இந்திய, ரஷிய நாடுகளுக்கிடையே பல காலமாக நெருக்கமான உறவு இருந்து வருகிறது. ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி தொடங்கி மோடி காலம் வரையில், இந்தியாவின் நட்பு நாடாக ரஷியா இருந்து வருகிறது. கடந்த 25 ஆண்டுகளில், அமெரிக்காவுடனான உறவு அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து செல்லப்பட்டபோதிலும், ரஷியாவுடன் நட்பு பாராட்டி வருகிறோம்.


ரஷியாவுடன் நெருக்கமான உறவை பேணும் இந்தியா:


குறிப்பாக, உக்ரைன் விவகாரத்தில் இந்தியா எடுத்த நிலைபாடு இரு நாட்டு உறவின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது. உக்ரைனுக்கு எதிராக படையெடுத்த ரஷியாவை கண்டிக்கும் விதமாக ஐநா அரங்கில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளின் அழுத்தத்திற்கு மத்தியிலும் ரஷியாவுக்கு எதிரான நிலைபாட்டை எடுக்காமல் இந்தியா நடுநிலை வகித்தது.


அதேபோல, ரஷியாவுக்கு எதிராக மேற்குவலக நாடுகள் பல விதமான பொருளாதார தடை விதித்தபோதிலும், ரஷியாவுடன் இந்தியா தொடர் வர்த்தகம் மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரத்தில், இந்தியாவை தங்கள் பக்கம் இழுக்க மேற்குலக நாடுகளும் அமெரிக்காவும் மேற்கொண்ட முயற்சிகள் யாவும் பலன் அளிக்கவில்லை.


ரஷியாவுடன் சுமூகமான உறவை பேணி வரும் பிரதமர் மோடி பற்றி ரஷிய அதிபர் புதின் பல முறை பாராட்டி பேசியிருக்கிறார். அதன் தொடர்ச்சியாக, தற்போது புதின் பேசியிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 


மோடியை பாராட்டி தள்ளிய ரஷிய அதிபர் புதின்:


ரஷிய மொழியில் புதின் பேசியிருப்பது செயற்கை நுண்ணறிவு மூலம் மொழி பெயர்க்கப்பட்டு, அவர் இந்தியில் பேசுவது போன்ற
வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், இந்திய - ரஷிய உறவு குறித்து புதின் பேசியுள்ளார். பிரதமர் மோடியை பாராட்டி பேசிய அவர், "ரஷியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகள் அனைத்து திசைகளிலும் தொடர்ந்து வளர்ந்து வருகின்றன. 


இதற்கு முக்கிய காரணம் பிரதமர் மோடியின் கொள்கை. தேசிய பாதுகாப்பு குறித்த பிரதமர் மோடியின் கடுமையான நிலைப்பாட்டை நினைத்து  பல சமயங்களில் ஆச்சரியப்பட்டிருக்கிறேன். உண்மையைச் சொல்வதென்றால், இந்திய மக்களின் தேசிய நலன்களைப் பாதுகாப்பதில் அவரது கடுமையான நிலைப்பாடு சில சமயங்களில் எனக்கு ஆச்சரியத்தை தந்துள்ளது.


 






ஒரு முடிவை எடுக்க பிரதமர் மோடி கட்டாயப்படுத்தப்படுவார் அல்லது மிரட்டப்படுவார் என்று கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. இந்தியா மற்றும் இந்திய மக்களின் தேசிய நலனுக்கு எதிராக மோடியை மிரட்டவோ, அச்சுறுத்தவோ அல்லது எந்த நடவடிக்கையும் அல்லது முடிவையும் எடுக்க நிர்ப்பந்திக்க முடியும் என்று என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை" என்றார்.