Italy PM: டீப் பேக் விவகாரம் சமீப காலமாகவே பெரும் பரபரப்பை கிளப்பி வருகிறது. பெண்கள்தான், இதனால் அதிகம் பாதிக்கப்புக்கு உள்ளாகின்றனர். குறிப்பாக, பிரபலமான பெண்களின் புகைப்படங்களை எடிட் செய்து ஆபாசமான புகைப்படங்களாக சமூக வலைதளங்களில் பரப்புவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


பரபரப்பை கிளப்பும் டீப் பேக் வீடியோக்கள்:


இந்தியாவில் மட்டும் இன்றி பல நாடுகளில் இந்த பிரச்னை அதிர்வலைகளை கிளப்பி வருகிறது. இந்த நிலையில், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி இருப்பது போன்ற போலி ஆபாச வீடியோ உருவாக்கப்பட்டு, அது சமூக வலைதளங்களில் பரவி வந்தது.


ஒரு நாட்டின் பிரதமரையே தவறாக சித்தரித்து போலியான ஆபாச வீடியோ பரப்பப்பட்டது உலக தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதில், தொடர்புடையவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் வலியுறுத்தப்பட்டு வந்தது.


இந்த நிலையில், இத்தாலி பிரதமரின் போலி ஆபாச வீடியோவை உருவாக்கியது இரண்டு பேர் என்பது விசாரணையில் தெரிய வந்தது. அவர்கள் இருவரும் தந்தை, மகன் என்பதும் தெரிய வந்துள்ளது. வேறொருவரின் வீடியோவில் இத்தாலி பிரதமரின் முகத்தை எடிட் செய்து இணையத்தில் வெளியிட்டது அம்பலமாகியுள்ளது.


இத்தாலி பிரதமரின் போலி ஆபாச வீடியோ வைரல்: 


40 வயதுடைய நபர் மற்றும் அவரது 73 வயது தந்தை மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறை தரப்பு பேசுகையில், "போலி வீடியோவை பதிவேற்றப் பயன்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன் மூலம் அவர்களை கண்டுபிடிக்க முடிந்தது. அந்த டீப் பேக் வீடியோ, அவர் நாட்டின் பிரதமராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, 2022 ஆம் ஆண்டுக்கு முந்தையது.


குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக இத்தாலியில் சில கிரிமினல் அவதூறு வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்கு சிறைத்தண்டனை கிடைக்கும். வரும் ஜூலை 2 ஆம் தேதி, நீதிமன்றத்தில் மெலோனி சாட்சியம் அளிக்க உள்ளார்.


மெலோனியின் போலி ஆபாச வீடியோக்கள் அமெரிக்காவில் உள்ள ஒரு ஆபாச இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. அதை, சில மாதங்களிலேயே லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர்" என தெரிவித்துள்ளது.


இந்த விவகாரத்தில் மான நஷ்ட ஈடாக 1,09,345 டாலர்களை (90,57,300 ரூபாய்)  தர வேண்டும் என நீதிமன்றத்தில் கோரியுள்ளார்  மெலோனி. இதுகுறித்து மெலோனியின் வழக்கறிஞர் மரியா கியுலியா மரோங்கியு கூறுகையில், "அதிகார துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள்,  இம்மாதிரியான விவகாரத்தில் குற்றச்சாட்டுகளை சுமத்த பயப்படக் கூடாது என்பதற்காகவே இழப்பீட்டுத் தொகையை கேட்டுள்ளார். 


கிடைக்கவிருக்கும் முழுத் தொகையையும் ஆண்களாக் தொடுக்கப்படும் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக வழங்க உள்ளார் மெலோனி" என்றார்.


இதையும் படிக்க: Watch Video: 3ஆவது மாடியில் தந்தையின் கையில் இருந்து கீழே தவறி விழுந்த குழந்தை.. ஷாப்பிங் மாலில் அதிர்ச்சி