பாகிஸ்தானின் சட்டமன்ற உறுப்பினர் மரியம் அவுரங்கசீப், பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது அரசியல் கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) தனது சொந்த குடிமக்களிடம் பொய் செய்திகளை கொடுத்ததை அம்பலப்படுத்தினார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி பிரதமராக மூன்று ஆண்டுகளை நிறைவு செய்தார், மேலும் அவரது சாதனைகளை வெளிப்படுத்த, பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI), பாகிஸ்தான் நாட்டின் செழிப்பை சித்தரிக்கும் பல ப்ரவுச்சர்களை அச்சிட்டு வெளியிட்டது. அதனை தொடர்ந்து, இம்ரான் கானின் கட்சி ப்ரவுச்சர்களில் பயன்படுத்தப்பட்ட படங்கள், இந்திய இணையதளங்களிலிருந்து திருடப்பட்டவை என்று மரியம் அவுரங்கசீப் சுட்டிக்காட்டினார்.



ஆகஸ்ட் 26 ம் தேதி மரியம் அவுரங்கசீப் தனது ட்விட்டர் பக்கத்தில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடந்த மூன்று வருடங்களில் தனது சாதனைகளை வெளிப்படுத்த இந்திய இணையதளத்தில் இருந்து திருடப்பட்ட படங்களைப் பயன்படுத்தியதை ட்வீட்டாக வெளியிட்டிருந்தார். ''இம்ரான் கானை பாகிஸ்தானின் மீட்பராக காட்சிப்படுத்துவதற்காக தகவல் அமைச்சகத்தின் பல கோடி நலத்திட்டங்கள் என, இந்திய இணையதளங்களில் இருந்து திருடப்பட்ட படங்களை பயன்படுத்தி இருக்கிறார்கள்." என்று மரியம் கூறினார்.


பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (N) செய்தித் தொடர்பாளரான மரியம் அவுரங்கசீப் மேலும் இம்ரான் கான் குறித்து, "இம்ரான் கானின் ஆட்சியில் பாகிஸ்தானில் எந்த வளர்ச்சியும் இல்லை, எனவே அவர் போலியாக, வளர்ச்சி மற்றும் செழிப்பைக் காட்ட இந்திய இணையதளங்களில் இருந்து படங்களைத் திருட வேண்டியிருக்கிறது." என்றார்



இதனிடையே, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், மொபைல் போன்களின் பயன்பாடு அதிகரித்ததால் தான் பாலியல் குற்றங்கள் அதிகரிக்கின்றன என்று ஒரு வித்யாசமான கூற்றை கூறிஇருந்தார். லாகூர் கிரேட்டர் இக்பால் பார்க் பகுதியில் உள்ள மினார்-இ-பாகிஸ்தான் அருகே டிக்டாக் செய்துகொண்டிருந்த பெண்ணை நூற்றுக்கணக்கானோர் சேர்ந்து தாக்கிய சமயத்தில்தான் அவரது இந்த வினோத கருத்துக்கள் வந்தன.


உள்ளூர் காவல் நிலையத்தில் அந்த பெண் அளித்த புகாரில், பாகிஸ்தானின் சுதந்திர தினத்தன்று சுமார் 400 பேர் கொண்ட கும்பல் தன்னையும் தன் நண்பர்களையும் தாக்கியதாகவும், துன்புறுத்தியதாகவும் அவர் குற்றம் சாட்டினார். கூட்டம் தன்னை தூக்கி எறிந்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார். "நான் நிர்வாணமாக்கப்பட்டேன், என் ஆடைகள் கிழிக்கப்பட்டன," என்று அவர் கூறினார்.


லாகூர் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த இம்ரான் கான், இந்த விவகாரம் கவலை அளிக்கிறது. "மொபைல் போன்களின் தவறான பயன்பாடு காரணமாக பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. சீரத்-உன்-நபி (PBUH) இன் உயர்ந்த குணங்களைப் பற்றி நம் குழந்தைகளுக்கு நாம் கற்பிக்க வேண்டும்," என்று அவர் மேலும் கூறினார்.