யாரும் எதிர்பாராத சூழலில், இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் நடத்திய தாக்குதல் இஸ்ரேல் மட்டும் இன்றி உலக நாடுகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஹமாஸ் படையினரின் ராக்கெட் தாக்குதல் இஸ்ரேலை நிலைகுலைய வைத்துள்ளது. அதற்கு பதிலடி அளிக்கும் விதமாக இஸ்ரேல் போரை தொடங்கியுள்ளது.


ஹமாஸ் படையின் தாக்குதலால் அதிர்ந்து போன இஸ்ரேல்:


வான் வழியாக மட்டும் இன்றி நிலம் வழியாகவும் கடல் வழியாகவும் பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என இந்திய மக்களுக்கு இந்திய மற்றும் பாலஸ்தீன தூதரகங்கள் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. 


இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இஸ்ரேலில் 18,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியுள்ளனர். அங்கு சிக்கியிருக்கும் பெரும்பாலான இந்தியர்கள் ஐடி வேலை செய்பவர்களும் மாணவர்களே ஆவர். மேலும், இஸ்ரேலில் சுமார் 85,000 இந்திய வம்சாவளி யூதர்கள் உள்ளனர்.


இவர்களின் பாதுகாப்பு நிலை குறித்து தகவல் வெளியிட்டுள்ள இந்திய தூதரகம், "இஸ்ரேலின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இஸ்ரேலில் உள்ள அனைத்து இந்திய குடிமக்களும் கவனமுடன் இருக்குமாறும், உள்ளூர் அதிகாரிகளின் ஆலோசனைப்படி பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


தயவு செய்து எச்சரிக்கையுடன் செயல்படவும், தேவை இன்றி வெளியே செல்வதை தவிர்க்கவும், பாதுகாப்பான இடங்களில் இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்" என குறிப்பிட்டுள்ளது.


இஸ்ரேலில் சிக்கிய மாநிலங்களவை உறுப்பினர்:


இந்த நிலையில், பரபரப்பை கிளப்பும் வகையில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. மேகாலயா மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் வான்வீரோய் கர்லூகியும், அவரது குடும்ப உறுப்பினர்களும் இஸ்ரேலில் சிக்கியுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேகாலயாவில் ஆளுங்கட்சியாக உள்ள தேசிய மக்கள் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருக்கும் இவர், ஆன்மீக பயணமாக இஸ்ரேல் சென்றுள்ளார்.


இவருடன், வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த 24 பேர் பெத்லகேம் நகரில் மாட்டி கொண்டுள்ளனர். இந்தியாவுக்கு இவர்களை பாதுகாப்பாக அழைத்து வருவது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகத்தை தொடர்பு கொண்டுள்ளதாக மேகாலயா முதலமைச்சரும் தேசிய மக்கள் கட்சியின் தலைவருமான கான்ராட் சங்மா தகவல் தெரிவித்துள்ளார்.


இஸ்ரேலில் இருந்து அவர்களை எகிப்துக்கு அழைத்து செல்ல இந்திய தூதரகம் முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே, மிசோரம் மற்றும் மணிப்பூரில் இருந்து யூத மக்கள் அதிக அளவில் இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர். அதேபோல, அவசர உதவிக்கு தொடர்பு கொள்வதற்கு எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதையும் படிக்க: Israel Palestine History: ரத்தத்தால் எழுதப்பட்ட வரலாறு! இஸ்ரேல் - பாலஸ்தீன மோதலின் பின்னணி என்ன? - ஓர் பார்வை