தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார், மகாராஷ்டிரா துணை முதலமைச்சராக இன்று பதிவியேற்றார். அவருடன், அக்கட்சியின் தேசிய தலைவரான சரத் பவாருக்கு நெருக்கமானவராக கருதப்படும் திலீப் வால்ஸ்-பாட்டீல், மூத்த தலைவர்கள் சாகன் புஜ்பால், ஹசன் முஷ்ரிப்  உள்ளிட்டோர் மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகையில் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர்.


மகாராஷ்டிர அரசியலில் புதிய ட்விஸ்ட்:


தற்போது, மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகிறது. இந்த சூழலில், எதிர்க்கட்சியாக உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அஜித் பவார், கட்சியை உடைத்து பாஜக - சிவசேனா கூட்டணியில் இணைந்துள்ளார்.


சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்து வந்த அஜித் பவாருக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 30 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே, அஜித் பவார் உள்பட அக்கட்சியை சேர்ந்த 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். சட்டப்பேரவையில் அக்கட்சிக்கு 53 எம்எல்ஏக்கள் உள்ளனர்.


ஏற்கனவே, மகாராஷ்டிராவில் துணை முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் பதவி வகித்து வரும் நிலையில், தற்போது இரண்டாவது துணை முதலமைச்சராகியுள்ளார் அஜித் பவார். 


இதுகுறித்து மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், "இப்போது 1 முதலமைச்சர் மற்றும் 2 துணை முதலமைச்சர்கள் உள்ளனர். இரட்டை என்ஜின் அரசாங்கம் இப்போது மூன்று என்ஜின் அரசாங்கமாக மாறிவிட்டது. மகாராஷ்டிராவின் வளர்ச்சிக்காக, அஜித் பவாரையும் அவரது தலைவர்களையும் வரவேற்கிறேன். அஜித் பவாரின் அனுபவம் உதவும்" என்றார்.


நடந்தது என்ன..?


இன்று முன்னதாக, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அடங்கிய குழு, அஜித் பவாரை மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர். இந்த கூட்டத்தில், கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே மற்றும் மூத்த தலைவர் சாகன் புஜ்பால் ஆகியோர் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், இந்த கூட்டத்தில் கட்சியின் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல் கலந்து கொள்ளவில்லை.


இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சரத் பவார், "இந்தக் கூட்டத்திற்கு ஏன் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று எனக்கு சரியாகத் தெரியவில்லை, ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் அவருக்கு (அஜித் பவாருக்கு) எம்எல்ஏக்கள் கூட்டத்தை அழைக்க உரிமை உள்ளது. அவர் அதை வழக்கமாக செய்கிறார். இந்தச் சந்திப்பைப் பற்றிய விவரங்கள் என்னிடம் இல்லை" என்றார்.


சமீபத்தில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து சரத் பவார் விலகினார். ஆனால், மூத்த தலைவர்கள், தொண்டர்களின் கோரிக்கையை தொடர்ந்து அந்த முடிவை அவர் திரும்ப பெற்றார். இதை தொடர்ந்து, கட்சியில் அதிரடி மாற்றங்கள் நடந்தன. தனது மகள் சுப்ரியா சூலேவுக்கும் கட்சியின் மூத்த தலைவர் பிரபுல் பட்டேலுக்கும் செயல் தலைவர் பதவி வழங்கினார் சரத் பவார்.


தனக்கு மாநில தலைவர் பதவி வழங்கப்படும் என அஜித் பவார் எதிர்பார்த்திருந்த நிலையில், அவருக்கு எந்த விதமான கட்சி பதவியும் வழங்கப்படவில்லை. இதனால், அவர் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.