பாகிஸ்தானில் ஜூன் 25 ஆம் தேதி முதல் பெய்யும் மழையின் காரணமாக இதுவரை 86 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 151 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட பருவமழை ஒவ்வொரு ஆண்டும் தெற்காசியாவின் ஆண்டு மழையில் 70-80% கொண்டு வருகிறது. சுமார் 2 பில்லியன் மக்கள் வசிக்கும் பகுதியில் மில்லியன் கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கும் உணவுப் பாதுகாப்பிற்கும் இது இன்றியமையாதது. ஆனால் அதிகப்படியான மழை, நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தைத் தூண்டுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கனமழை மற்றும் வெள்ளத்தால் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 9 பேர் காயமடைந்துள்ளனர்.


இதுவரை சுமார் 86 பேர் உயிரிழந்ததாக தேசிய பேரிடர் மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். இவர்களில் 16 பேர் பெண்கள், 37 பேர் குழந்தைகள் ஆவர். கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 100 க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமாகியுள்ளது. மேலும் பஞ்சாபில் அதிகபட்சமாக 52 பேர் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலான இறப்புகள் கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் ஏற்பட்டவை, முக்கியமாக மின்சாரம் மற்றும் கட்டிட இடிபாடுகளால் ஏற்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. 


வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில், ஷாங்லா மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட நிலச்சரிவில் இருந்து எட்டு குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டதாக அவசர சேவை மீட்பு 1122 இன் செய்தித் தொடர்பாளர் பிலால் அஹ்மத் ஃபைசி தெரிவித்தார். அதுமட்டுமின்றி வரும் நாட்களில் நாடு முழுவதும் கனமழை பெய்யும் என்றும், பஞ்சாபின் மிகப்பெரிய நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


கடந்த ஆண்டு, பாகிஸ்தானின் மூன்றில் ஒரு பகுதி வெள்ளத்தில் பாதிக்கப்பட்டது, சுமார் 2 மில்லியன் வீடுகள் சேதமடைந்தது. மேலும் 1,700 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். பாகிஸ்தானில் இந்த ஆண்டு, 72 சதவீத வெள்ளப்பெருக்கு ஏற்படும் என கடந்த ஏப்ரலில் தேசிய பேரிடர் மேலாண் கழகம் கணிப்பு வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.


உலகின் ஐந்தாவது பெரிய மக்கள்தொகையைக் கொண்ட பாகிஸ்தான், உலகளாவிய பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தில் 1% க்கும் குறைவாகவே உள்ளது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், உலகளாவிய வெப்பமயமாதலால் ஏற்படும் தீவிர வானிலை மாற்றங்களுக்கு, பாகிஸ்தான் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ஒன்றாக உள்ளது.

SC on Manipur: “நாங்க என்ன செய்ய முடியும்; அது மத்திய மாநில அரசுகளின் பணி” - மணிப்பூர் குறித்து உச்சநீதிமன்றம்


Boat Missing: படகில் சென்ற 300 பேர்...நடுக்கடலில் மர்மம்...ஸ்பெயினில் அதிர்ச்சி சம்பவம்..


Pope Francis - New Cardinals: பல்வேறு நாடுகளை சேர்ந்த 21 பேர் புதிய கார்டினல்களாக நியமனம்.. போப் ஆண்டவர் அறிவிப்பு..