ரஷியா, உக்ரைன் நாடுகளுக்குடையே இடையேயான போர் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையேயான போர் உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர், 5,000 ராக்கெட்டுகளை கொண்டு திடீர் தாக்குதல் நடத்தியது.


உச்சக்கட்ட பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள இஸ்ரேல் போர்:


இதில், 1,300 பேர் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களில் பெரும்பான்மையானோர் அப்பாவி மக்கள் ஆவார். இதற்கிடையே, ஹமாஸ் அமைப்பை சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள், ஆயுதம் ஏந்தி கொண்டு காசாவில் இருந்து இஸ்ரேலுக்குள் நுழைந்து கடும் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். 


இதற்கு பதில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் தொடுத்து வருகிறது. காசாவில் குண்டு மழை வீசி வருகிறது. இதில், 1,900 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அதில், பெரும்பான்மையானோர் அப்பாவி மக்கள் ஆவர். 600 குழந்தைகள் கொல்லப்பட்டிருப்பதாக பாலஸ்தீன சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. 


அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்குலக நாடுகளும், இந்தியாவும் இந்த போரில், இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான், சவுதி அரேபியா, ஈராக் உள்ளிட்ட நாடுகள் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.


"சுதந்திர பாலஸ்தீனிய அரசை உருவாக்க வேண்டும்"


இந்த நிலையில், ரஷியா யாருக்கு ஆதரவு தர போகிறது என்பது தொடர் கேள்விகளை எழுப்பி வந்தது. தற்போது, அதற்கு விடை கிடைத்துள்ளது. ஹமாஸ் அமைப்பினர் உடனான மோதலில் தன்னை தற்காத்து கொள்வதற்கான உரிமை இஸ்ரேலுக்கு இருப்பதாக ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.  


ஆனால், சுதந்திரமான பாலஸ்தீன நாட்டை உருவாக்குவதும் அதன் தலைநகராக கிழக்கு ஜெருசலேத்தை அறிவிப்பதுமே பிரச்னையை தீர்க்க வழி என அவர் கூறியுள்ளார். கிர்கிஸ்தானில் நேற்று நடைபெற்ற காமன்வெல்த் சுதந்திர நாடுகளின் (CIS) உச்சி மாநாட்டில் பேசிய அவர், "பாலஸ்தீன - இஸ்ரேல் மோதலுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் கொள்கையிலேயே ரஷியா தொடர்கிறது. இதற்கு வேறு வழி இல்லை.


பேச்சுவார்த்தையின் இலக்கானது ஐக்கிய நாடுகள் சபையின் இரு-நாட்டு கொள்கையை செயல்படுத்துவதாக இருக்க வேண்டும். கிழக்கு ஜெருசலேமை தலைநகராக கொண்ட ஒரு சுதந்திர பாலஸ்தீனிய அரசை உருவாக்க வேண்டும். இஸ்ரேலுடன் அமைதி மற்றும் பாதுகாப்பில் இணைந்துள்ளது. அமைதியுடனும் பாதுகாப்புடனும் இஸ்ரேல் இருக்க வேண்டும்.


முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிருகத்தனமான தாக்குதலுக்கு இஸ்ரேல் உள்ளாகியுள்ளது. நிச்சயமாக, அது தன்னை தற்காத்துக் கொள்ள உரிமை உண்டு. அதன் அமைதியான இருப்பை உறுதி செய்யும் உரிமை அதற்கு உண்டு. இப்பிரச்சினையை அமைதியான முறையில் தீர்த்து வைப்பது மிகவும் முக்கியம்" என்றார்.