கடந்த அக்டோபர் 7ஆம் தேதி, இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியது. ஹமாஸ் அமைப்பின் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்துகிறோம் என்ற பெயரில் இஸ்ரேல் பாதுகாப்பு படைகள், வடக்கு காசாவை நிலைகுலைய வைத்தது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 17,997 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். 

Continues below advertisement

அதிர்வலைகளை கிளப்பி வரும் இஸ்ரேல் போர்:

இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் குழந்தைகளும் பெண்களுமே ஆவர். சர்வதேச அழுத்தம் காரணமாக தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. கடந்த நவம்பர் 24ஆம் தேதி தொடங்கிய தற்காலிக போர் நிறுத்தம் இரண்டு முறை நீட்டிக்கப்பட்டு, ஏழு நாள்கள் தொடர்ந்தது. 

தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, இரு தரப்பிலும் பிடிக்கப்பட்ட கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் பிடித்த வைத்த பணயக்கைதிகளும் இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீன கைதிகளும் விடுவிக்கப்பட்டனர். போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, தெற்கு காசா மீது தனது கவனத்தை திருப்பியுள்ளது இஸ்ரேல் ராணுவம். அங்கு தாக்குதல் நடத்தி வருகிறது.

Continues below advertisement

இந்த நிலையில், ஆயுதங்களை போட்டுவிட்டு சரண் அடைந்துவிடுமாறு ஹமாஸ் அமைப்பினருக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

"உயிரை விட்டுவிடாதீர்கள்"

இதுகுறித்து இஸரேல் பிரதமர் வெளியிட்ட அறிக்கையில், "போர் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், ஹமாஸ் அமைப்பின் முடிவு  ஆரம்பமாகிறது. ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு நான் ஒன்று சொல்லி கொள்கிறேன். எல்லாம் முடிந்துவிட்டது. யஹ்யா சின்வாருக்காக (ஹமாஸ் அமைப்பின் தலைவர்) உயிரை விட்டு விடாதீர்கள். இப்போதே சரணடையுங்கள். கடந்த சில நாட்களில், 12க்கும் மேற்பட்ட ஹமாஸ் பயங்கரவாதிகள் நமது படைகளிடம் சரணடைந்துள்ளனர்" என்றார்.

ஹமாஸ் அமைப்பின் பயங்கரவாதிகள் சரண் அடைந்துவிட்டதாக இஸ்ரேல் தொடர்ந்து கூறி வரும் நிலையில், அதற்கான ஆதாரத்தை அந்நாட்டு ராணுவம் இன்னும் வெளியிடவில்லை. ஹமாஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் சரண் அடைந்துவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டு வரும் தகவலை ஹமாஸ் அமைப்பு மறுத்து வருகிறது.

காசா மீதான கட்டுப்பாட்டை ஹமாஸ் இழந்துவிட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் கேலன்ட் ஒரு மாதத்திற்கு முன்பு  தெரிவித்தார்.

இச்சூழலில், ஹமாஸ் - இஸ்ரேலுக்கு இடையேயான போரில் ஹமாஸ் அமைப்பினருடன் கைகோர்க்க தயாராக இருப்பதாக ஹெஸ்புல்லா இயக்கம் சமீபத்தில் தெரிவித்திருந்தது. இதற்கு, இஸ்ரேல் கடுமையாக எதிர்வினையாற்றியிருந்தது. இஸ்ரேலுக்கு எதிராக போர் தொடங்கினால், லெபனான் தலைநகர் பெய்ரூட்டிலும் தெற்கு லெபனானிலும் பேரழிவை ஏற்படுத்திவிடுவோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்திருந்தார்.

இதையும் படிக்க: Putin - PM Modi : "பிரதமர் மோடிய பார்த்தா ஆச்சரியமா இருக்கு" புகழ்ந்து தள்ளிய ரஷிய அதிபர் புதின்