித்தார்?


அவர் தனது சாக்ஸோபோன் வாசிப்பை இத்தாலிய தேசிய கீதத்துடன் தொடங்கினார், பின்னர் 1970 ஆம் ஆண்டு "லவ் ஸ்டோரி" திரைப்படத்தின் தீம் பாடலை வாசித்தார் என்று மருத்துவர் கூறினார். இத்தாலிய தேசிய கீதமும் 1970 ஆம் ஆண்டு வெளியான 'லவ் ஸ்டோரி' திரைப்படத்தின் தீம் பாடலும் ஒன்பது மணி நேர அறுவை சிகிச்சை முழுவதும் ஒலித்தன.


தொடர்புடைய செய்திகள்: watch video: ”பறக்க பறக்க துடிக்குதே..!“ தன்னை மறந்து நடனமாடிய Zomato ஊழியரின் வைரல் வீடியோ !


விழித்துக்கொண்டு செய்யவேண்டிய அறுவை சிகிச்சை


மேலும் டாக்டர் ப்ரோக்னா, "நோயாளியின் வாழ்க்கைத் தரத்தைப் பாதுகாக்கும் அதே வேளையில் மூளையின் குறிப்பிட்ட பகுதிகளில் அமைந்துள்ள கேவர்னோமாக்கள் போன்ற மூளைக் கட்டி அல்லது வாஸ்குலர் குறைபாடுகளை அகற்றுவதே விழித்திருக்கும் அறுவை சிகிச்சையின் குறிக்கோள். அவர் விழித்திருந்தால் தான் அதனை செய்யமுடியும். ஆனால் நோயாளி அறுவை சிகிச்சையின் போது பயத்தை விட அமைதியைதான் உணர்ந்தார்", என்றார்.



மருத்துவத்துறையின் வளர்ச்சி


அறுவை சிகிச்சையின் போது நோயாளி இசைக்கருவியை வாசித்ததால் நோயாளியின் மூளையை மிகவும் எளிதாக எங்களால் புரிந்துகொள்ள முடிந்தது. நோயாளி தொடர்ந்து இசையை இசைக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை மருத்துவ ஊழியர்களிடம் தெரிவித்தார். நோயாளியின் சாக்ஸபோன் வாசிப்பதன் மூலம் அறுவை சிகிச்சை நிபுணர் பெரிதும் பயனடைந்தார்.


ஏனெனில் இது பல்வேறு மூளை செயல்முறைகளை மருத்துவர்களுக்கு எளிதாக்கி காண்பித்தது, மூளை வரைபடத்தை புரிந்துகொள்ள எளிதாக இருந்தது என்று கூறுகிறார். மேலும் இந்த மருத்துவத் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ப்ரோக்னா தனது திருப்தியை வெளிப்படுத்தினார். நோயாளி தனது அறுவை சிகிச்சை முடிந்து தனது வழக்கமான நடவடிக்கைகளைத் தொடர்ந்து செய்ய முடிந்ததில் மகிழ்ச்சி என தெரிவித்தார்.