Israel Palestine Conflict in Tamil: இஸ்ரேல், பாலஸ்தீனத்திற்கு இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இஸ்ரேல், பாலஸ்தீன விவகாரமே மூன்றாம் உலக போருக்கு வழிவகுக்கும் என்றெல்லாம் சொல்வது உண்டு. காஷ்மீர் போல், நீண்ட காலமாகியும் தீர்க்க முடியாத சிக்கலுக்குரிய பிரச்னையாக இருந்து வருகிறது.


பாலஸ்தீன குழுக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதும் இஸ்ரேல் மீது பாலஸ்தீன குழுக்கள் தாக்குதல் நடத்துவதும் தொடர் கதையாகி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், தெற்கு இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதலை நடத்திய ஹமாஸ் படைகள் மீது போரை தொடங்கியுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். ஏற்கனவே, உக்ரைன் போர் உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், இஸ்ரேல் அறிவித்துள்ள போர் உலக நாடுகளை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. 


இந்த விவகாரம் நமக்குள் பல கேள்விகளை எழுப்பிய வண்ணம் உள்ளது. இஸ்ரேல், பாலஸ்தீனத்திற்கு இடையே உள்ள பிரச்னை என்ன? ஹமாஸ் படைக்கும் பாலஸ்தீனத்திற்கும் என்ன தொடர்பு? இது சிக்குலுக்கு உரிய பிரச்சினையாக இருக்க காரணம் என்ன? போன்றவற்றை அறிய வேண்டுமானால், வரலாற்றை திரும்பி பார்ப்பது அவசியமாகிறது. 


100 ஆண்டுகளாக தீர்க்கப்படாத விவகாரம்:


மிக சிக்கலான இடத்தில் அமைந்திருப்பதே இஸ்ரேல், பாலஸ்தீன பிரச்னைக்கு முக்கிய காரணமாகும். எகிப்து, ஜோர்டான், சிரியா என சுற்றியும் எதிரி நாடுகள் அமைந்திருப்பதே இஸ்ரேல் விவகாரத்தை தீர்க்க முடியாததற்கு முக்கிய காரணம் என புவிசார் அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், இவர்களுக்குள் பகை உருவாவதற்கு காரணம் என்ன? சற்று வரலாற்றை திரும்பி பார்ப்போம்.


மத்திய கிழக்கில் உள்ள பாலஸ்தீன பகுதி, ஒட்டோமான் பேரரசின் ஒரு பகுதியாக இருந்து வந்தது. முதல் உலக போரின்போது பாலஸ்தீன பகுதியை ஆண்டு வந்த ஆட்சியாளர் தோல்வி அடைந்ததை தொடர்ந்து, அந்த பகுதியை ஆங்கிலேயர்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். 


பாலஸ்தீனத்தில் யூதர்கள் சிறுபான்மையினராகவும் அரபு மக்கள் பெரும்பான்மையினராகவும் வாழ்ந்து வந்தனர். பாலஸ்தீன பகுதியில் யூதர்களுக்கு என தனி நாட்டை நிறுவ வேண்டும் என சர்வதேச அளவில் அழுத்தம் எழுந்ததை தொடர்ந்து, அந்த பொறுப்பு ஆங்கிலேயர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த சூழலில்தான், யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் பிரச்னை வெடித்தது. யூதர்கள் கேட்கும் பகுதி அவர்களின் தாயகமாக இருந்தாலும், தனி நாடு கேட்பதற்கு பாலஸ்தீன அரேபியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.


பதற்றமான சூழலுக்கு மத்தியில், 1920களிலிருந்து 1940கள் வரை, பாலஸ்தீனத்திற்கு செல்லும் யூதர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தது. இரண்டாம் உலக போரில் யூதர்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டனர். ஐரோப்பாவில் கடும் ஒடுக்குமுறைக்கு உள்ளான அவர்கள், அங்கிருந்து தப்பித்து, தாய்நாடு வேண்டி பாலஸ்தீனத்தில் தஞ்சம் அடைந்தனர்.


இப்படிப்பட்ட சூழலில், யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையே வன்முறை சம்பவங்கள் அதிகரித்தது. ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்தன. கடந்த 1947ஆம் ஆண்டு, இந்த பிரச்சினைக்கு தீர்வு காண ஐக்கிய நாடுகள், திட்டம் ஒன்றை முன்வைத்தது. அதன்படி, பாலஸ்தீனத்தை இரண்டாக பிரிக்க முடிவு செய்யப்பட்டது. யூதர்களுக்கு தனியாக ஒரு நாடும், அரேபியர்களுக்கு தனியாக ஒரு நாடும் ஜெருசலேத்தை சர்வதேச நகரமாக அறிவிக்கவும் யோசனை முன்வைத்து ஐக்கிய நாடுகள் வாக்களித்தது. இந்த திட்டத்தை யூதத் தலைவர்கள் ஏற்று கொண்ட போதிலும், அரபு தரப்பு ஏற்று கொள்ளவில்லை. இதனால், இதை இன்று வரை அமல்படுத்த முடியவில்லை.


பிரச்னையுடன் பிறந்த இஸ்ரேல்:


கடந்த 1948ஆம் ஆண்டு, இந்த பிரச்னையை தீர்க்க முடியாத காரணத்தால் ஆங்கிலேயர்கள், பாலஸ்தீனத்தில் இருந்து வெளியேறினர். அப்போதுதான், இஸ்ரேல் என்ற தனிநாடு பிறந்துவிட்டதாக யூதத் தலைவர்கள் அறிவித்தனர். இதற்கு பாலஸ்தீனர்கள் பலர் எதிர்ப்பு தெரிவிக்க, போர் தொடங்கியது. அண்டை அரபு நாடுகளை சேர்ந்த துருப்புகள் படையெடுக்க தொடங்கின.


போர் தொடங்கி ஒரே ஆண்டில், போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. அந்த சமயத்தில், பாலஸ்தீனத்தின் பெரும்பாலான பகுதிகள், இஸ்ரேல் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. அண்டை நாடான ஜோர்டான் ஆக்கிரமித்த பகுதி வெஸ்ட் பேங்க் என்றும் எகிப்து ஆக்கிரமித்த பகுதி காசா என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. ஜெருசலேம் நகரம் இரண்டாக பிரிக்கப்பட்டது. 


மேற்கு ஜெருசலேம், இஸ்ரேலியப் படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. ஜோர்டான் நாட்டு படைகளின் கட்டுப்பாட்டில் கிழக்கு ஜெருசலேம் கொண்டு வரப்பட்டது. இந்த பிரச்னையில் சிக்கியுள்ள ஒவ்வொரு தரப்பும் எதிர் தரப்பு மீது பழி சுமத்தி வருவதால் அமைதி ஒப்பந்தம் எட்டப்படவே இல்லை. இதனால், பல போர்கள் வெடித்து பல காலமாக மோதல் நிலவி வருகிறது. கடந்த 1967இல் நடந்த மற்றொரு போரில், கிழக்கு ஜெருசலேம், வெஸ்ட் பேங்க் உள்ளிட்ட பகுதிகளை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. சிரிய கோலன் குன்றுகள், காசா மற்றும் எகிப்திய சினாய் தீபகற்பத்தின் பெரும்பகுதியையும் இஸ்ரேல் ஆக்கிரமித்தது.


பெரும்பாலான பாலஸ்தீனியர்களும் அவர்களது சந்ததியினரும் காசா மற்றும் வெஸ்ட் பேங்க், அண்டை நாடான ஜோர்டான், சிரியா மற்றும் லெபனானில் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். பாலஸ்தீனியர்களையோ அல்லது அவர்களது சந்ததியினரையோ தங்கள் வீடுகளுக்குத் திரும்ப இஸ்ரேல் அனுமதிப்பதில்லை. அப்படி அனுமதித்தால், அரேபியர்களின் எண்ணிக்கை அதிகமாகி யூத நாடாக இருக்கும் இஸ்ரேலின் இருப்புக்கு ஆபத்தாகிவிடும் என இஸ்ரேல் கூறுகிறது.


வெஸ்ட் பேங்க் இன்னும் இஸ்ரேல் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. காசாவில் இருந்து இஸ்ரேல் வெளியேற்றப்பட்ட பிறகும், அதை ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியாக ஐநா கருதிவருகிறது. ஜெருசலேம் முழுவதையும் இஸ்ரேல் தங்கள் தலைநகராக கூறி வரும் நிலையில், எதிர்காலத்தில் அமைய உள்ள பாலஸ்தீன நாட்டின் தலைநகராக கிழக்கு ஜெருசலேம் இருக்கும் என பாலஸ்தீனியர்கள் கூறி வருகின்றனர். இந்த நகரத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்த ஒரு சில நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. கடந்த 50 ஆண்டுகளில் 6 லட்சத்திற்கும் அதிகமான யூதர்கள் வசிக்கும் இந்தப் பகுதிகளில் இஸ்ரேல் குடியிருப்புகளைக் கட்டியுள்ளது.


ஆனால், சர்வதேச சட்டத்தின்படி, இந்த குடியிருப்புகள் சட்டவிரோதமாக கட்டப்பட்டவையாக கருதப்படுகிறது. ஐநா பாதுகாப்பு கவுன்சில், பிரிட்டன் ஆகியவற்றின் நிலைபாடும் இதுதான். ஆனால், ஜெருசலேம் முழுவதும் தங்களின் பகுதி என இஸ்ரேல் கூறி வருகிறது.


தற்போதைய நிலவரம் என்ன?


கிழக்கு ஜெருசலேம், காசா, வெஸ்ட் பேங்க் ஆகிய பகுதிகளில் வாழும் இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையேதான் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வருகிறது. இஸ்ரேலுடன் பலமுறை போரிட்ட பாலஸ்தீன போராளிக் குழுவான ஹமாஸ் காஸாவை ஆட்சி செய்து வருகிறது. ஹமாஸுக்கு ஆயுதங்கள் செல்வதைத் தடுக்க இஸ்ரேலும் எகிப்தும் காஸாவின் எல்லைகளில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.


காசா மற்றும் வெஸ்ட் பேங்கில் உள்ள பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலின் நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகளால் தாங்கள் பாதிக்கப்படுவதாகக் கூறுகின்றனர். பாலஸ்தீன வன்முறையில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மட்டுமே இப்படி செயல்படுவதாக இஸ்ரேல் விளக்கம் அளிக்கிறது. அதேபோல, கிழக்கு ஜெருசலேமில் உள்ள சில பாலஸ்தீனிய குடும்பங்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றுவோம் என இஸ்ரேல் கூறி வருவது மேலும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.


பிரச்னைக்கு தீர்வுதான் என்ன?


இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் பல விவகாரங்களில் மாற்று கருத்து நிலவி வருகிறது. பாலஸ்தீனிய அகதிகளின் எதிர்காலம் என்ன? என்பது பெரும் பிரச்னையாக இருந்து வருகிறது. வெஸ்ட் பேங்கில் யூதர்கள் கட்டிய சட்டவிரோத குடியிருப்புகள் அப்படியே இருக்குமா? அல்லது அகற்றப்படுமா? என்பதில் இரு தரப்புக்கும் மாற்று கருத்து நிலவுகிறது.


ஜெருசலத்தை பகிர்ந்து கொள்வதிலும் இரு தரப்பும் உடன்படவில்லை. அனைத்து பிரச்னைகளிலும் மிக சிக்குலுக்குரிய பிரச்னை என்றால், இஸ்ரேலுக்கு அருகில் பாலஸ்தீன நாடு உருவாக்கப்படுமா? இல்லையா? என்பதுதான். கடந்த 25 ஆண்டுகளுக்கு மேல் அமைதி பேச்சுவார்த்தை நடந்தி வருகிறது. ஆனால், யாராலும் பிரச்னையை தீர்க்க முடியவில்லை.