இந்தியாவுடன் ஆப்கானிஸ்தானின் அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகளைத் தொடர விரும்புவதாக தலிபான் தலைவர் ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானெக்ஸாய் கூறினார். 


கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி ஆப்கானிஸ்தானில் அஷ்ரப் கனி அரசு கவிழ்ந்த பிறகு காபூலில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, குழுவின் செய்தித் தொடர்பாளர்கள் சுஹைல் ஷாஹீன் மற்றும் ஜபியுல்லா முஜாஹித் ஆகியோர் பாகிஸ்தானின் ஊடகங்களுடன் இந்தியாவுடனான உறவுகள் குறித்து பேசினர். இருப்பினும், மற்ற நாடுகளுடனான உறவுகள் குறித்து அறிக்கை வெளியிட்ட முதல் மூத்த தலைவர் ஸ்டானெக்ஸாய் ஆவார். 


ஸ்டானெக்ஸாய் பேட்டியில்,  “இந்த துணைக் கண்டத்திற்கு இந்தியா மிகவும் முக்கியமானது. கடந்த காலங்களைப் போலவே இந்தியாவுடனான எங்கள் கலாச்சார, பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளைத் தொடர விரும்புகிறோம். பாகிஸ்தான் மூலம் இந்தியாவுடனான வர்த்தகம் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. இந்தியாவுடன், விமான வழித்தடங்கள் வழியாக வர்த்தகமும் திறந்திருக்கும்” என்று அவர் கூறினார். 


இருப்பினும், இந்தியா வழியாக வர்த்தகம் இருவழியாக இருக்க வேண்டுமா என்று அவர் கூறவில்லை. ஆப்கானிஸ்தான் வர்த்தகர்கள் தங்கள் பொருட்களை இந்தியாவிற்கு அனுப்ப பாகிஸ்தான் அனுமதித்துள்ளது. ஆனால் இந்திய பொருட்களை பாகிஸ்தான் மண் வழியாக ஆப்கானிஸ்தானுக்கு கொண்டு செல்ல அனுமதித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்ந்து பேசிய  ஸ்டானெக்ஸாய், “இந்தியாவுடனான எங்கள் அரசியல், பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கிறோம், இந்த உறவுகள் தொடர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இது தொடர்பாக இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் எதிர்நோக்குகிறோம்” என்றும் தெரிவித்தார்.




ஸ்டானெக்ஸாய், துர்க்மெனிஸ்தானுடனான ஆப்கானிஸ்தானின் உறவுகளைப் பற்றி பேசும் போது, துர்க்மெனிஸ்தான்-ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான்-இந்தியா (TAPI) எரிவாயு பைப்லைன் திட்டத்தை குறிப்பிட்டார். ஒரு அரசு அமைந்தவுடன் இந்த முயற்சியை நிறுத்துவதில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க தலிபான் வேலை செய்யும் என்றார். ஈரானுடனான உறவுகளைப் பற்றி பேசுகையில், இந்தியாவால் உருவாக்கப்பட்ட சாபஹார் துறைமுகத்தையும் குறிப்பிட்டார். அத்துடன் வர்த்தகத்திற்கான அதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.


மேலும், ஸ்டானெக்ஸாய் சீனா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் ரஷ்யாவுடனான உறவுகள் பற்றியும் பேசினார். மில்லியன் கணக்கான ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக பாகிஸ்தானுக்கு நன்றி தெரிவித்த அவர், பாகிஸ்தானுடன் ஆப்கானிஸ்தான் சகோதரத்துவ உறவை வைத்திருக்க விரும்புவதாகவும் கூறினார்.


ஸ்டானெக்ஸாயின் பேச்சுகளை முக்கியமாக எடுத்துக்கொள்ளக்கூடாது என  இந்தியத் தரப்பு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. காபூலில் இருந்து தூதர், அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் உள்ளிட்ட 200 பேர் வெளியேறியதால்,  ஸ்டானெக்ஸாயின் கருத்துகளுக்கு இந்திய அதிகாரிகளிடமிருந்து எந்த பதிலும் இல்லை வரவில்லை.


தலிபான்களின் பேச்சுவார்த்தை குழுவில் முதலிடமாகவும், கட்டாரை தளமாகக் கொண்ட தலைவர்களிடையே ஒட்டுமொத்தமாக மூன்றாவது இடமாகவும் கருதப்படும் ஸ்டானெக்ஸாய், 1980 களின் தொடக்கத்தில் டேராடூனில் உள்ள இந்திய இராணுவ அகாடமியில் (ஐஎம்ஏ) பல ஆண்டுகள் பயிற்சி பெற்றவர் ஆவார். காபூலில் முடிவெடுக்கும் ஒரு பகுதியாக அவர் இல்லை என்றாலும், வெளிநாட்டு உறவுகளில் அவர் முக்கிய பங்கு வகிப்பதாக தோன்றுகிறது என்று ஆப்கானிஸ்தான் வளர்ச்சி குறித்த அறிந்தவர்கள் சிலர் கூறினர்.


ஆப்கான் பெண்களுக்கு ‛வொர்க் ப்ரம் ஹோம்’ வழங்கிய தலிபான்கள்!