உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் அச்சுறுத்தி தான் வருகிறது. கொரோனா தொற்று உடன் வேறு சில நோய்களும் வந்து மக்களை மிகவும் அச்சப்படுத்தி வருகின்றன. அத்துடன் அவ்வப்போது மருத்துவமனைகளில் ஏற்படும் தீ விபத்துகளும் நோயாளிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. ஏனென்றால் தற்போது உலகெங்கும் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அங்கு சிறிய தீ ஏற்பட்டாலும் அது பலரின் உயிருக்கு ஆபத்தானதாக அமைந்து விடுகிறது.
இந்நிலையில் ஈராகின் நஸ்ரியா பகுதியில் அமைந்துள்ள அல்-ஹூசேன் மருத்துவமனையில் நேற்று திடீரென தீ பற்றி கொண்டது. இந்த பயங்கரமான தீ விபத்தில் சிக்கி இதுவரை 52 பேர் உயிரிழந்தனர். மேலும் 22 பேர் வரை தீ காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகமாகலாம் என்று கருதப்படுகிறது. இந்த தீ விபத்து தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், மருத்துவமனையின் கொரோனா வார்டிற்கு அருகே வைக்கப்பட்டிருந்த ஆக்சிஜன் சிலிண்டர்கள் வெடித்து தீ ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே தீ விபத்தில் பலியானவர்களின் உறவினர்கள் மருத்துவமனை அருகே கடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அங்கு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர அந்நாட்டு அரசு அவசர நிலையை பிரகடன படுத்தியுள்ளது. மேலும் இம்மருத்துவமனை உரிமையாளரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈராக் நாட்டில் ஏற்கெனவே கடந்த ஏப்ரல் மாதத்தில் இதேபோன்று கொரோனா வார்டில் ஒரு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் சிக்கி அப்போது 82 பேர் உயிரிழந்தனர். அங்கும் கொரோனா சிகிச்சைக்காக வைக்கப்பட்டிருந்த ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து தீ விபத்து நிகழ்ந்தது.
அந்த சமயத்தில் அந்நாட்டு மக்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதாவது அரசு முறையாக ஆக்சிஜன் சிலிண்டரை பாதுகாப்பு செய்யாமல் வைத்துள்ளது என பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளில் அரசு அலட்சியம் காட்டி வருகின்றது என்று பலரும் குற்றம் சாட்டினர். ஈராக் நாட்டில் தற்போது வரை 1.4 மில்லியன் பேர் கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் அங்கு கொரோனா நோய் தொற்றுக்கு இதுவரை 17 ஆயிரம் பேர் உயிரிழந்ததாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த மார்ச் மாதம் முதல் அங்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 4 மாதங்களில் வெறும் 1 சதவிகித ஈராக் மக்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவும் மிகவும் குறைவான அளவே என்று அந்நாட்டு மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். ஒரு பக்கம் மக்களின் குற்றச்சாட்டு மற்றொரு புறம் தீ விபத்துகள் என ஈராக் அரசுக்கு பெரிய நெருக்கடி எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: புற்றுநோய் பாதிக்கப்பட்ட நாயுடன் கடைசி டிரெக்கிங் பயணம்- வைரலாகும் படங்கள் !