வட அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு ஹைதி. இந்த நாட்டில் தற்போது கடந்த சில ஆண்டுகளாக பொருளாதார சூழல் மற்றும் உள்நாட்டு கலவரம் ஆகியவற்றின் காரணமாக அந்த நாடு மோசமான சூழலில் சிக்கித் தவித்து வருகிறது. இதன் காரணமாக, அந்த நாட்டைச் சேர்ந்த பலரும் அண்டை நாடுகளுக்கு சட்டவிரோதமாக குடி பெயர்ந்து வருகின்றனர்.
40 பேர் மரணம்:
இந்த சூழலில், 80க்கும் மேற்பட்ட ஹைதியைச் சேர்ந்த மக்களை ஏற்றிக் கொண்டு டர்க் மற்றும் கைகோஸ் தீவுகளுக்கு படகு ஒன்று சென்றது. அந்த தீவுகளுக்கு குடிபெயர்வதற்காக மக்கள் சென்று கொண்டிருந்தனர். ஆனால், படகு நடுக்கடலில் சென்ற கொண்டிருந்தபோது தீடீரென படகில் தீப்பிடித்தது.
இதனால், படகில் இருந்தவர்கள் பதற்றத்திற்கு ஆளாகினர். பலரும் தண்ணீருக்குள் குதித்து தங்களை காப்பாற்றிக் கொள்ள நினைத்தனர். படகில் பயணித்தவர்களில் 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஹைதி கடலோர படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து 41 பேரை மீட்டனர். மீட்கப்பட்டவர்களில் பலருக்கும் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. உள்நாட்டில் மோசமான சூழல் இருப்பதால் வேறு இடத்திற்கு குடிபெயர்ந்தவர்கள் படகு தீப்பிடித்ததில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்டை நாடுகளுக்குச் செல்லும் மக்கள்:
ஹைதி நாட்டில் கடந்த சில மாதங்களாக பொருளாதார மற்றும் சமூக சூழல் வேதனை அளிக்கும் விதமாக அமைந்துள்ளது. குறிப்பாக, கடந்த சில மாதங்களாக வன்முறை அளவுக்கு அதிகமாக காணப்படுகிறது. எல்லைப்பகுதிகளில் பாதுகாப்பு குளறுபடிகள் காரணமாக புலம்பெயர்ந்து செல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகளவில் காணப்படுகிறது. ஹைதியில் இருந்து அண்டை நாடுகளுக்கு படகில் தப்பிச் செல்பவர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டு வருவதாகவும், குறிப்பாக நடப்பாண்டில் மட்டும் ஹைதியைச் சேர்ந்த 86 ஆயிரம் பேர் அண்டை நாடுகளுக்கு குடிபெயர்ந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்த நாட்டின் புதிய பிரதமர் கேரி கோனைல் பதவியேற்ற பிறகு நாட்டின் பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு கலவரத்தை கட்டுப்படுத்துவதற்காக ஏராளமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Joe Biden: ஆத்தாடி..! மனைவி என நினைத்து வேறொரு பெண்ணை முத்தமிட முயன்ற ஜோ பைடன் - வலுக்கும் எதிர்ப்பு
மேலும் படிக்க:UK Riots: பிரிட்டனின் லீட்ஸ் நகரத்தில் பேருந்தில் தீ.. குழந்தைகள், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல்!