இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கடந்த 2 மாதங்களாக போர் நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதலில் இஸ்ரேலில் 1,147 பேர் உயிரிழந்தனர். மேலும் இஸ்ரேலில் இருந்து 247 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் தரப்பில் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. போரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசாவில் சுமார் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ளனர். குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அத்தியாவசிய பொருட்கள் கூட இன்றி தவித்து வருகின்றனர். இருப்பினும் போர் நின்ற பாடு இல்லை. ஹமாஸ் குழுவினரை அழிக்கும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.


இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் 6 நாள் போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்தது. அதன்படி 6 நாட்கள் போர் நிறுத்தத்தின் பயணாக ஹமாஸ் தரப்பில் 105 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இதில் 81 பேர் இஸ்ரேலியர்கள், 23 பேர் தாய்லாந்தை சேர்ந்தவர் மற்றும் ஒருவர் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர். அதே சமயம் மேலும் 137 பேர் ஹமாஸ் தரப்பினரிடம் பணயக் கைதிகளாக உள்ளனர். இதனிடையே தற்காலிக போர் நிறுத்தம் டிசம்பர் 1 ஆம் தேதி காலை 7 மணியுடன் நிறைவடைந்தது. போர் நிறுத்தம் தொடர்வதில் இஸ்ரேலுக்கு உடன்பாடி எட்டவில்லை என்பதால் மீண்டும் இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது.


இஸ்ரேல் ஹமால் இடையே 2 மாதங்களாக போர் நடைபெற்று வரும் நிலையில் அதனை முடிவுக்கு கொண்டு வர உலக நாடுகள் வலியுறுத்தி வருகிறது. இதனிடையே நேற்று முந்தினம் ஐ.நா சபையில் போர் முடிவுக்கு கொண்டு வரும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 13 நாடுகள் வாக்களித்தது.  ஆனால் அமெரிக்கா இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நிராகரித்தது.






இதனை தொடர்ந்து ஐ.நா சபையில் அமெரிக்கா எடுத்த நிலைப்பாட்டை வரவேற்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். மேலும் ஹமாஸ் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த உள்ளதாகவும், ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை போர் தொடரும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.






மேலும் ஹமாஸ் குழுவினர் மக்களை தாக்கி இஸ்ரேல் வழங்கும் நிவாரணப் பொருட்களை திருடிச் செல்வதாகவும் இஸ்ரேல் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.