France Riots : பிரான்ஸ்  நாட்டில் 17 வயது சிறுவன் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டது அங்கு பெரும் கலவரத்தை கிளப்பியுள்ளது. சுமார் 5 நாட்களாக இந்த போராட்டம் தொடர்ந்து வருவதால் பதற்றம் நிலவுகிறது.


மேயர் வீடு சேதம்


பிரான்ஸ் நாட்டில் ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் போக்குவரத்து காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இதனால் கடந்த 5 நாட்களாக பிரான்ஸ் முழுவதும் அந்நாட்டு அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போராட்டத்தில் பல இடங்களில் வன்முறை வெடித்துள்ளது. பள்ளிக்கூடங்கள், காவல் நிலையங்கள், போலீஸ் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.


இந்நிலையில், போராட்டக்காரர்கள் சிலர் பாரிஸ் மேயர்  வின்சென்ட் ஜீன்ப்ரூன்  வீட்டிற்குள் காரை அதிகவேகமாக ஓட்டிச் சென்று மோதியுள்ளனர். இதனால் வீட்டின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது. மேலும், மேயர் வின்கென்ட்டின் மனைவி மற்றும் ஒரு மகன் காயமடைந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதன் பின், காருக்கு தீவைத்து விட்டு சென்றுள்ளனர். 


"இது கோழைத்தனத்தில் வெளிபாடு”


இதுகுறித்து மேயர் வின்சென்ட் ஜீன்ப்ரூன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, "எனது குடும்பம் தூங்கிக் கொண்டிருக்கும்போது போராட்டக்காரர்கள் உள்ளே நுழைந்து தீ வைக்க முயன்றுள்ளனர். மேலும், தன்னுடைய காரில் தீ வைத்து எரித்துள்ளனர். இது ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதில் எனது மனைவி மற்றும் குழந்தைகளில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.  இது கோழைத்தனத்தில் வெளிபாடு" என்று பதிவிட்டிருந்தார்.


பலத்த பாதுகாப்பு


இதனை அடுத்து, பிரான்ஸ் நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த வன்முறையால் 200க்கும்  மேற்பட்ட வணிக வளாகங்கள், சுமார் 75க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளன, 250 வங்கிகள் சூறையாடப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த 24 மணிநேரத்தில்  மட்டும் சுமார் 100க்கும் மேற்பட்டோர் போலீசார் கைது செய்துள்ளனர்.  எனவே இதுவரை சுமார் 719 பேரை போலீசார் கைது செய்தும், 1,300 பேரை தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 


இதற்கிடையில் பாரிஸ் நகரைச் சுற்றியுள்ள லியோன், பாவ், டௌலவ்ஸ், லில்லே உள்ளிட்ட பகுதிகள் முழுவதும் சுமார் 45 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வன்முறை தீவிரமடைந்ததை அடுத்து, இம்மானுவேல் மக்ரோன், அரசு முறை பயணமாக ஜெர்மனி நாட்டிற்கு செல்வது ரத்து செய்யப்பட்டது. 


காரணம்


வடக்கு ஆப்பிரிக்க நாட்டை பூர்வீகமாக கொண்ட நஹெல் என்ற 17 வயது சிறுவன், பிரான்ஸ் நாட்டின் பாரீசின் புறநகரப் பகுதியான நான்டெர்ரேவில் காரில் சென்றுள்ளார். அப்போது, சிறுவனின் காரை காவல்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். அவர்கள், விசாரித்து கொண்டிருந்ததாகவும் திடீரென சிறுவனை துப்பாக்கியால் சுட்டதில் அவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.


அந்த வழியாக சென்று கொண்டிருந்தவர் இதை வீடியோவாக எடுத்துள்ளார். அதில், காரின் ஓட்டுநரின் பக்கத்தில் இரண்டு அதிகாரிகள் நின்று கொண்டிருந்ததும், எந்த அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளாத போதிலும், அதில் ஒரு அதிகாரி டிரைவரை நோக்கி துப்பாக்கியை காட்டுவது போலும் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம்  அந்நாட்டில் பெரும் பதற்றத்தை கிளப்பியுள்ளது.