சட்டம்-ஒழுங்கை நாங்கள் கையில் எடுக்க முடியாது. பாதுகாப்பை உறுதி செய்வது மத்திய, மாநில அரசுகளின் வேலை என்று மணிப்பூர் வழக்கில் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.


வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில்,  மெய்தி இன மக்களுக்கும், குக்கி பழங்குடியின மக்களுக்கும் இடையே கடந்த மே மாதம் பிரச்னை தொடங்கியது.  அதன் பின்னர் கலவரமாக மாறிய இந்த பிரச்னையால் இதுவரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் என்று ஊடகங்களில் செய்தி வெளியாகிய வண்ணம் உள்ளது.  இதற்கிடையே, 'குகி' பழங்குடியின மக்களுக்கு ராணுவ பாதுகாப்பு அளிக்கக்கோரி, 'மணிப்பூர் பழங்குடி கூட்டமைப்பு' என்ற தொண்டு நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  அதேபோல் மணிப்பூர் ஐகோர்ட்டு பார் அசோசியேசன் உள்பட பலதரப்பில் இருந்தும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
 


இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் சந்திரசூட் மற்றும் பி.எஸ். நரசிம்மா ஆகியோர் கொண்ட அமர்வு பாதிக்கப்பட்ட மக்களுக்காக எடுக்கப்பட்ட மறுவாழ்வு நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. அறிக்கையை பார்த்த நீதிபதிகள் கலவரத்தை கட்டுப்படுத்த என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பது குறித்த அறிக்கையை இன்று அதாவது ஜூலை 11இல் தாக்கல் செய்ய உத்தரவிட்டது. 


மணிப்பூர் பழங்குடியின கூட்டமைப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கான்வால்வ்ஸ், பலி எண்ணிக்கை 110 ஆக உயர்ந்து விட்டதாகவும், வன்முறை நீடிப்பதாகவும் கூறினார். அதற்கு நீதிபதிகள், “நீங்கள் கூறுவதற்காக சட்டம்-ஒழுங்கு பராமரிப்பை எங்கள் கட்டுக்குள் நாங்கள் கொண்டுவரமுடியாது. மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது மத்திய, மாநில அரசுகளின் வேலை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள்தான் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பாதுகாப்பை உறுதி செய்யுமாறு நாங்கள் உத்தரவுதான் போட முடியும். அதற்குத்தான் உங்கள் உதவியை கேட்கிறோம்” என கூறினர். 


இணையசேவை


அதேபோல், மே 3 அன்று மணிப்பூரில் உள்ள குக்கி பழங்குடியினருக்கு இடையேயான மோதல்களைத் தொடர்ந்து, மே 3 அன்று அரசாங்கம் இணைய முடக்கத்தை விதித்தது. தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்கவும், வன்முறையைத் தடுக்கவும் இந்த இணையதளத் தடை அமல்படுத்தப்பட்டதால், அதன் செயல்திறன் கேள்விக்குறியாகியுள்ளது. இருப்பினும், துப்பாக்கிச் சூடு மற்றும் கொலை சம்பவங்கள் இரண்டு மாதங்களுக்கும் மேலாக நீடிக்கின்றன. இந்த நிலையில் மணிப்பூரில் நடந்த இன வன்முறைக்கு பதிலளிக்கும் வகையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் குத்தகைக்கு விடப்பட்ட லைன்கள் மற்றும் ஃபைபர் ஆப்டிக் இணைப்புகளைக் கொண்ட தனிநபர்களுக்கான இணைய அணுகலை மீட்டெடுக்குமாறு மணிப்பூர் உயர்நீதிமன்றம் என் பிரேன் சிங் தலைமையிலான பாஜக அரசுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. 


பல கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, குறிப்பிட்ட இடங்களில் வரையறுக்கப்பட்ட இணைய சேவைகளை அனுமதிக்குமாறு ஜூன் 20 அன்று உயர் நீதிமன்றம் மாநில அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது. மணிப்பூரில் இணைய முடக்கத்தால் பில் செலுத்துதல், பள்ளி மற்றும் கல்லூரி சேர்க்கைகள், தேர்வுகள், வழக்கமான ஷாப்பிங் மற்றும் தனியார் நிறுவனங்களின் செயல்பாடுகள் ஆகியவற்றை பாதித்துள்ளது. இதனால் "ஒயிட் லிஸ்ட் "செய்யப்பட்ட தொலைபேசி எண்களுக்கு இணைய இணைப்பை மீட்டெடுப்பதற்கான சாத்தியக்கூறுகளை மதிப்பீடு செய்யுமாறு மாநில அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவை எதிர்த்து அம்மாநில அரசு உச்ச நீதிமன்றத்திற்கு சென்றுள்ளது. 


இந்த வழக்கும் இன்று விசாரணை செய்யப்படுகிறது.