இஸ்ரேல், ஹமாஸ் படையினருக்கு இடையே நடந்து வரும் போர் உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த பிரச்னை நீண்ட காலமாக தொடர்ந்து வரும் நிலையில், தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் நடத்திய திடீர் தாக்குதல் உச்சக்கட்ட போருக்கு வழிவகுத்துள்ளது.
இந்த விவகாரத்தில் இஸ்ரேலுக்கு இந்தியா ஆதரவு தெரிவித்தபோதிலும், பாலஸ்தீனம் உருவாக வேண்டும் என்ற கொள்கையில் எந்த வித மாற்றமும் இல்லை என தெளிவுப்படுத்தியுள்ளது. இப்படிப்பட்ட சூழலில், இந்தியா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையேயான உறவை பற்றி பார்ப்பது அவசியம்.
இந்தியா - இஸ்ரேல் உறவு:
இஸ்ரேல் உருவான உடனேயே, அந்நாட்டை இந்தியா அங்கீகரித்த போதிலும், பல ஆண்டு காலம் இரு நாடுகளுக்கிடையே தூதரக ரீதியான உறவு இல்லாமல் இருந்தது. கடந்த 1992ஆம் ஆண்டு, தூதரக உறவு தொடங்கப்பட்ட பிறகுதான், தூதரகங்கள் திறக்கப்பட்டது. அதற்கு பிறகும் கூட, நெருக்கமான உறவு இருந்துவிடவில்லை.
கடந்த 2014ஆம் ஆண்டு, பாஜக ஆட்சி அமைத்த பிறகுதான், இரு நாடுகளும் நெருக்கமான உறவை பேண தொடங்கியது. வரலாற்றில் முதல்முறையாக இந்திய பிரதமர் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டார். கடந்த 2017ஆம் ஆண்டு, ஜூலை மாதம், டெல் அவிவ் நகருக்கு பிரதமர் மோடி கொண்டார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் பாலஸ்தீன நகருக்கு செல்லாமல் அவர் தவிர்த்ததுதான்.
பாலஸ்தீன விவகாரத்தை பொறுத்தவரையில், நேரு காலம் தொடங்கி தற்போது வரையில் பாலஸ்தீனம் உருவாக வேண்டும் என்ற நிலைபாட்டில்தான் இந்தியா உள்ளது. உலகளவில் சக்தி வாய்ந்த நாடாக இந்தியா இருப்பதால் இந்த பிரச்னையில் மத்தியஸ்தராக செயல்படும் என இந்தியாவுக்கான பாலஸ்தீன தூதர் அட்னான் முஹம்மது ஜாபர் அபு அல்-ஹைஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
"பாலஸ்தீனியர்களுக்கு உதவ இந்தியா செல்வாக்கு பெற்றுள்ளது"
நமது ஆங்கில செய்தி இணையதளமான ஏபிபி லைவ்-க்கு இந்தியாவுக்கான பாலஸ்தீன தூதர் அளித்த பிரத்யேக பேட்டியில், இதுகுறித்து விரிவாக பேசியுள்ளார். "மேற்கு ஆசியாவில் உள்ள மற்ற நட்பு நாடுகளுடன் ஒத்துழைக்கவும், காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களால் தண்ணீர், உணவு மற்றும் மருந்து பற்றாக்குறையை எதிர்கொள்ளும் பாலஸ்தீனியர்களுக்கு உதவி செய்யவும் இந்தியா செல்வாக்கு பெற்றுள்ளது.
சக்தி வாய்ந்த நாடாக இருப்பதால் மத்தியஸ்தராக இந்தியா செயல்படும் பாலஸ்தீனம் நம்பிக்கை வைத்துள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு குறிப்பாக வேண்டுகோள் விடுக்கிறேன். எங்களின் நிலத்தை பறிப்பதை அவர்கள் நிறுத்த வேண்டும். எகிப்து, கத்தார், துருக்கி ஆகிய நாடுகளுடன் இந்தியா கைகோர்த்து காசாவில் வசிக்கும் 2.2 மில்லியன் பாலஸ்தீனியர்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க வேண்டும்.
காசாவில் குழந்தைகள் உட்பட 1,900 பேரை இஸ்ரேலியப் படைகள் கொன்றதால் அங்கு போர் நிறுத்தத்திற்கு உடனடியாக இந்தியா அழைப்பு விடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் இந்தியா ஒரு பங்கை வகிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். பிரதமர் (நரேந்திர மோடி) இருவராலும் (இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம்) மதிக்கப்படுகிறார். தயவு செய்து ஏதாவது செய்யுமாறு அவரிடம் கேட்டுக் கொள்கிறேன். குறைந்த பட்சம் இந்த நேரத்தில் (பிரதமர் மோடி) போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டும் அல்லது காஸாவில் வாழும் 2.2 மில்லியன் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க வேண்டும். உதவிகளை அனுப்புவதில் இந்தியாவால் அவர்களுடன் எளிதில் ஒத்துழைக்க வழங்க முடியும்.
மின்சாரம், தண்ணீர், உணவு, எரிபொருள், மருந்து இன்றி பாலஸ்தீயர்கள் வாழ்கின்றனர். இது போர்க்குற்றம். உக்ரைன் போரின் போது ரஷியா போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக அவர்கள் (மேற்குலக நாடுகள்) கூறினர். ஆனால், இஸ்ரேல் என வரும்போது, அது தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டும் என சொல்கிறது. இதுதான் இந்த உலக நாடுகள் இரட்டை வேடம்.
"பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ், பிரதமர் மோடியிடம் விரைவில் பேச உள்ளார்"
இந்த நெருக்கடியில் இந்திய அரசும், பிரதமரும் நல்ல பங்களிப்பை ஆற்றுவார்கள் என்று நம்புகிறேன். 1948 ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் காலத்திலிருந்து பாலஸ்தீன மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி என்ன, பாலஸ்தீன மக்கள் சந்தித்து வரும் பேரழிவு என்ன என்பதை நீங்கள் (இந்தியா) அறிவீர்கள். குறிப்பாக, இந்தியாவுக்கு இது ஒரு வாய்ப்பு.
இதை செய்தாக வேண்டும். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும். ஏனெனில், நீங்கள் அவரை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று அவரை விட்டுவிட்டால், பாலஸ்தீனத்தில் படுகொலை செய்ய அவருக்கு சுதந்திரம் கிடைக்கும். உண்மையில், அவரே அதற்கு அழைப்பு விடுத்துள்ளார். எனவே, நாங்கள் இந்தியாவை ஒரு மத்தியஸ்தராக பார்க்கிறோம். எங்கள் நிலத்தை கைப்பற்றுவதை (இஸ்ரேல்) தடுத்து நிறுத்தி வெஸ்ட் பேங்கில் வசிக்கும் 2.2 மில்லியன் பாலஸ்தீனியர்களுக்கு மனிதாபிமான உதவிகளை அனுப்ப வேண்டும்" என்றார்.
இது தொடர்பாக பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ், பிரதமர் மோடியிடம் விரைவில் பேச உள்ளார் என இந்தியாவுக்கான பாலஸ்தீன தூதர் சூசகமாக கூறியுள்ளார். இதற்கிடையே, பாலஸ்தீன அதிபர் அப்பாஸ், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கனை ஜோர்டான் தலைநகர் அம்மானில் சந்தித்து பேசியுள்ளார்.
காசாவில் இருந்து தெற்கை நோக்கி 10 லட்சம் பாலஸ்தீனய மக்களை கட்டாயப்படுத்தி வெளியேற்ற வேண்டும் என இஸ்ரேல் உத்தரவிட்டிருப்பதை நிராகரிப்பதாக பிளிங்கனுடனான சந்திப்பின்போது அப்பாஸ் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில், இரு நாட்டு கொள்கையை தீவிரமாக ஆதரித்து வரும் இந்தியா, "இஸ்ரேலும் பாலஸ்தீனமும் பிரச்னைக்குரிய பகுதியை பகிர்ந்து கொள்ள வேண்டும்" என்றும் "நேரடி பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட, வரையறுக்கப்பட்ட எல்லைகளுடன் அமைதியான முறையில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும்" என்றும் கோரிக்கை விடுத்து வருகிறது.
"ஆக்கிரமிப்பை எதிர்க்கும் எவரையும் பயங்கரவாதி என கூற முடியாது"
சமீபத்தில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, இதுபற்றி பேசுகையில், "இந்த விஷயத்தில் எங்கள் கொள்கை நீண்ட காலமாக நிலையானதாக உள்ளது. இறையாண்மை மிக்க, சுதந்திரமான, தனித்து இயங்குவதற்கு திறன் படைத்த பாலஸ்தீனம் அமைவதற்கு நேரடி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கு இந்தியா எப்போதும் ஆதரவு தந்து வருகிறது. பாதுகாப்பான, அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுக்குள், இஸ்ரேலுடன் அமைதியுடன் பாலஸ்தீனம் இருக்க வேண்டும்" என்றார்.
இதை குறிப்பிட்டு பேசிய இந்தியாவுக்கான பாலஸ்தீன தூதர், "சர்வதேச சட்டத்தின்படி, ஆக்கிரமிப்பின் கீழ் வாழும் மக்களுக்கு தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ள உரிமை உண்டு. கடந்த 75 ஆண்டுகளாக பாலஸ்தீனியர்கள் இந்தப் பிரச்னையை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த அநீதியான உலகில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கடந்த 1948 ஆம் ஆண்டு, தாயகத்தில் இருந்து பாலஸ்தீன அரபு மக்கள் நிரந்தரமாக வெளியேற்றப்பட்டது வரை செல்ல விரும்பவில்லை.
ஆனால், 1967 ஆம் ஆண்டு, ஜெருசலேம் உள்பட வெஸ்ட் பேங்க் மற்றும் காஸாவை இஸ்ரேல் ஆக்கிரமித்தது வரை செல்ல விரும்புகிறேன். அப்போதிருந்து, நாம் உலகின் மிக மோசமான ஆக்கிரமிப்பின் கீழ் வாழ்கிறோம். பாலஸ்தீன மக்களுக்கு இஸ்ரேலியர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை உலக நாடுகள் பார்க்கவில்லை. காசா எந்த நம்பிக்கையும் இல்லாத திறந்தவெளி சிறையாக உள்ளது. இப்போது இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடந்தவுடன். முழு உலகமும் அனுதாபம் கொள்கிறது. ஆக்கிரமிப்பை எதிர்க்கும் எவரையும் பயங்கரவாதி என கூற முடியாது.
ஆக்கிரமிப்பவன்தான் பயங்கரவாதி. ஆக்கிரமிப்பவன் உலகின் மிகப்பெரிய பயங்கரவாதி . ஆக்கிரமிப்பின் கீழ் இருப்பவர்கள் பயங்கரவாதிகள் அல்ல. இப்போதே தீர்வு கிடைக்காவிடில், எதிர்காலத்தில் இதுபோன்ற போர்களை அதிகம் சந்திக்க நேரிடும். இனியும் நாம் இப்படி வாழ முடியாது. ஆக்கிரமிப்பின் கீழ் நாம் எப்போதும் வாழ முடியாது.
தங்களின் லட்சியத்துக்காக போராட பாலஸ்தீன மக்களுக்கு முழு உரிமை உள்ளது. அதற்கு ஆதரவாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. இதுவரை 800 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில், இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு சட்ட விரோதம் என கூறப்பட்டுள்ளது. பாலஸ்தீன பிரச்னைக்கு சர்வதேச சமூகம் கூடிய விரைவில் தீர்வு காண வேண்டும். இல்லையேல் இன்னும் பல போர்கள். இன்னும் பல படுகொலைகளைக் காண்போம். இதை நிறுத்த வேண்டும்" என்றார்.
ஹமாஸ் அமைப்பு குறித்து பேசிய அவர், "இஸ்ரேலுடன் சமாதான தீர்வு எட்டப்படும் போது, ஹமாஸ் அமைப்பு அரசியல் கட்சியாக மாறும்.
ஒஸ்லோ ஒப்பந்தம் போடும் போது, பாலஸ்தீனத்தின் 22 நிலபரப்பை பெற்றிருந்தோம். கடந்த 1999இல் நாங்கள் அண்டை வீட்டாராக சுதந்திரமாக, இஸ்ரேலியர்களுடன் சகோதரர்களாக வாழ்வோம் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அவர்கள் அமைதியான மனிதராக இருந்த ராபினைக் கொன்றனர். நெதன்யாகு வந்ததில் இருந்து. இது அவரது ஆறாவது அரசு. மக்களைக் கொன்று குவித்த இரு நாட்டுத் தீர்வான ஒஸ்லோ ஒப்பந்தத்தை ஒன்னும் இல்லாமல் ஆக்கிவிட்டார். அவரது ஆட்சியில் பல போர்கள் நடந்துள்ளன" என்றார்.
கடந்த 1993இல், செப்டம்பர் 13ஆம் தேதி, இடைக்கால சுயாதீன அரசை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் இஸ்ரேலிய பிரதமர் யிட்சாக் ராபின், பாலஸ்தீன விடுதலை அமைப்பின் (பிஎல்ஓ) தலைவர் மஹ்மூத் அப்பாஸ் கையெழுத்திட்டனர். இதற்கு பெயர்தான், ஒஸ்லோ ஒப்பந்தம் ஆகும்.
இதையும் படிக்க: Israel Palestine History: ரத்தத்தால் எழுதப்பட்ட வரலாறு! இஸ்ரேல் - பாலஸ்தீன மோதலின் பின்னணி என்ன? - ஓர் பார்வை