பாகிஸ்தான் முல்தான் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் 200க்கும் மேற்பட்ட சடலங்கள் அழுகிய நிலையில் கண்டறியப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மாடியில் கொத்துக்கொத்தாய் உடல்கள்


சமூக ஊடகங்களில் பரவும் தகவல்களின்படி, முல்தானில் உள்ள நிஷ்டார் மருத்துவமனையின் பிணவறையின் மாடியில், நூற்றுக்கணக்கான மனித உடல்கள் கண்டறியப்பட்டுள்ளன.


பாகிஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம் பற்றி விசாரிக்க அந்நாட்டு அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக ஜியோ நியூஸ் எனும் பாகிஸ்தானிய தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.


நிஷ்டார் மருத்துவமனையின் பிணவறையில் டஜன் கணக்கான உடல்கள் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கப்படும் நிலையில், மறுபுறம் சமூக ஊடகங்களில் நூற்றுக்கணக்கான மனித உடல் உறுப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


முதலமைச்சர் ஆலோசகர் தகவல்


உடல்களின் எண்ணிக்கை குறித்து அந்நாட்டு அரசாங்க அதிகாரிகள் இதுவரை உறுதியோ மறுப்போ தெரிவிக்காத நிலையில், முன்னதாக பாகிஸ்தான் பஞ்சாப்பின் முதலமைச்சரின் ஆலோசகர் தாரிக் ஜமான் குஜ்ஜார் இத்தகவலை உறுதி செய்யும் வகையில் பேசியுள்ளார்.






ஜியோ செய்திகள் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, நிஷ்டார் மருத்துவமனையில் உள்ள பிணவறையின் அழுகிய உடல்களைப் பற்றி பெயர் தெரிவிக்க விரும்பாத மருத்துவமனை ஊழியர் ஒருவர் தனக்குத் தகவல் அளித்ததாகத்  தெரிவித்ததாக தாரிக் ஜமான் குஜ்ஜார் தெரிவித்துள்ளார்.


"நான் நிஷ்தார் மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​ஒரு நபர் என்னை அணுகி, ”நீங்கள் ஒரு நல்ல செயலைச் செய்ய விரும்பினால் பிணவறைக்குச் சென்று பாருங்கள்” என தெரிவித்தார்.


நான் அங்கு சென்றபோது பிணவறையின் கதவுகளைத் திறக்க ஊழியர்கள் தயாராக இல்லை. எஃப்ஐஆர் பதிவு செய்யப் போவதாக எச்சரிக்கை விடுத்த பிறகு சவக்கிடங்கின் கூரையை இறுதியாகத் திறந்தனர். அங்கு ​​​​குறைந்தது ஆண்கள் பெண்கள் என 200 சிதைந்த உடல்கள் இருந்தன.


 






மருத்துவமனை தரப்பிடம் இது குறித்து கேட்டபோது மருத்துவ மாணவர்களால் ஆய்வுக்காக உடல்கள் பயன்படுத்தப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர். நான் உடல்கள் விற்கப்படுகின்றனவா என பிணவறை அலுவலர்களிடம் கேள்வி எழுப்பினேன். 


விசாரணைக் குழு அமைப்பு


மருத்துவர்களிடம் இது குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. சடலங்களை புழுக்கள் அரித்துக் கொண்டிருந்தன. எங்கள் கணக்கெடுப்பின்படி 35 உடல்கள் அங்கு இருந்தன.


மருத்துவக் கல்வி நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்ட உடல்கள் முறையான அடக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும், ஆனால் அவை இவ்வாறு வீசப்பட்டுள்ளன" என்று குஜ்ஜர் தெரிவித்துள்ளார்.


இதனிடையே பஞ்சாப் மாகாண முதலமைச்சர் பர்வேஸ் இலாஹி இச்சம்பவம் குறித்து பஞ்சாப் சிறப்பு சுகாதார மற்றும் மருத்துவக் கல்வி செயலாளரிடம் அறிக்கை கேட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.


இந்த உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டு, வீடியோக்கள் மற்றும் படங்கள் இணையத்தில் தொடர்ந்து பகிரப்பட்டு வரும் நிலையில், இச்சம்பவம் குறித்து விசாரிக்க 6 பேர் கொண்ட குழுவை பஞ்சாப் அரசு அமைத்துள்ளது.


மேலும், நிஷ்டார் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த மூன்று பேர் கொண்ட குழுவையும் அமைத்துள்ளார்.