இந்தியாவில் பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடி மற்றும் அவரது உறவினரான மெகுல் சோக்சி ஆகிய இருவரும் மும்பை நகரில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 14 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடனைப்பெற்று, பிறகு பணமோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியது சி.பி.ஐ, இந்நிலையில் இருவரும் வெளிநாட்டிற்கு தப்பியோடினர். அதில் மெகுல் சோக்சி ஆன்டிகுவா நாட்டில் தஞ்சம் அடைந்திருப்பதாக தகவல் வெளியானது.
கடந்த மே மாதம் 26ஆம் தேதி மெகுல் சோக்சி ஆன்டிகுவா நாட்டிலிருந்து படகு மூலம் தீவு நாடான டொமினிகாவிற்கு தப்பி சென்றுள்ளார். அந்த சமயத்தில் காவல்துறையினர் அவரை பிடித்துள்ளனர். அதன்பின்னர் அவர் கண் சிவந்து இருப்பது போன்றும், கையில் இரத்த காயங்களுடன் இருக்கும் நிழற்படங்களும் வெளியானது. இதுகுறித்து டொமினிக்கா அரசு வெளியிட்ட பதிவில் 'டொமினிகாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்ததற்காக மெகுல் சோக்சி தடுத்து வைக்கப்பட்டார். இவர் மீது இன்டர்போல் நிறுவனமும் ரெட் அலர்ட் வழங்கியுள்ளது. ஆன்டிகுவாவின் அதிகாரிகளுடன் டொமினிகா தொடர்புகொண்டுள்ளது. அவரை ஆன்டிகுவாவுக்கு திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்' என்று குறிப்பிட்டிருந்தது.
இதனைத் தொடந்து மெகுல் சோக்சி டொமினிகா நாட்டு சிறையில் இருந்து வந்தார். இந்நிலையில் தற்போது அவருக்கு மருத்துவ காரணங்களுக்காக டொமினிகா நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மருத்துவ சிகிச்சைக்காக அவர் ஆண்டிகுவா நாட்டிற்கு சென்று சிகிச்சை பெற்று வர டொமினிகா நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
முன்னதாக சிபிஐ மற்றும் அமலாக்கதுறை விசாரணைக்கு ஆஜராகுமாறு மெகுல் சோக்சிக்கு சம்மன் அனுப்பியிருந்தனர். எனினும் அவர் ஆஜராகவில்லை. இதனைத் தொடர்ந்து அவர் ஆன்டிகுவாவில் இருப்பது தெரிந்த உடன் அவரை இந்தியாவிற்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்து வந்தது. எனினும் ஆன்டிகுவா நாட்டு உடன் உரிய ஒப்பந்தம் எட்டப்படாததால் அவரை இந்தியாவிற்கு கொண்டு வருவதில் சிக்கல் நீடித்தது. இந்தச் சூழலில் அவர் ஆன்டிகுவா நாட்டிலிருந்து தப்பி டொமினிகா சென்று அங்கிருந்து கியூபா செல்ல திட்டமிட்டிருந்தார். அந்த சமயத்தில் அவர் காவல்துறையினரிடம் சிக்கியுள்ளார்.
மேலும் படிக்க: புற்றுநோய் பாதிக்கப்பட்ட நாயுடன் கடைசி டிரெக்கிங் பயணம்- வைரலாகும் படங்கள் !