கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தனது தாய் மண்ணின் மகிமையை சிலாகித்துப் பேசியுள்ளார். மேலும், இணைய சுதந்திரத்துக்கு சீனா போன்ற நாடுகள் போடும் முட்டுக்கட்டை கவலையளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் உள்ள கூகுள் தலைமையகத்தில் பிபிசிக்காக உலகப் பிரபலங்கள் என்ற தலைப்பிலான தொடரில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, "நீங்கள் கடைசியாக எப்போது அழுதீர்கள்” என்ற கேள்விக்கு,  “கொரோனா பரவலின்போது உலகம் முழுவதும் பிணங்கள் அடங்கிய லாரிகளைப் பார்த்தேன். ஆயிரக்கணக்கான மக்கள் செத்து மடிவதை பார்த்தேன். இந்தியா, இரண்டாம் அலையின் பிடியில் சிக்கித் தவித்ததை பார்த்தபோது கலங்கினேன். நான் அமெரிக்காவின் குடிமகனாக இருக்கலாம். ஆனால் இந்தியாவின் வேர் என்னுள் ஆழமாக இருக்கிறது. நான் இன்று அடைந்துள்ள இந்த நிலைக்கு இந்தியாவுக்கு மிகப்பெரிய பங்குள்ளது. 


தொழில்நுட்பம் நாளுக்கொரு வளர்ச்சி காணும் இந்தக் காலகட்டத்தில் செயற்கை நுண்ணறிவு மீது மனிதகுலம் மிகுந்த ஆர்வம் காட்டுகிறது. எதிர்காலத்தில் இதன் அடிப்படையிலான தொழில்நுட்பங்கள் அபரிமித வளர்ச்சி காணும். நெருப்பைப் போல், மின்சாரத்தைப் போல் செயற்கை நுண்ணறிவும் முக்கியமானது, மிகவும் ஆழமானது.
மனித குலம் எப்போதும் வளர்ச்சியடைந்து செயல்படும்போது, அதனுடன் கலந்த மிக ஆழமான தொழில்நுட்பமாக செயற்கை நுண்ணறிவு இருக்கும்.




சுதந்திரமான வெளிப்படையான இணையம் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. சீனாவில் எங்களின் எந்த ஒரு தயாரிப்பையும் கொண்டு சேர்க்க முடியவில்லை.


இன்னும் சில நாடுகள் தகவல்களின் வேகத்தை கட்டுப்படுத்துகின்றன. எந்த நோக்கத்துக்காக 'இன்டர்நெட்' மாடல் உருவாக்கப்பட்டதோ அதை தங்களுக்கு ஆதாயமாக அந்த நாடுகள் அடிக்கடி பயன்படுத்திக் கொள்கின்றன.வேறு சில நாடுகளில், பேச்சுரிமை குறித்து விவாதங்கள் நடந்து வருகின்றன. எந்த வகையிலான பேச்சுகளுக்கு அனுமதி வழங்கப்படவேண்டும் என அரசாங்கத்தால் முடிவு செய்யப்படுகின்றன. இணைய சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டியது அவசியம்'' இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


இந்தியாவில், ஐடி சட்டத்தின் பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டு சமூக வலைதளங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ள சூழலில் சுந்தர் பிச்சையின் இந்த கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.




வரி செலுத்தாமல் கூகுள் நிறுவனம் தவிர்த்ததாக எழுந்த சர்ச்சை தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அவர்,  "இந்த உலகிலேயே நாங்கள் தான் அதிகம் வரி செலுத்துகிறோம். எக்களின் வரி பங்களிப்பு 20% ஆக இருக்கிறது. எங்களின் வரிப்பணத்தில் பெரும்பாலான பங்களிப்பு அமெரிக்காவில் தான் செலுத்தப்படுகிறது. நாங்கள் எங்கு தோன்றினோமோ எங்கே வளர்ந்தோமோ எங்கு எங்களின் புதுமையான பல படைப்புகளை உருவாக்கினோமோ அங்குதான் எங்களின் வரியின் பெரும்பகுதியை செலுத்துகிறோம். 


பொருளாதார ஒத்துழைப்புக்கும் வளர்ச்சிக்குமான உலக நாடுகளின் கூட்டமைப்பில் (OECD) உள்ள நாடுகளுடன் வரிகளை ஒதுக்கீடு செய்வதில் சரியான நடைமுறை என்பது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளோம். இதை ஒரு தனிப்பட்ட நிறுவனம் மட்டுமே தீர்த்துவிட முடியாது என நம்புகிறேன்" என்று கூறினார்.


புற்றுநோய் பாதிக்கப்பட்ட நாயுடன் கடைசி டிரெக்கிங் பயணம்- வைரலாகும் படங்கள் !