கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு கோடிகளில் சம்பளத்தை கொட்டி கொடுப்பதாக வெளியான தகவல் பலரையும் வாயை பிளக்க வைத்துள்ளது. 


ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்க்கும் மென்பொறியாளர்கள் பல லட்சங்களில் அதிகம் சம்பளம் வாங்குவார்கள் என பொதுவாக கூறப்படுகிறது. இதனால் வரன் தேடுவோர் முதலில் எதிர்பார்ப்பது ஐடி மாப்பிள்ளையைத்தான். ஐ.டி. வேலை பார்த்தால் கை நிறைய சம்பளம் கிடைக்கும் என கூறப்படுவதும் உண்டு. ஆனால் ஐ.டி. துறையில் வேலை பார்த்தால் லட்சக்கணக்கில் இல்லை, கோடிகளில் சம்பளம் கொடுப்போம் என்பதை கூகுள் வெளிப்படுத்தியுள்ளது. 


தற்போது, கூகுள் நிறுவனத்தின் பணியாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் விவரம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி கூகுள் நிறுவனத்தில் பணியாளர்கள் ஓராண்டுக்கு ரூ.2.30 கோடியில் இருந்து ரூ.5.8 கோடி ரூபாய் வரை வருமானம் பெறுகின்றனர். குறிப்பாக மென்பொறியாளர்கள்தான் அதிகம் சம்பளம் வாங்கும் ஊழியர்களாக உள்ளனர். கடந்த ஆண்டில் கூகுள் நிறுவனத்தின் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட சம்பள விவரத்தில் மென்பொறியாளர்கள் மட்டும் ஆண்டுக்கு ரூ.5 கோடிக்கு மேல் ஊதியம் பெற்றுள்ளனர். 


அமெரிக்காவின் தலைமை அலுவலகத்தில் உள்ள 12,000 பணியாளர்களின் பட்டியலில் மென்பொறியாளர்கள், பிசினஸ் அனலிஸ்ட், விற்பனை அதிகாரிகள், பிற பிரிவு ஊழியர்களின் சம்பளம் லட்சங்களில் உள்ளது. இவர்களுக்கு மாத ஊதியம் மட்டும் இல்லாமல், போனஸ், நிறுவனத்தின் பங்குகளின் ஒரு குறிப்பிட்ட தொகை என அதையும் சேர்த்து கூகுள் வழங்கியுள்ளது. இதனால் அவர்களின் ஆண்டு வருமானம் கோடிகளில் கொட்டுகிறது. 


உதாரணமாக மென்பொறியாளர்கள் ரூ.5.90 கோடியும், பொறியியல் மேலாளர் மற்றும் விற்பனை அதிகாரிகள் ரூ.3 கோடிக்கு அதிகமாகவும், கார்ப்பரேட் சட்ட ஆலோசகர் ரூ.2.62 கோடியும், விற்பனை திட்ட அதிகாரி ரூ.2.62 கோடியும், அரசாங்க விவகாரங்கள் மற்றும் பொது கொள்கை அதிகாரிகள் ரூ.2.56 கோடியும், ஆய்வு விஞ்ஞானிகள் ரூ.2.53 கோடியும், திட்ட மேலாளர்  ரூ.2.46 கோடியும் சம்பளமாக பெற்றுள்ளனர் என தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இது அமெரிக்காவில் உள்ள கூகுள் நிறுவனத்தில் மட்டும் பணிபுரியும் ஊழியர்களின் சம்பள விவரம் மட்டுமே. கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் மற்றும் பிற நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பள பட்டியல் வெளியாகவில்லை. 


மேலும் படிக்க:Exclusive : ’எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு ஆன்டி இந்தியா எனப் பெயர் வைத்திருக்கலாம்’- வானதி சீனிவாசன் பதிலடி!


Rice Ban: அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்த மத்திய அரசு.. அமெரிக்காவில் அலைமோதும் இந்தியர்கள்.. அதிர்ச்சி!