பொதுவாக வீட்டில் செல்ல பிராணிகள் வளர்ப்பவர்கள் அதை தங்களுடைய குழந்தைகள் போல் பார்த்து கொள்வது வழக்கம். அதுவும் ஒரு நாயாக இருந்துவிட்டால் அதை உரிமையாளர்கள் வளர்க்கும் விதமே சற்று வித்தியாசமாக இருக்கும். தங்களுடைய செல்ல பிராணிகளுடன் நேரத்தை செலவிடுவதை உரிமையாளர்கள் எப்போதும் விரும்புவார்கள். அப்படி ஒருவர் புற்றுநோய் பாதித்த நாய் ஒன்றை கடைசியாக டிரெக்கிங் அழைத்து சென்று மகிழ்ச்சி படுத்தியுள்ளார். 


கார்லோஸ் ஃபிரஸ்கோ என்ற நபர் கடந்த 10 ஆண்டுகளாக மாண்டி என்ற ஒரு லாப்டரடார் நாயை வளர்த்து வந்துள்ளார். அந்த நாய்க்கு சில மாதங்களுக்கு முன்பாக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து மாண்டிக்கு புற்றுநோய் சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த சிகிச்சையில் சற்று குணமடைந்தது. எனினும் அந்த புற்று நோய் சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் வர தொடங்கியது. 


 



இதனால் 10 ஆண்டுகள் வாழ்ந்த அந்த நாயின் இறுதி காலம் நெருங்கியது. இந்த தருணத்தில் நோய் காரணமாக சோர்ந்து கிடந்த தன்னுடைய நாயை டிரெக்கிங் கூட்டி செல்ல கார்லோஸ் திட்டமிட்டுள்ளார். மாண்டியால் நோய் பாதிப்பு காரணமாக நடக்க முடியாது என்பதால் மலைகளில் தள்ளும் வகையில் ஒரு வண்டியை ஏற்பாடு செய்தார். அந்த வண்டியில் தன்னுடைய நாய் மாண்டியை அழைத்து சென்றுள்ளார். 


 



இது குறித்து அவர் ஒரு ஆங்கில செய்தி ஊடகத்திற்கு,”என்னுடைய நாய்க்கு இரத்த புற்றுநோய் ஏற்பட்டது. முதலில் மருத்துவர்கள் தந்த சிகிச்சைக்கு அது நல்ல ஒத்துழைப்பு தந்தது. எனினும் மீண்டும் புற்றுநோய் வர தொடங்கியது. இதனால் அது தன்னுடைய இறுதி நாட்களை எண்ண ஆரம்பித்தது. இந்த சமயத்தில் என்னுடைய மாண்டியை கூட்டி கொண்டு நான் ஒரு டிரெக்கிங் பயணம் மேற்கொண்டேன். அப்போது வழி நெடுகிலும் என்னுடன் வந்த சிலர் அந்த வண்டையை தள்ளியதுடன் மாண்டியிடம் விளையாடி மகிழ்ந்தனர்” எனத் தெரிவித்துள்ளார். 


 



இது தொடர்பாக படங்களை முகநூலில் ஒருவர் பதிவிட்டுள்ளார். அந்தப் படத்துடன் இந்த நாயின் கதையும் பதிவிட்டுள்ளார். இதை பார்த்து பலரும் வியந்து தங்களுடைய உணர்ச்சிப்பூர்வமான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்த நாய் கடந்த சில நாட்களுக்கு முன்பாக உயிரிழந்தது. இந்த சோக செய்தி ஒரு பக்கம் இருந்தாலும் தன்னுடைய நாயுடன் கடைசியாக சென்ற பயணங்களை நினைத்து கார்லோஸ் உணர்ச்சி பெருக்கில் உள்ளார். தன்னுடைய நாயை கடைசி காலத்தில் டிரெக்கிங் கூட்டி சென்று மகிழ்ச்சிப்படுத்திய இவரின் நல்ல உள்ளத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். அத்துடன் நாய் பிரியர்களுக்கு இந்தச் செயல் மிகவும் உணர்ச்சி போங்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது. 


மேலும் படிக்க: இன்னலில் ஹைதி : அதிபர் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டார் - இடைக்கால அதிபர் தகவல்