அடுத்த மாதம், 19ஆம் தேதி, நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடங்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு ஒரு சில நாள்களுக்கு முன்புதான், சிஏஏ எனப்படும் குடியரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது.

Continues below advertisement

குறிப்பாக, இஸ்லாமியர்களுக்கு எதிராக கருதப்படும் சிஏஏ திருத்த சட்டத்தை அவர்களின் புனித மாதமாக கருதப்படும் ரமலான் மாதத்தில் இந்தியா முழுவதும் அமல்படுத்தியது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. பெரும் எதிர்ப்புக்கு மத்தியில், கடந்த 11ஆம் தேதி, குடியரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டது.

இஸ்லாமியர்களுக்கு எதிரானதா சி.ஏ.ஏ?

ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் மத ரீதியாக அடக்குமுறைக்கு உள்ளான  இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், பார்சி இனத்தவர், பௌத்தர்கள், சமணர்கள் ஆகியோருக்கு குடியுரிமை வழங்க சி.ஏ.ஏ எனப்படும் குடியுரிமை திருத்த சட்டம் வழிவகுக்கிறது.

Continues below advertisement

எந்த வித ஆவணங்களும் இன்றி அவர்களுக்கு குடியுரிமை வழங்க சி.ஏ.ஏ சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டாலும், அரசிதழில் வெளியிடப்பட்ட விதிகளின்படி குடியுரிமை பெற ஆறு வகை ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது.

இந்தியாவில் குறைந்தது 6 ஆண்டுகள் வசித்தாலே அவர்களுக்கு இந்த சட்டத்தின் கீழ் இந்தியக் குடியுரிமை வழங்கப்படும். ஆனால், 2014ஆம் ஆண்டு, டிசம்பர் 31ஆம் தேதிக்குள் இந்தியாவுக்குள் குடியேறி இருக்க வேண்டும்.

பரபரப்பை கிளப்பிய அமெரிக்கா:

அனைவரையும்  சமமாக கருதும் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்களை வஞ்சிக்கும் விதமாக சி.ஏ.ஏ சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றன. இந்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்க மாநிலங்கள் அறிவித்திருக்கின்றன.

சர்வதேச அளவிலும் இதற்கு எதிராக விமர்சனம் எழுந்து வருகிறது. குறிப்பாக, சி.ஏ.ஏ திருத்த சட்டம் குறித்து அமெரிக்கா ஏற்கனவே கவலை தெரிவித்திருந்தது. அதற்கு இந்தியாவும் பதிலடி அளித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக, அமெரிக்கா இதுகுறித்து மீண்டும் விமர்சனம் செய்துள்ளது.

சட்ட திருத்தம் அமல்படுத்தப்பட்ட காலக்கட்டம் குறித்து கேள்வி எழுப்பிய அமெரிக்க செனட் வெளியுறவு கமிட்டி தலைவர் பென் கார்டின், "சர்ச்சைக்குரிய சி.ஏ.ஏ சட்டத்தை அமல்படுத்த இந்திய அரசு முடிவு செய்துள்ளது. அதனால் இந்திய இஸ்லாமிய சமூகத்திற்கு ஏற்படக்கூடிய விளைவுகளால் நமக்கு மிகவும் கவலை அளிக்கிறது.

குறிப்பாக, புனித மாதமான ரம்ஜானின்போது இந்த சட்ட திருத்தத்தை அமல்படுத்த முற்படுவது நிலைமையை மேலும் மோசமாக்குகிறது. இந்திய, அமெரிக்க உறவு ஆழமாகி வரும் நிலையில், மதத்தின் அடிப்படையில் இல்லாமல் அனைத்து தரப்பினரின் மனித உரிமைகளையும் பாதுகாப்பதில் ஒத்துழைப்பு நல்குவது முக்கியமானதாக கருதப்படுகிறது" என்றார்.