மெக்சிகோ நகரில் பழங்கால நம்பிக்கைப்படி இயற்கையின் அருளைப் பெற வேண்டி மேயர் ஒருவர் முதலைக் குட்டி ஒன்றை இளவரசியாக பாவித்து திருமணம் செய்து கொண்டது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மெக்சிகோவின் டெஹுவான்டெபெக் இஸ்த்மஸில் (Tehuantepec isthmus )உள்ள பழங்குடி மக்களின் நகரமான சான் பெட்ரோ ஹுவாமெலுலாவின் (San Pedro Huamelula )மேயரான விக்டர் ஹ்யூகோ சோசா, முதலையை திருமணம் செய்தார். முதலையை இயற்கையின் பிரதிநிதியாக அவர்கள் கருதுகின்றனர். முதலையுடன் மனிதனுக்கு திருமணம் செய்து வைத்தால், இயற்கை வளங்கள் பெருகும் என பல நூறு ஆண்டுகளாக நம்பிக்கை கொண்டுள்ளனர்.
இந்த நம்பிக்கையின் பேரில் இந்த திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது ஏற்படும் அசம்பாவிதத்தை தவிர்க்க முதலையின் வாய் கட்டப்பட்டு இருந்தது. முதலைக்கு வெள்ளை நிற ஆடை உள்ளிட்டவை அணிவிக்கப்பட்டிருந்தது. திருமணம் முடிந்த பின் மேயர் பாரம்பரிய இசைக்கு நடனமாடினார். 7 வயது முதலையை, இளவரசியாகப் பாவித்து திருமணம் செய்து கொண்ட மேயர், இந்த நிகழ்வில் மணப்பெண் போல் வேடமிட்ட முதலைக்கு முத்தமிட்டு தனது அன்பைப் பரிமாறிக்கொண்டார்.
மேலும், இந்த சடங்கின் மூலம் மனிதர்கள் கடவுளுடன் இணைக்கப்படுவதாக, ஒக்சாகா கிராம மக்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். இந்த பாரம்பரியம் பல தலைமுறைகளாகத் தொடர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய டிஜிட்டல் உலகிலும் அதுவும் மெக்சிகன் நகரில் இது போன்ற சாம்பவம் பாரம்பரியம் என்ற பெயரிலும், நம்பிக்கை என்ற பெயரிலும் நடைபெறுகிறதா என நெட்டிசன்கள் ஆச்சர்யத்துடன் கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.
முன்னதாக திருச்சி மாவட்டத்தில் மழை வேண்டி அப்பகுதி மக்கள் கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த நிகழ்வு நடைபெற்றது. மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி ஆகிய ஒன்றிய பகுதிகளில் சில வருடங்களாக மழை பெய்யாததால் சிறமத்திற்குள்ளான விவசாயிகள் கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்தால் மழை பெய்யும் என நம்பினர்.
இதனால், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே உள்ள வத்தமணியாரம்பட்டியில் கழுதைகளுக்கு திருமணம் செய்து வைக்க கிராம மக்கள் முடிவு செய்தனர். அதன்படி,ஒரு ஆண், பெண் கழுதையை மணமக்கள் போல் அலங்கரித்து கோவில் முன் நிறுத்தி மழை வேண்டி சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதனையடுத்து பெண் கழுதையின் கழுத்தில் தாலி கயிறு கட்டப்பட்டு திருமணம் நடைபெற்றது. அப்போது அங்கிருந்த கிராம மக்கள் அட்சதை தூவி கழுதைகளை வணங்கினர். பின்னர் இந்த திருமண நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் அறுசுவை விருந்து வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க